(நா.தனுஜா)
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது முறையான வருமானமீட்டல் வழிமுறைகளை உள்ளடக்கியதாக அமையவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியம், அண்மையில் ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன்பின்னர் மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என்று அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் மற்றும் நிதியியல் கொள்கைகள் குறித்தும், பெரும்பாகப்பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜுலை 25 - ஓகஸ்ட் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளர், எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான சந்திப்புக்களின் பின்னர் நாட்டின் நிலைவரம் தொடர்பில் பீற்றர் ப்ரூவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் மூலம் பாராட்டத்தக்க பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொடர்ந்து மூன்று காலாண்டுகள் விரிவாக்கத்தைப் பதிவுசெய்ததுடன், இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகப் பதிவானது.
பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கினால் இலக்கிடப்பட்ட 5 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. 2024 இன் முதல் அரையாண்டில் வெளிநாட்டுக்கையிருப்பு 1.2 பில்லியன் டொலர்களால் உயர்வடைந்ததன் மூலம் அதன் மொத்தப்பெறுமதி 5.6 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.
இக்காலப்பகுதியில் நிதியியல் வருமானத்திரட்சியும் உயர்வடைந்தது. இதிலிருந்து முன்நோக்கிப் பயணிப்பதற்கு இந்த முன்னேற்றங்கள் அனைத்து மக்களுக்கும் உகந்த சிறந்த வாழ்க்கைத்தரமாக நிலைமாற்றமடையவேண்டும்.
தற்போது அடையப்பட்டிருக்கும் பொருளாதார முன்னேற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை நிலையான பாதையில் நகர்த்திச்செல்வதற்கும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதும், ஏற்கனவே உடன்பட்ட சகல கடப்பாடுகளையும் உரியவாறு நிறைவேற்றுவதும் இன்றியமையாததாகும்.
அதேபோன்று பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தக்கவைப்பதற்கும், கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கும் நிதியியல் வருமானத்தை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது முறையான வருமானமீட்டல் வழிமுறைகளை உள்ளடக்கியதாக அமையவேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு மோட்டார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையானது 2025 இல் வருமானத்தை ஈட்டித்தருவதற்குப் பங்களிப்புச்செய்யும்.
வரி நிர்வாகம் சார்ந்த மறுசீரமைப்புக்களை மேலும் மேம்படுத்தமுடியும். குறிப்பாக 2025 ஏப்ரல் மாதமளவில் ஏற்றுமதியாளர்களுக்கு பெறுமதிசேர் வரி மீளளிக்கப்படக்கூடிய முறையான திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். எரிபொருட்களின் விலைகளை செலவினத்தை ஈடுசெய்யக்கூடிய மட்டத்திலேயே தொடர்ந்து பேணவேண்டியது அவசியமாகும். அதேவேளை இலக்கிடப்பட்ட நிதி உதவிகள் மூலம் வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுநிதி நிர்வாக சட்டம் மற்றும் பொதுக்கடன் நிர்வாக சட்டம் என்பன நிதியியல் ஒழுக்கத்தை உறுதிசெய்வதிலும், கடன்களை முறையான நிர்வகிப்பதிலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மிகமுக்கிய சட்டங்களாகும்.
அடுத்ததாக பணவீக்கம் மிகச்சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. நாணயக்கொள்கையானது பணவீக்க எதிர்பார்க்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமையவேண்டும்.
மேலும், கடன் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் பாராட்டத்தகுந்த முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது. உள்ளகக் கடன்மறுசீரமைப்பு பூர்த்திசெய்யப்பட்டமை, உத்தியோகபூர்வக் கடன்வழங்குனர் குழு மற்றும் சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி என்பவற்றுடன் கடன்மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை என்பன மிகமுக்கிய அடைவுகளாகும்.
அதேவேளை கடன் ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை என்பவற்றை மீளுறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஏனைய சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மூன்றாம் கட்ட மீளாய்வின்போது உரியவாறு மதிப்பீடு செய்யப்படும்.
அண்மையில் ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன்பின்னர் மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM