பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தேர்தல் விதிகளை மீறுவதாக அமையாது - சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டு

Published By: Digital Desk 3

01 Aug, 2024 | 08:34 AM
image

(நா.தனுஜா)

அரசியலமைப்பின் பிரகாரம் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு எனவும், அத்தகு நியமனத்தை மேற்கொள்வது தேர்தல் விதிகளை மீறுவதாக அமையாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் சிரேஷ்ட சட்டத்தரணிகள், பதில் பொலிஸ்மா அதிபரின்கீழ் எவ்வித இடையூறுகளுமின்றி தேர்தலை நடாத்தமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கும் பின்னணியில், தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இடைக்காலத்தடையுத்தரவை மையப்படுத்தி ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் உயர்நீதிமன்றம் கோரியிருக்கும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராகக் களமிறங்கவிருப்பதால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதிலிருந்து தான் விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். அதேவேளை அரசியலமைப்பின் 106 ஆவது உறுப்புரையின்கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பொலிஸ்மா அதிபரிடமிருந்து பொலிஸாரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும், மாறாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாக அச்சேவைகளைப் பெறமுடியாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி, அவ்வாறெனில் தேர்தல் காலத்தில் பொலிஸ்மா அதிபர் இல்லாவிடின் எவ்வாறு சேவைகளைப் பெறமுடியும்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துத் தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமீர் ஃபாயிஸ், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டாலும், தற்போது அவர் பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிப்பது தேர்தல் விதிகளுக்கு முரணானதாக அமையாது எனக் குறிப்பிட்டார். பதில் பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், எனவே அந்த அரசியலமைப்புக் கடமையை அவர் நிறைவேற்றுவது தேர்தல் விதிகளை மீறுவதாகாது எனவும்  விளக்கமளித்தார். அத்தோடு பதில் பொலிஸ்மா அதிபரொருவர் நியமிக்கப்படும் பட்சத்தில், பொலிஸ்மா அதிபருக்குரிய சகல அதிகாரங்களும் அவருக்கும் (பதில் பொலிஸ்மா அதிபர்) இருக்கும் என்றும், ஆகவே தேர்தலுடன் தொடர்புடைய உத்தரவுகள், ஆவணங்களில் அவரால் கையெழுத்திடமுடியும் என்றும் அமீர் ஃபாயிஸ் தெரிவித்தார்.

இதனுடன் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்திய சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கௌதமன், இயங்குநிலையில் உள்ள அரசாங்கத்தில் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தனது வழமையான கடமைகள், பொறுப்புக்களை நிறைவேற்றலாம் எனவும், பணியிடமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத போதிலும், ஒரு முக்கிய பதவி வெற்றிடம் காணப்படும்போது அதற்குப் பொருத்தமான நபரை நியமிப்பதில் எவ்வித சிக்கல்களும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமித்ததன் பின்னர், 14 நாட்களுக்கு ஒருமுறை அந்நியமனத்தைப் புதுப்பிக்கவேண்டும் என ஜனாதிபதி கூறுவது தவறானது எனத் தெரிவித்த கௌதமன், அரசியலமைப்பின் பிரகாரம் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகக்கூடியவகையில் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கலாம் எனக் குறிப்பிட்டார். அத்தோடு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரொருவரை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிப்பதன் ஊடாக தேர்தலுடன் தொடர்புடைய சகல உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகளையும் அவரால் கையாளமுடியும் என்றும், இலங்கையில் இதற்கு முன்னரும் பொலிஸ்மா அதிபரின்றி தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பம் உண்டு எனவும் சட்டத்தரணி கௌதமன் விளக்கமளித்தார்.

மேலும் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் அவரால் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கமுடியும் எனவும், அவ்வாறு நியமிக்கப்படும் பதில் பொலிஸ்மா அதிபரின்கீழ் தேர்தல் பணிகளை முன்னெடுக்கமுடியும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 11:59:59
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 02...

2025-03-25 11:56:24
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33
news-image

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம்...

2025-03-25 11:12:02
news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் இயங்கிய கசிப்பு...

2025-03-25 11:53:00
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57