ஜமா - திரை விமர்சனம்

31 Jul, 2024 | 05:27 PM
image

தயாரிப்பு : லேர்ன் &  டீச் புரொடக்சன்

நடிகர்கள் : பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் மற்றும் பலர்.

இயக்கம் : பாரி இளவழகன்

மதிப்பீடு : 3/5

மிழ் சமூகத்தில் தர குறைவாக மதிப்பிடப்படும் தெருக்கூத்து எனும் கலையை மையப்படுத்தி, அந்த கலையை தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் கலைஞர்களின் வாழ்வியலை தழுவி, உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் 'ஜமா' எனும் இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை வாசிப்பதற்கும் முன் தெருக்கூத்து கலையை பற்றிய ஒரு சிறு குறிப்பினை தெரிந்து கொள்வது நல்லது. திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் வட பகுதியில் இன்றும் தெருக்கூத்து கலை - வீரியமாகவும், அடர்த்தி குறையாமலும், அடித்தட்டு மக்களின் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.‌

எம்முடைய முன்னோர்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்த போது பொழுதுபோக்கிற்காகவும்.. தாங்கள் கடைப்பிடித்து வாழ்ந்த மேம்பட்ட வாழ்க்கைக்கான பற்றுக்கோட்டினை கலை வடிவில் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலும் உருவாக்கியது தான் தெருக்கூத்து கலை. இந்த கலைக்கு தேவையான உடைகள், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம், ஆபரணங்கள், கதாபாத்திரத்திற்கு ஏற்ற அணிகலன்கள் என ஒவ்வொன்றையும் அவர்களே தெரிவு செய்து, மேடையில் நிகழ்த்து கலைக்கு தயாராகி, மேடை ஏறிய பிறகு நடிப்புடன் மட்டுமல்லாமல் பாடவும் செய்வார்கள். பாடல் வடிவிலும் கதையை எளிமையாகவும், இனிமையாகவும் எடுத்துரைப்பார்கள். அதிலும் கடை கோடியில் உட்கார்ந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு கேட்கும் வகையில் உச்ச ஸ்தாயியில் பாடுவார்கள். அத்துடன் நிகழ்ச்சி நிறைவடையும் வரை ஆற்றல் குறையாமல் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் இந்த கலையை நிகழ்த்துவார்கள். இத்தனை செறிவுமிக்க.. வீரமிக்க- வீரியமிக்க கலை ஈடுபாடு... அந்த காலகட்டத்தில் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இத்தகைய கலை குறிப்பாக மக்களுக்காக மக்களே உருவாக்கிய கலை. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் நலிவடைந்து வருகிறது என்பதுதான் வேதனை.

மீண்டும் விமர்சனத்திற்கு வருவோம்.

ஜமா என்றால் தெருக்கூத்து கலையை நிகழ்த்தும் குழு என பொருள்.‌ கதையின் நாயகனான கல்யாணம் (பாரி இளவழகன்) தனக்கென்று தனியாக ஒரு ஜமாவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அதனை சாத்தியப்படுத்த அவன் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை.

இளவரசன் (ஸ்ரீ கிருஷ்ண தயாள்) தாண்டவம் (சேத்தன்) இருவரும் நண்பர்கள். இளவரசன் ஒரு முறை பூனை (வசந்த் மாரிமுத்து) எனும் தெருக்கூத்து கலைஞனுக்கு உதவி செய்கிறார். அவர் மூலமாகவே தெருக்கூத்து கலை.. அவருக்கு அறிமுகமாகிறது. அந்த கலையின் சகல அம்சங்களும் அவரை ஈர்க்க.. அதன் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டு, அந்தக் கலையின் சகல நுட்பத்தையும் கற்றுக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து ஒரு புள்ளியில் தன் சக கலைஞரான தாண்டவத்துடன் இணைந்து இளவரசன் புதிதாக ஜமா ஒன்றை ஏற்படுத்தி, அதில் தலைவனாகி தெருக்கூத்து கலையில் அர்ஜுனன் வேடத்தை ஏற்று நடிக்கிறார். அவருக்கு பெயரும், புகழும் கிடைக்கிறது. இதனால் சகலமும் தெரிந்த தாண்டவம் இந்த ஜமாவிற்கு தலைமை பொறுப்பை ஏற்க விரும்புகிறார். அதற்கு இளவரசன் மறுப்பு தெரிவிக்க, அது மோதலாக முடிவடைந்து, ஜமாவை விட்டு இளவரசன் வெளியேறுகிறார். அத்துடன் 'இனி ஒருபோதும் கூத்துக் கட்ட மாட்டேன் ' என்று சபதமும் ஏற்கிறார். ஆனால் அவரது வாரிசான கல்யாணம், கூத்துக் கலைஞராக மிளிர வேண்டும் என பெரு விருப்பம் கொண்டிருக்கிறார். இதற்காக தாண்டவத்தை குருவாக ஏற்றுக் கொண்டு, தெருக்கூத்து கலையை கற்கிறார். இதற்கு இளவரசன் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. தாண்டவம் இளவரசனின் வாரிசான கல்யாணம்- எந்த காலகட்டத்திலும் தன்னுடைய தலைமைக்கு எதிராக வந்து விடக்கூடாது என்பதற்காக நுட்பமாக காய் நகர்த்தி கல்யாணத்திற்கு திரௌபதி - குந்தி போன்ற பெண் வேடத்தை ஏற்கச் செய்கிறார்.‌

திரௌபதி வேடத்தை விரும்பி ஏற்று நடித்து, தெருக்கூத்து கலையில் தனக்கென தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளும் கல்யாணத்திற்கு, அவரது தாய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். 'தொடர்ந்து நீ பெண் வேடத்தை ஏற்று நடிப்பதால்.. உனக்கு பெண் தர, பெண் வீட்டார்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்' என தன் ஆதங்கத்தை தெரிவித்து விட்டு திரௌபதி வேடத்தை ஏற்று நடிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த தருணத்தில் தாண்டவத்தின் மகளான ஜெகதாம்பிகா கல்யாணத்தின் மீது காதல் கொள்கிறார். ஜெகதாம்பிகாவின் முடிவினை கல்யாணத்தின் தாய் வரவேற்க, ஜெகதாம்பிகாவின் தந்தையான தாண்டவம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். 

ஒரு புள்ளியில் கல்யாணம், ஜெகதாம்பிகாவின் காதலை ஏற்க மறுக்கிறார். அதற்கு தன் தந்தை தொடங்கிய இந்த ஜமாவிற்கு தலைமை ஏற்று, அர்ஜுனன் வேடம் கட்டி நடிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என காரணமும் சொல்கிறார்.

கல்யாணம், தாண்டவத்தின் ஆதிக்கத்தை எப்படி உடைத்து, அந்த ஜமாவிற்கு தலைவனாகி, அர்ஜுனன் வேடத்தை ஏற்று நடிக்கிறார் என்பதுதான் படத்தின் உச்சகட்ட காட்சி.

தெருக்கூத்து கலையை பற்றிய நுட்பமான கதையை அழகாக விவரித்து ரசிகர்களை அந்த கலை மீதான புரிதலையும் ஏற்படுத்தி, அதன் ஊடாக அந்த கலைஞர்களுக்குள் இருக்கும் மோதலையும் விவரித்திருப்பதில் இயக்குநர் பாரி இளவழகன் வெற்றி பெற்றிருக்கிறார்.

கல்யாணம் எனும் கதையின் நாயக பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாரி இளவழகன் திரௌபதி வேடத்திலும், குந்தி வேடத்திலும், அர்ஜுனன் வேடத்திலும் வித்தியாசமான உடல் மொழியை வெளிப்படுத்தி நேர்த்தியான கலைஞர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

கலைத்துறையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வந்தாலும் நடிகர் சேத்தனுக்கு இந்தப் படத்தில் அற்புதமான வேடம்- அதனை தனக்கேயுரிய அனுபவமிக்க நடிப்பால் நடித்து, ரசிகர்களின் மனதை கவர்கிறார்.‌

ஜகா என்கிற ஜெகதாம்பிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அம்மு அபிராமி - இளமை துள்ளலுடன் பல காட்சிகளில் நடித்திருப்பதால் இளசுகளின் மனசை கவர்கிறார்.

இளவரசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீ கிருஷ்ண தயாள் - தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தி, யார் இவர்? என கவனிக்க வைத்திருக்கிறார்.

பூனை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் வசந்த் மாரிமுத்துவும் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்.

கலைஞர்களைக் கடந்து இசைஞானியின் தேனிசை படத்திற்கு பக்கபலமாகி இருக்கிறது. இயக்குநருக்கு ஒளிப்பதிவாளர் கோபி கிருஷ்ணனும் தன் பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்.

தெருக்கூத்து கலையை பற்றிய விவரணத்தை இப்படி ஜனரஞ்சகமாகவும் பதிவு செய்யலாம் என்று முயற்சித்த பாரி இளவழகன் மற்றும் அவரது குழுவினருக்கு தாராளமாக வாழ்த்துகளை சொல்லலாம்.

அதற்காக படத்தில் குறைகளே இல்லையா? என கேட்டால்... இருக்கிறது. அதனையும் பட்டியலிடலாம். ஆனால் நலிவடைந்து வரும் தமிழர்களின் தொன்மையான கலையான தெருக்கூத்து கலையை முதன்மைப்படுத்தி இருப்பதால் அதனை புறந்தள்ளலாம்.

ஜமா - கமா இல்ல, ஆச்சரிய குறி!

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்