தம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞை ஏதேனும் கிடைத்தால் அமெரிக்கா மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்தத் தயங்க மாட்டோம் என வடகொரிய அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா - வடகொரியா இடையே சூடான நிலை தோன்றியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. மற்றுமொரு பரிசோதனையை விரைவில் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பிவைக்க வொஷிங்டன் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியா பிரச்சினைகளை வலியத் தேடுகிறது என்றும் அந்தப் பிரச்சினையை அமெரிக்கா முடித்துவைக்கும் என்றும் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா விரும்பினால், வடகொரியாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், அதற்கு சீனா சம்மதிக்காவிட்டால் அமெரிக்காவே அதைத் தனியாக எதிர்கொள்ளும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வடகொரியா தனது தன்னிச்சையான போக்கைக் கைவிடவேண்டும் என்றும், இதற்காக இராணுவ நடவடிக்கை உட்படப் பல தீர்வுகளைத் தாம் முன்வைத்திருப்பதாகவும் அதில் வடகொரியா எதை வேண்டுமானாலும் தெரிவுசெய்யலாம் என்றும் சிரியாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல் வடகொரியாவுக்கான ஒரு எச்சரிக்கை மணி என்றும் அமெரிக்க இராஜாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள வடகொரியா, அமெரிக்காவின் எந்தவித ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும், வலுவாகவுள்ள தமது அதிநவீன ஆயுதப் படையினர் அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்கொரியா மட்டுமன்றி, அமெரிக்காவின் பிரதான நகரங்கள் மீதும் அணுவாயுதங்களைப் பிரயோகிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதைக் கண்டித்திருக்கும் தென்கொரிய பதில் ஜனாதிபதி ஹ்வாங் க்யோ ஆன், அமெரிக்காவின் கட்டளைகளைச் செயற்படுத்தத் தயாராகுமாறு அந்நாட்டுப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.