ஜனாதிபதித்தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர்: தமிழர் பிரச்சினையை உலகறியச்செய்வதற்கான களமே தவிர பொதுவேட்பாளருக்கான தோல்வி அல்ல - எஸ்.சிறிதரன்

Published By: Digital Desk 3

01 Aug, 2024 | 09:00 AM
image

(நா.தனுஜா)

தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளை உலகறியச்செய்வதற்கும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருவதற்குமான வாய்ப்பாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமே தவிர, தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகமுடியாத நாட்டில் தமிழர்கள் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் அடையும் தோல்வியைத் தோல்வியாகக் கருதவேண்டியதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

9 ஆவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல்செய்யமுடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

அதன்படி, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதித்தேர்தலில் தமிழர்கள் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளரால் வெல்லமுடியாத போதிலும், சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேசத்திடம் கூறுவதற்கான களமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலின்போது பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கிவிட்டு, பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பான்மையின ஜனாதிபதியுடன் அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை எவ்வாறு முன்னெடுப்பீர்கள்? எனவும், நீங்கள் அவர்களை நிராகரித்து பொதுவேட்பாளரைக் களமிறக்கியதைக் காரணங்காட்டி அவர்கள் பேச்சுவார்த்தைகளை நிராகரித்தால், அதனை எத்தகைய மாற்றுத்திட்டத்தின் ஊடாகக் கையாளுவீர்கள்? எனவும் வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கினால் அவர் வெற்றியீட்டமாட்டார் என்பதும், இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது சாத்தியமில்லை என்பதும் சகலருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அதனைத் தமிழ் பொதுவேட்பாளர் தோல்வியடைந்ததாகக் கருதவேண்டிய அவசியமில்லை என்றார்.

ஏனெனில் 'இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்ந்திருக்கிறது. யுத்த்ததின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. தமிழர் தாயகப்பகுதிகளான வட, கிழக்கு மாகாணங்களில் சமகாலத்தில் பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டு, சிங்கள - பௌத்த மயமாக்கல் மேலோங்கிவருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்குத் தெரியப்படுத்துவதற்கும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரiணையைக் கோருவதற்குமான களமாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதனை முன்னிறுத்தியே தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டும்' என அவர் விளக்கமளித்தார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது சிங்கள வேட்பாளர்களைத் தாம் ஆதரித்ததாகவும், இருப்பினும் அதன்மூலம் தமிழ்மக்கள் விரும்பக்கூடிய தீர்வு எதனையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை எனவும் சுட்டிக்காட்டிய சிறிதரன், அதன் விளைவாகவே இப்போது பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் தேர்தலின் பின்னர் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதைக் காரணங்காட்டி பெரும்பான்மையின ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தமிழ் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்தால் என்ன செய்வீர்கள்? என வினவியபோது, அவ்வாறெனில் எமக்கான தேசத்தைப் பிரித்துத்தருமாறுதான் கோரவேண்டியிருக்கும் எனக்கூறிய சிறிதரன், உலக வரலாற்றில் எந்தவொரு தேசமும் பல வருடகாலப் போராட்டத்தின் பின்னரேயே சுதந்திரத்தையும், உரிமைகளையும் வென்றெடுத்துக்கொண்டது எனவும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06