2023 இல் இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட ஏற்றுமதிகளின் பெறுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் !

Published By: Digital Desk 7

31 Jul, 2024 | 10:27 AM
image

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதிகள் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாதனையானது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் கணிசமான பகுதியை ஹலால் உணவுகள் கொண்டிருப்பதை காண்பிக்கின்றது. இது மொத்தமாக உணவு மற்றும் பானங்கள் ஏற்றுமதியில் 61% ஆனவை என்பதோடு, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 14% ஆக அமைகின்றது.

2023 ஆம் ஆண்டில் 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி கொண்ட இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தேயிலை இதில் முன்னணி வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் இணைந்தவாறு, முன்னேற்றம் கண்டு வரும் பிரிவான பதப்படுத்தப்பட்ட பழங்கள், விதைகள் உள்ளிட்ட ஏனைய உண்ணக்கூடிய தாவரப் பாகங்கள் ஆகியவற்றின் மூலம் 191 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அது மாத்திரமன்றி, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள், சாறுகள், சுவையூட்டிகள், செறிவூட்டிகள், சோஸ்கள், சூப்கள், ஐஸ்கிரீம்கள் ஆகியன கடந்த வருடத்தில் 111 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத் தந்துள்ளன.

2012 மற்றும் 2023 காலப் பகுதியில், இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவு மற்றும் பான  ஏற்றுமதிக்கான வளர்ச்சிப் பாதையானது, தேயிலையை உள்ளடக்காமல் பார்க்கும்போது, 10% கூட்டு வருடாந்த வளர்ச்சி விகிதத்துடன் (CAGR) முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த வலுவான வளர்ச்சி இலங்கையின் ஹலால் தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவையை எடுத்துக் காட்டுகிறது. 

இந்த ஏற்றுமதிக்கான முக்கிய சந்தைகளில் OIC (Organization of Islamic Cooperation - இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) நாடுகள் மற்றும் OIC அல்லாத நாடுகள் ஆகியன உள்ளடங்குகின்றன. துருக்கி, ஈராக், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அசர்பைஜான் ஆகியன OIC சந்தைகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இவை ஒட்டுமொத்தமாக 2023 ஆம் ஆண்டில் 501 மில்லியன் டொலர்களை ஈட்டித் தந்துள்ளன. மறுபுறம், OIC அல்லாத சந்தைகளில் முதல் ஐந்து இடங்களில் ரஷ்யா, அமெரிக்கா, ஜேர்மனி, சீனா, நெதர்லாந்து ஆகியன 382.74 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித் தந்துள்ளன.

இலங்கையின் பொருளாதாரத்தில் காணப்படும் பற்றாக்குறை நிலையை குறைப்பதற்கும், கொடுப்பனவுகளின் சமநிலையை மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய முக்கியமான தேவையை கொள்கை வகுப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவசாயத்தின் நீண்டகால வளர்ச்சியானது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மக்கள் தொகையில் 30% இற்கும் அதிகமானோர் விவசாயத் துறையில் பணியாற்றுகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிச் சாதனையில் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமது தரநிலைகள் மற்றும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதன் மூலம், 2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி கொண்ட உலகளாவிய ஹலால் உணவு மற்றும் பான சந்தையை, இலங்கையின் உணவு வணிக உற்பத்தியாளர்களை அணுகுவதற்கு HAC முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

HAC இன் முயற்சிகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கான அதன் இன்றியமையாத சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில், ஹலால் சான்றிதழுக்கான அதன் செயற்பாடுகளுக்காக, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக (2022-2023) தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தினால் தங்க விருது வழங்கி HAC கௌரவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை தரநிலைகள் நிறுவனம் வழங்கும் இலங்கை தேசிய தர விருதுகளில் Merit விருதை HAC பெற்றுள்ளது. தரம் மற்றும் சிறந்து விளங்குவதற்காக HAC கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது.

இலங்கை தனது ஹலால் சான்றளிக்கக்கூடிய ஏற்றுமதிகளை தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வருவதால், இலங்கையின் விவசாயத் துறையானது உலக சந்தையில் தனக்கென்ற ஒரு நிலையை உறுதிப்படுத்தியவாறு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பங்களிப்பையும் பெறுவதோடு, மேலும் பல பாரிய சாதனைகளை எதிர்பார்த்து பயணிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ‘ஹஜ் - உம்றா’ பயணத்தில்...

2024-09-12 19:54:27
news-image

இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு உள்வாரி...

2024-09-12 13:02:54
news-image

தனியார் துறையில் புத்தாக்க நிதியளித்தல் தீர்வுகள்...

2024-09-12 13:21:44
news-image

மாற்று முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த மட்டக்களப்பில்...

2024-09-12 13:15:45
news-image

குளியாப்பிட்டியாவில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை...

2024-09-11 17:16:20
news-image

சவாலான கால நிலைகளிலிருந்து உங்கள் வீட்டை...

2024-09-10 15:55:46
news-image

3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பதிவுகளுடன்...

2024-09-10 12:23:12
news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54