சட்டத்தரணி கே.வி.ஸ்ரீ கணேஷராஜனால் எழுதப்பட்ட சட்டத்துறை சார்ந்த இரு நூல்களின் வெளியீடு

Published By: Vishnu

31 Jul, 2024 | 04:32 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் சட்டத்துறைக்கு வலுச்சேர்க்கத்தக்க வகையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. ஸ்ரீ கணேஷராஜனினால் எழுதப்பட்ட இரண்டு சட்ட நூல்கள் பிரதம நீதியரசர் உள்ளடங்கலாக நாட்டின் சட்டத்துறைசார் வல்லுனர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (30) வெளியிட்டுவைக்கப்பட்டது.

சட்டத்தரணி கே.வி.ஸ்ரீ கணேஷராஜனினால் எழுதப்பட்டிருக்கும்  Cases and Materials on Law of Trusts (நம்பிக்கைப்பொறுப்பு சட்டத்தின் விடயதானங்களும், தீர்க்கப்பட்ட வழக்குகளும்)  மற்றும் Cases and Materials on Charitable Trusts  (தர்ம நம்பிக்கைப்பொறுப்பு சட்டத்தின் விடயதானங்களும், தீர்க்கப்பட்ட வழக்குகளும்) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவும், சிறப்பு அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டதுடன் இவ்விரு நூல்களின் உள்ளடக்கம் தொடர்பில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே.கனக ஈஸ்வரனால் விளக்கமளிக்கப்பட்டது. அதேவேளை மேற்குறிப்பிட்ட இரு நூல்களும் முறையே நாட்டின் பிரபல சட்டத்தரணிகளான மறைந்த ஏ.ஆர்.சுரேந்திரன் மற்றும் கந்தையா நீலகண்டன் ஆகியோருக்கு நூலின் எழுத்தாளர் கணேஷராஜனால் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

நீதியரசர் எஸ்.துரைராஜா

அதன்படி நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய நீதியரசர் எஸ்.துரைராஜா, நீண்டகால உழைப்பின் பின்னர் இவ்விரு நூல்களும் வெளிவந்துள்ளமையையிட்டு தனது மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் வெளிப்படுத்தினார். அதேபோன்று இந்த இரண்டு நூல்களையும் சமர்ப்பணம் செய்வதற்கு ஏ.ஆர்.சுரேந்திரன் மற்றும் கந்தையா நீலகண்டன் ஆகிய இருவரை தவிர வேறு யாரும் மிகப் பொருத்தமானவர்களாக இருக்கமுடியாது எனக் குறிப்பிட்ட அவர், இந்நூல்களில் அதன் உள்ளடக்கம் சார்ந்த வரலாறு மிகவும் ஆழமாக ஆராயப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும் எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்படி இரு நூல்களின் பிரதிநிதிகள் சட்டத்தரணி கணேஷராஜனால் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. அதேபோன்று ஏ.ஆர்.சுரேந்திரனின் துணைவியார் ரேணுகாதேவி சுரேந்திரன் மற்றும் கந்தையா நீலகண்டனின் துணைவியார் சசிதேவி நீலகண்டன் ஆகியோர் நீதியரசர் துரைராஜாவிடமிருந்து நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன்

அதன்பின்னர் நூலின் உள்ளடக்கம் பற்றி சுருக்கமாக விளக்கமளித்த சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன், இரு புத்தகங்களும் ஆராயும் நம்பிக்கைப்பொறுப்பு சட்டம், தர்ம நம்பிக்கைப்பொறுப்பு சட்டம் என்பன இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய வழக்கு தீர்ப்புகள், இந்தியா மற்றும் இங்கிலாந்தில் இச்சட்ட நடைமுறைகள், அவற்றின் பின்னணி உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்களை இந்நூல்கள் உள்ளடக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு நாட்டின் சட்டத்துறை சார்ந்த நூல்களில் இவை இரண்டும் மிகமுக்கியமான வளமாக அமையும் எனவும் அவர் பாராட்டு வெளியிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 'நீங்கள் (நிகழ்வில் கலந்துகொண்ட சட்ட வல்லுனர்கள்) தினமும் சட்டம் பயில்வது போல, இந்தியா - இலங்கைக்கு இடையிலான நல்லுறவில் நான் தினமும் புதிய தொடர்புகளைக் காண்கிறேன்' எனத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட கருத்துக்களின் பிரகாரம், இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்த கால சட்டத்துறைசார் தொடர்புகள் மற்றும் பரஸ்பர ஒற்றுமைகள் நிலவிவந்திருப்பது குறித்து அவர் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

அதேபோன்று சமகாலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலத்தொடர்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பு என்பன மேலோங்கியிருப்பதாகவும், இத்தொடர்புகள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் அடுத்த 5 - 10 வருடங்களில் இலங்கைக்கு பல பில்லியன் டொலர் வருமானம் கிட்டும் எனவும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

நிறைவாக நன்றியுரை ஆற்றிய மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களின் எழுத்தாளர் சட்டத்தரணி கே.வி ஸ்ரீ கணேஷராஜன், தனது தொழிற்துறை வளர்ச்சியில் மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரனின் பங்களிப்பை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்ததுடன், இந்நூல்கள் வெளிவருவதற்கு உதவிய சகலருக்கும் நன்றி தெரிவித்தார்.

(படப்பிடிப்பு -ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58