பொலிஸ்மா அதிபர் தொடர்பான சர்ச்சை தீவிரமடைய அனுமதிக்கக்கூடாது

Published By: Digital Desk 3

30 Jul, 2024 | 05:36 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை,  முக்கியமானதாக நோக்கப்படுகின்ற ஒரு சர்ச்சையின் மத்தியில் பொலிஸ்மா அதிபர் சிக்கிக்கொண்டுள்ளார். அவரது நியமனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சகல அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணைகள் முழுமையாக  முடியும்வரை, பொலிஸ் தலைவராக அவர் செயற்படுவதை தடுத்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தேசபந்து தென்னக்கோன் மீதான அந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம்  நடவடிக்கை  எடுப்பதில்லை என்ற தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்திருப்பது சட்டத்தை மதிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் அதியுயர் நீதிமன்றம் இத்தகைய ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்ற போதிலும், பொலிஸ்மா அதிபர் தனது பதவியில் தொடருவார் என்று அரசாங்கம் அறிவித்திருப்பது சட்டத்தினால் ஆளப்படும் ஒரு சமுதாயத்துக்கு ஏற்புடையதல்ல.  ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடமுடியாது.

தற்போதைய பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உயர்நீதிமன்றம் மாற்றமுடியாது என்றும் அதனால் அவர் தனது பதவியில் தொடருவார் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய  பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்தார்.

"அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு ஜனாதிபதியினால் செய்யப்படும் நியமனங்களை கேள்விக்குட்படுத்துவதற்கான அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு கிடையாது என்று கூறுவதை அறவே ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியிருக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்  என்பதால் பதில் பொலிஸ்மா அதிபரை தான் நியமிக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனின் நியமனம் குறிப்பாக இரு காரணங்களுக்காக சரர்சைக்குரியதாக இருந்தது. முதலாவது, ஒரு தசாப்த காலத்துக்கு முன்னதாக இடம்பெற்ற சித்திரவதைச் சம்பவம் ஒன்று தொடர்பில்  தென்னக்கோனை குற்றவாளியாகக் கண்ட உயர்நீதிமன்றம் அபராதம் விதித்ததுடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை விடவும் வேறு  சந்தர்ப்பங்களில் அவர் மனித உரிமைகளை மீறியதாகவும் பெருவாரியான முறைப்பாடுகள் இருக்கின்றன. அந்த நேரத்தில் பதில் பொலிஸ்மா அதிபராக இருந்தார். அவருக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பதிலாக பொலிஸ்மா அதிபராக அவர் பதவி உயர்த்தப்பட்டார்.

பொலிஸ்மா அதிபராக தென்னக்கோன் நியமிக்கப்பட்ட முறையும் கூட சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. அரச உயர்மட்ட அதிகாரிகள் தெரிவை உறுதிப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவை தென்னக்கோன் விவகாரத்தில் பிளவுபட்டிருந்தது.

அரசியலமைப்பு பேரவையை நிறுவிய அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு அந்த பேரவையின் ஒன்பது உறுப்பினர்களில் குறைந்தபட்சம் ஐந்து பேர் சம்மதம் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அவருக்கு ஆதரவாக நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்தார்கள். இருவர் அவரது நியமனத்தை எதிர்த்த அதேவேளை இருவர் வாக்கெடு்ப்பில் பங்கேற்கவில்லை.

அவ்வாறு அவர்கள் பங்கேற்காதமை தேசபந்துவின் நியமனத்துக்கு வாக்களித்ததற்கு சமமானது என்று கணக்கிட்டு அரசியலமைப்பு பேரவையின் தலைவரான பாராளுமன்ற சபாநாயகர் சர்ச்சைக்குரிய ஒரு தீய்மானத்தை எடுத்தார். தேசபந்துவை நியமிப்பதற்கு ஆதரவாக நான்கு வாக்குகளும் எதிராக நான்கு வாக்குகளும் கிடைத்திருப்பதாக தீர்மானித்து நியமனத்துக்கு ஆதரவாக ஐந்து வாக்குகள் வரக்கூடியதாக சபாநாயகர் தனது தற்துணிபு வாக்கைப் பயன்படுத்தினார்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

பொலிஸ்மா அதிபராக தென்னக்கோன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்டன. 250 பேர் மரணமடையவும் பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடையவும் வழிவகுத்த 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் அவர் செய்யவில்லை என்பதும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

இந்த காரணங்களின் நிமித்தம் அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்து ஒரு தீர்ப்பு வழங்கப்படும் வரை பொலிஸ்மா அதிபரை அவரது பதவியில் இருந்து இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.

உயர்நீதிமன்றத்தின் தீய்மானத்துக்கு எதிராக பல்வேறு வாதங்களை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. ஒன்று, அரசியலமைப்பு பேரவை சட்டவாக்கசபையின் (பாராளுமன்றம்) ஒரு அங்கம் என்பதால் சட்டவாக்க சபையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உயர்நீதிமன்றம் தீர்மானங்களை எடுக்கமுடியாது என்பது.

" உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் கணிசமானளவுக்கு தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில்  ஜூலை 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரின் அறிக்கையும்  அடங்கும் " என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அதன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பாராளுமன்றத்துக்கோ அல்லது அரசியலமைப்பு பேரவைக்கோ எதிரானது அல்ல. அத்துடன்  அரசியலமைப்பு பேரவை பாராளுமன்றத்தின் ஒரு கமிட்டியும் அல்ல. பிரத்தியேகமான பாராளுமன்ற சிறப்புரிமைகளினால் அந்த பேரவை பாதுகாக்கப்படவும் இல்லை என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருப்பதால் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கக்கூடிய நிலையில் இப்போது அவர் இல்லை என்பதும்  அவ்வாறு அவர் பதில்  நியமனங்களைச் செய்தால்  தேர்தல் ஆட்சேப மனுக்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதும்  அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற இன்னொரு வாதமாகும்.

இப்போது இறுதியாக பொலிஸ்மா அதிபர் தென்னக்கோன் தனது பதவியில்  தொடருவதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அது உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை அலட்சியம் செய்வதாகும்.

நீதித்துறையின் தீர்மானங்களுக்கு பொது  மக்கள் மத்தியில் பெருமளவு பணிவும் மதிப்பும் இருக்கிறது. நீதித்துறையை எதிர்ப்பதன் மூலமோ அல்லது அதை பழித்துரைப்பதன் மூலமோ நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாக மக்கள் விரும்புவதில்லை.

தற்போதைய சர்ச்சையில் தென்னக்கோனுக்கு வல்லமைகொண்ட நேச  சக்திகளின் ஆதரவு இருக்கின்றன. இந்த சக்திகள் எதையும் செய்ய முடியாது என்று கூறுவதற்கு பதிலாக பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு வழிவகைளைக் காணவேண்டும். சில நடவடிக்கைகளை எடுக்கமுடியும். அரசியலமைப்பு பேரவையான சம்மதத்துடன் பதில் பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பது அந்த நடவடிக்கைகளில் ஒன்று. அரசியலமைப்பு பேரவையின் சம்மதம் அரசியலமைப்பு ரீதியாக அவசியமானது என்பதால் அதன் அங்கீகாரத்துடன் பதில் நியமனத்தைச் செய்வதன் பக்கச்சார்பாக செயற்டுவதாக தெரிவிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுக்களில் இருந்து ஜனாதிபதி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

ஜனாதிபதிப்பதவி, பாராளுமன்றம்  மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மத்தியிலான  அதிகார வேறாக்கலின் (Separation of Powers) மீது தங்கியிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் அத்திபாரக்  கோட்பாட்டை தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு மலினப்படுத்துவது கவலைக்குரியது. இந்த மூன்று கிளைகளும் எந்தவொரு கிளையினாலும் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதற்காக ஒரு  'தடுப்புக்கள் சமப்படுத்தல்கள் ' (Checks and Balances) முறைமையாக செயற்படுவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகும்.

சட்டத்தின் ஆட்சி என்பது ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படையாகும். " சட்டம் எங்கே முடிவடைகிறதோ அங்கே கொடுங்கோன்மை தொடங்குகிறது" என்று 17 ஆம் நூற்றாண்டின் ஆங்கில தத்துவஞானி ஜோன் லொக் கூறினார். அதே போன்றே 17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானி மொண்டேஸகியு அரசாங்க அதிகாரங்கள் வேறாக்கல் எதேச்சாதிகார ஆட்சியை தடுப்பதற்கு அவசியமாகும் என்று குறிப்பிட்டார். " சட்டவாக்க சபையிடமிருந்தும் நிறைவேற்று அதிகார பீடத்திடமிருந்தும் நீதித்துறை அதிகாரங்கள் வேறாககப்படாவிட்டால் அங்கே சுதந்திரத்துக்கு இடமில்லை."

இந்த கோட்பாடுகளுக்கு முரணாக அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் அமைவதுடன் இலங்கையின் ஜனநாயக  முறைமையை தாங்கிப்பிடிக்கும் சமநிலையை அச்சுறுத்துகிறது.

 விடுபட வழி என்ன?

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்துச் செயற்படுவதற்கு அரசாங்கம் மறுத்து நிற்பது இந்த கோட்பாடுகளுக்கு சவாலாக அமைவதுடன் ஜனநாயக ஆட்சிமுறைக்கு ஆதரவாக இருக்கும் சட்டக் கட்டமைப்பை  மலினப்படுத்துகிறது. சட்டவாக்கசபையினதும் நிறைவேற்று அதிகார பீடத்தினதும் நடவடிக்கைகளின் அரசியலமைப்பு ஏற்புடைமையை மதிப்பிடுவதற்கு நீதிமன்றங்களை அனுமதிக்கும் நீதித்துறை மீளாய்வு (Judicial Review) என்ற கருத்து அதிகாரச் சமநிலையைப் பேணுவதற்கு தவிர்க்க முடியாததாகும்.

நீதித்துறையின் உத்தரவுகளை அலட்சியம் செய்வதன் மூலம் அரசாங்கம் இந்த சமநிலையை தகர்ப்பது மாத்திரமல்ல சமூக ஒழுங்கிற்கு (Societial Order) மிகவும் முக்கியமானவையான  சட்ட முன்மதிப்பீட்டையும் (Legal Predictability ) உறுதிப்பாட்டையும் அச்சுறுத்தவும் செய்கிறது.

நீதித்துறையின் தீர்மானங்களை அவமதிப்பதன் மூலமாக அரசாங்கம் ஆபத்தான முன்னுதாரணம் ஒன்றை வகுக்கிறது. அதாவது சட்டமுறைமை மீது மக்களின் நம்பிக்கை அருகிப்போகும் என்பதுடன் அரசாங்கத்தின் மற்றைய மட்டங்களில்  தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகளும்  நீதித்துறையை அலட்சியம் செய்வதற்கு ஊக்கத்தைக் கொடுப்பதாகவும் அமையும்.

பொலிஸ்மா அதிபர் தென்னக்கோன் பதவியில் தொடரும் விவகாரம் குறித்து அரசாங்க உறுப்பினர்கள்  முனவைக்கும்  வாதங்கள் பொதுமக்களை குழப்பமடையச் செய்கின்றன. உயர்நீதிமன்றமே சட்ட விவகாரங்களில் இறுதிநடுவர் என்றும் நீதிக்கான இறுதித் தஞ்சம் என்று அதிகப்  பெரும்பான்மையான பொதுமக்கள் நம்புகிறார்கள்.

அத்துடன் இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் அரசாங்கத்தை மாற்றக்கூடிய ஒரு ஜனாதிபதி தேர்தலை நோக்கிய பாதையில் நாடு செல்கிறது. பொலிஸ்மா ஆதிபர் தென்னக்கோனுக்கு தற்போது கிடைக்கின்ற ஆதரவு அவருக்கு பாதகமான முறையில் உடனடியாகக் காணமற்போய்விடவும் கூடும்.

இத்தகைய சூழ்நிலைகளில்,  தென்னக்கோன் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பொலிஸ்மா அதிபருக்கான  கடமைகளைச் செய்வதில் இருந்து விலகுவது நல்லறிவுடைய செயலாக இருக்கும். அல்லாவிட்டால் அவர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக வேண்டிவரும்.

தற்போதைய கடமைகளில் இருந்தும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதன்  மூலம் நீதித்துறை, அதிகார வேறாக்கல் கோட்பாடு மற்றும் ஜனநாயக அரசாங்க முறைமையின் அடிப்படையாக அமையும் தடுப்புக்களும் சமப்படுத்தல்கள் கோட்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பை வெளிக்காட்டமுடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம் அதிகரிக்கும் நெருக்கடியை தணிப்பதற்கு அவரால் உதவமுடியும். அல்லாவிட்டால் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அவசியமான உறுதிப்பாடு பாதிக்கப்படும் ஆபத்து ஏற்படும். இது தவிர்க்கப்படவேண்டிய ஒரு ஆபத்து என்பதையும் பரிகார நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவேண்டியது அவசியம் என்பதையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெளிவாகக் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00
news-image

கிரிபத்கொடையில் கடத்தப்பட்ட சுகி ; என்னை...

2025-03-16 12:15:22
news-image

“காஸாவில் பாலியல் வன்முறை, இனப்படுகொலை நடவடிக்கைகள்”...

2025-03-16 11:54:02
news-image

லண்டனில் வறுக்கப்பட்ட ரணில்

2025-03-16 11:38:23
news-image

இந்தியாவின் எதிர்பார்ப்பு

2025-03-16 11:36:25