(மா.உஷாநந்தினி)
படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்
“பரதத்தின் மடியில் சாதி, இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறோம்” என்கிற கருப்பொருளில் “நாட்டிய சாகா” நிகழ்ச்சி ஜூலை 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு பிஷப் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழ் பெண்கள் சங்கத்தினால் உருவாக்கப்பட்ட 'கலாலயா நடனம் மற்றும் இசைப்பள்ளி'யின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டமாக நடைபெற்ற நாட்டிய சாகா நிகழ்வில், கலாலயாவின் பரதநாட்டிய ஆசிரியையான 'நாட்டியபூர்ணா' கலாநிதி நிர்மலா ஜோனின் நெறியாள்கையில் நீண்ட நடன ஆற்றுகை மேடையேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வானதி ரவீந்திரனும் கௌரவ விருந்தினராக சட்டத்தரணி கணகேஸ்வரனும் கலந்துகொண்டனர்.
அத்துடன், Dr பாக்கியசோதி, போசகர் சரோ கதிர்காமர், நம்பிக்கை பொறுப்பாளர் இந்திரா சதாசிவம், இலங்கை தமிழ் பெண்கள் சங்கத் தலைவி சுபத்ரா கணேசன், சங்கத்தின் முன்னாள் தலைவிகளான சாந்தி பாலசுப்ரமணியம், மலர் பொன்சேக்கா, கலாலயா அதிபர் நீலா தயாபரன், உப அதிபர் செல்வநிதி, Dr. அஜந்தன், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வுட், எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், நடன ஆசிரியர்களான வாசுகி ஜெகதீஸ்வரன், பாலசுந்தரி பிரார்த்தலிங்கம், சிவானந்தி ஹரிதர்ஷன் போன்றோர் முன்னிலையில் நாட்டிய நிகழ்வு நடைபெற்றது.
முதலில் சங்கத் தலைவி சுபத்ரா கணேசன் வரவேற்புரை ஆற்றினார். அடுத்து, உரையாற்றிய வானதி ரவீந்திரன், “1948இல் உருவான 'கலாலயா நடனம் மற்றும் இசைப்பள்ளி'யானது இலங்கை தமிழ் பெண்கள் சங்கத்தின் மிகப் பெரிய சாதனை. கலாலயாவின் இந்த 75ஆவது ஆண்டு விழா நிகழ்வு ஒரு மைல்கல்” என்றார்.
அத்தோடு, தற்போது இசை, நடனம் போன்ற கலைகளை, குறிப்பாக வீணை, வயலின் போன்ற வாத்தியங்களை கற்கும் பெண்பிள்ளைகளை பெற்றோர் உற்சாகப்படுத்துவதாகவும் தெரிவித்தவர், நடனம், இசை, நாடகம் மூலம் கற்பனை வளம், ஒழுக்கத்தை கற்கும் பிள்ளைகள் தன்னம்பிக்கை, சமூக சிந்தனையை வெளிப்படுத்துபவர்களாக விளங்குவர் என்றும் கூறினார்.
அடுத்து, கலாலயாவின் அதிபர் நீலா தயாபரனின் உரை, சங்கத்தின் உப செயலாளர் வசந்தா நல்லதம்பியால் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, நடன ஆசிரியை நிர்மலா ஜோனுக்கான கௌரவிப்பை தொடர்ந்து நடனம் ஆரம்பமானது.
நடனத்துக்கான இசைப் பங்களிப்பு
நடன ஆசிரியை நிர்மலா ஜோனுடன் (நட்டுவாங்கம்) இணைந்து கர்நாடக இசைக்கலைஞர் அருநந்தி ஆரூரன் பாட, ஸ்ரீ திபாகரன் (வயலின்), ரட்ணம் ரட்ணதுரை (தபேலா), அபினவ் ரட்ணதுரை (மிருதங்கம்), விநாயகமூர்த்தி செந்தூரன் (கீ போர்ட்) ஆகியோரின் வாத்தியப் பங்களிப்பில் நடன நிகழ்வு தொடங்கியது.
பரதநாட்டியத்தின் வளர்ச்சியும் கலாசார மாற்றங்களும்
பரதநாட்டியத்தின் வளர்ச்சி, கலாசார மாற்றம் என்பவற்றை எடுத்துக்காட்டி, பரதம் அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதாக நடனம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆதிகாலத்தில் வாழ்ந்த வேடர்கள் ஆடிய நடனத்தில் தொடங்கி, கூத்து, கண்டிய நடனம் என வளர்ந்தது. பின்னர், ஆலயங்களில் தேவரடியார்கள் நடனமாடி பரதநாட்டிய கலையை வளர்த்தனர். பின்னர், ரவீந்திரநாத் தாகூர், உதயசங்கர் போன்றோரின் வருகையால் இலங்கையிலிருந்து சிலர் இந்தியாவுக்குச் சென்று நடனம் பயின்ற அவர்கள், பின்னர் நாடு திரும்பியதும் தமக்கென 'முத்ரா நட்டும' என்றொரு நடன அமைப்பை உருவாக்கினர். இவற்றை காட்சிகளினூடாக எடுத்துக்காட்டும் விதமாக ஒன்றன் பின் ஒன்றாக கலாலயா மாணவர்கள் நடனமாடினர்.
இந்திய பரத வரலாற்றில், பரதத்துக்கு பெரும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தவர் ருக்மிணி தேவி அருண்டேல். அவரது காலத்தில்தான், இலங்கையிலும் கோயிலில் ஆடப்பட்டு வந்த பரதநாட்டியக்கலை மேடையேற்றப்பட்டது. அதை உணர்த்தும் வகையில், தேவரடியாராக தோன்றி “ஈசானிய கௌத்துவம்” நடனத்தை நடன ஆசிரியை நிர்மலா ஜோன் ஆடிய விதம் சிறப்பாக அமைந்தது. 60 வயதிலும் மேடையில் அவரது நடன அசைவுகள் மிளிர்ந்தன.
தொடர்ந்து, முஸ்லிம்கள் நடனமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள மத ரீதியான தடை, மேலைநாட்டு நடனத்தின் தாக்கம் என்பனவும் அடுத்தடுத்த நடனங்களில் காண முடிந்தது.
இவ்வாறு பரதத்தின் வளர்ச்சி மற்றும் கலை, கலாசார மாற்றங்களுக்கு மத்தியில் தீய சக்தியினால் இனப் பிரிவினை ஏற்பட்டு பிளவுபடும் மக்கள், சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கித் தவிக்கும் தருணத்தில் மீண்டும் ஒன்றுபடுகின்றனர். அவலத்திலிருந்து மீள மக்கள் உதவி கோரி நிற்கும் நிலை ஏற்படுகிறது. பின்னொரு கட்டத்தில் ஒரு குருவை நோக்கி, நன்மை தேடிச் செல்கின்றனர்.
இவ்வாறு உருக்கமான காட்சிகள், உணர்வு பொங்கும் பாவனைகளோடு நீண்ட நடனம், கடைசியாக சாதி, இன, மத பேதமின்றி அனைவரும் ஆடக்கூடிய 'தில்லானா' உருப்படியோடு நிறைவுற்றது.
ஒருமைப்பாடும் சமாதானமும்
நடன உருவாக்கம் பற்றி நிர்மலா ஜோன் வீரகேசரியிடம் பகிர்ந்துகொள்கையில், "பரதத்தின் மடியில் சாதி, இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறோம் என்கிற கருப்பொருளில் உருவானது இந்த நடனம். மனித நேயமற்றவர்களால் ஏற்படும் பாதிப்புகளை, களையெடுப்பது போல் நீக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் அறிந்து, உணர்ந்து, நடந்துகொண்டால், எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சமாளித்து எதிர்கொள்ள முடியும். இங்கு பலவிதமான நடனங்கள், கலைகள், கலாசாரங்கள், விருப்பு - வெறுப்புகள், இனங்கள் உள்ளன. அவற்றிடையே ஓர் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பி நாட்டில் சமாதானத்தை உருவாக்கும் நம்பிக்கையிலேயே இந்த நடனத்தை அமைத்திருந்தேன்" என்றார்.
அடுத்து, சங்கத்தின் தலைவி சுபத்ரா கூறுகையில், "75வது ஆண்டு விழாவை கொண்டாடும் கலாலயா மென்மேலும் வளர்ந்து செழிக்க வேண்டும். தற்போதுள்ள கலாலயா மண்டபத்தை பெரியளவில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எங்களது தேவையாக உள்ளது. அதற்கான முயற்சிகளை இலங்கை தமிழ் பெண்கள் சங்கம் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கும்" என்றார்.
கலாலயாவின் அதிபர் நீலா தயாபரன் கூறுகையில், “நிர்வாகக் குழுவின் முழு ஒத்துழைப்போடு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததில் நான் சந்தோஷப்படுகிறேன். வழமையான பரதநாட்டிய நிகழ்வுகளை போன்றில்லாமல் பலவித நடனங்களையும் இணைத்து, இன ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக நடனம் அமைத்துக் காண்பித்த கலாலயா நடன ஆசிரியை நிர்மலா ஜோனுக்கு எமது நன்றி. தற்போது இயங்கிவரும் இந்த கலாலயாவை மீண்டும் பழைய உன்னதமான நிலைக்கு நாங்கள் முன்கொண்டு செல்வோம். அதுவே எங்களது நோக்கம்” என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM