எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி புனித நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

இது நாட்டில் வாழும் இந்துக்களின் மனதில் வேதனையை உண்டாக்கியுள்ளது. எனவே குறித்த பரீட்சை திகதியை பிற்போட்டு இந்துக்கள் தமது வழிபாட்டுக் கடமையை ஆற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நல்லூர்க் கந்தனின் தேர் உற்சவம் என்பது நாட்டின் வடபகுதியிலிருந்து மட்டுமல்லாது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இந்துக்கள் தங்கள் பிள்ளைகளுடன் கலந்துகொண்டு வழிபடும் ஒரு புனித பெருந்திருவிழாவாகும்.
எனவே ஆகஸ்ட் 20ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை நடத்தத் தீர்மானித்து இருப்பின் அத்திகதியை பிற்போட்டு இந்துக்கள் தமது வழிபாட்டுக் கடமையை ஆற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைவாழ் இந்து மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.