(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் ரி20 ஆசிய கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
இந்த வெற்றியை அடுத்து இந்தியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (28) இதே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது.
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
விஷ்மி குணரட்ன (0), ஹர்ஷிதா சமரவிக்ரம (19) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (19 - 2 விக்.)
எனினும் அணித் தலைவி சமரி அத்தபத்துவும் கவிஷா டில்ஹாரியும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
டில்ஹாரி 17 ஓட்டங்களைப் பெற்றார்.
இதனிடையே அத்தபத்துவின் பின்னங்கால் அந்தரத்தில் இருந்தபோது விக்கெட் காப்பாளர் முனீபா ஸ்டம்ப் செய்தார். என்னே விசித்திரம், முனீபா கேள்வி எழுப்பாததால் அத்தபத்து தப்பித்துக்கொண்டார்.
முனீபாவின் கவனக்குறைவான அந்த செயல் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலக்ஷிகா சில்வா வந்த வேகத்திலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (78 - 4 விக்.)
எனினும் சமரி அத்தபத்துவும் அனுஷ்கா சஞ்சீவனியும் 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சமரி அத்தபத்து அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் அடிக்க முயற்சித்து விக்கெட்டைத் தாரை வார்த்தார்.
அவர் 48 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து ஹசினி பெரேரா (3), சுகந்திகா குமாரி (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது.
எனினும், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அனுபவசாலி அனுஷ்கா சஞ்சீவனி ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தார்.
பந்துவீச்சில் சாடியா இக்பால் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.
குல் பெரோஸா, முனீபா அலி ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர்.
குல் பேரோஸா 25 ஓட்டங்களையும் முனீபா அலி 37 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து சித்ரா ஆமின் (10), அணித் தலைவி நிதா தார் (23) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (99 - 4 விக்.)
எனினும் ஆலியா ரியாஸ் (16 ஆ.இ.), பாத்திமா சானா (23 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 140 ஓட்டங்களாக உயர்த்தினர்.
பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: சமரி அத்தபத்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM