(லியோ நிரோஷ தர்ஷன்)

அரசியலமைப்பு விவகாரத்தினால் வடக்கு , கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் அந்நியோன்ய உறவுகள் பாதிக்கப்பட கூடாது. தேசிய சமாதானத்தை கலங்கப்படுத்திக் கொண்டு பொருளாதார இலக்குகளை அடைவதோ நிலையான அமைதியை தக்கவைத்துக் கொள்வதோ சாத்தியமற்றதாகும் என முன்னாள் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறுகிய நோக்கங்களுக்காகவும் குறிப்பிட்ட தரப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் செயற்படாது , நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு விவகாரத்தினால் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பல்வேறு முரண்பாடுகள் வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான சிறுபான்மை கட்சிகள் புதிய அரசியலமைப்பை வலியுறுத்துகையில் பேரிவாத கட்சிகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்படுகின்றது.

இதனால் எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டும். பேதங்களை வளர்த்துக் கொண்டு நாட்டின் நலன்களை முன்னெடுக்க முடியாது. எனவே பிரதான கட்சிகளிடையே புரிந்துணர்வு அவசியமாகும். தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாடும் போது எந்தவொரு இனத்தையும் பாதிக்கும் வகையிர் நடவடிக்கைகளை எடுப்பது உகந்ததல்ல.தேசிய ஒற்றுமை மிகவும் முக்கியமாகும்.

புதிய அரசியலமைப்பு விவகாரத்திலும் பல்வேறு முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் தேசிய விவகாரங்களை கையள்வதை நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட தரப்புகளின் உள் நோக்கங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சந்தரப்பங்களை நாம் கண்டறிந்து செயற்பட வேண்டும். பொருளாதார இலக்குகள் எம்முன்னுள்ள முக்கிய சவாலாகும்.

அவற்றை அடைவதற்கு எம்முள் ஒற்றுமை அவசியமாகும். வடக்கு , கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் அந்நியோன்ய உறவுகள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டார்.