உள்ளூராட்சி மன்ற தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடத்தினால் சிறுப்பான்மையினருக்கு பாதிப்பாகும் என்றால் அதனை எம்மால் ஏற்க முடியாது. ஆகவே தேர்தலை தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியது.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்பு மாகாண சபைகளுக்கான நடத்துவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்படவில்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வினவிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்து தாமதமாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தாமதகமாகுவதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாக உறுதியாக உள்ளார். புதிய முறைமையில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எனினும் சிறுப்பான்மை இனங்களை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். 

சிறுப்பான்மை இன கட்சிகள் மாத்திரம் இன்றி நாட்டில் உள்ள சிறிய அரசியல் கட்சிகள் தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்த வேண்டும். ஜனநாயக முறைமையை பேணிய தேர்தல் முறைமை அமைய வேண்டும். 

எனவே புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தினால் சிறுப்பான்மையினருக்கு பாதிப்பாகும் என்றால் அதனை எம்மால் ஏற்க முடியாது. ஆகவே தேர்தலை தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும். ஏனெனில் தற்போது தேர்தல் நன்றாக தாமதம் செய்யப்பட்டுள்ளன. கிராம பகுதிகளில் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்.