(எம்.ஆர்.எம்.வஸீம்)

Image result for சைட்டம் virakesari

சைட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானமானமானது தான்தோன்றித்தனமானதும் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணானதுமாகும் என மருத்துவ பீட மாணவர்கள் செயற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாலபே தனியார் மருத்துவ பீட நிறுவனத்தை மூடிவிடுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களுடன் வேறு பல முற்போக்கு சிந்தனையுடையவர்களும் கைகோர்த்துள்ளனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் சைட்டம் தொடர்பில் தான்தோன்றித்தனமாகவும் மக்களின் எதிர்பார்புக்கு இணக்கம் இல்லாமலும் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் கடந்த 7ஆம் திகதி சைட்டம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையானது இலவச கல்வி மற்றும் சுகாதாரத்துறையை அழித்துவரும் நிறுவனத்தை தூய்மைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். மருத்துவ பீட மாணவர்கள் 100 நாட்களாக கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியும் 450 நாட்களுக்கு அதிகமான நாட்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டும், இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை அழித்துவரும் மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்தை மூடிவிடுமாறே அரசாங்த்துக்கு  அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

என்றாலும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கும் போது, இந்த நிறுவனத்தை மூடிவிடுவதற்கு பதிலாக தொடர்ந்து செயற்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே இருக்கின்றன. அத்துடன் நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவருவது, அவிஸ்ஸாவெளை மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் சிகிச்சை பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அந்த வைத்தியசாலைகளை வழிநடத்துவதற்கான செலவு வரி செலுத்தும் பொது மக்கள் மீது சுமத்தி அதன் முழு லாபமும் நெவில் பெர்ணாந்துக்கு போய் சேறும் வகையிலேயே அமைந்துள்ளது

எனவே மக்களை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உட்படுத்தி வியாபாரி ஒருவரை பாதுகாப்பதற்காக போலி தீர்மானங்களை பெற்றுத்தந்து காலத்தை வீணடிக்க அரசாங்கம் முற்படக்கூடாது அத்துடன் சைட்டத்தை மூடிவிடும் தீர்மானத்துக்கு அரசாங்கம் முன்வராவிட்டால் அதற்கெதிராக எந்தவகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.