இலங்கையர்கள் அமெரிக்காவில் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் அமெரிக்க - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு

25 Jul, 2024 | 02:08 PM
image

அமெரிக்க - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு மேற்கொள்ளும் பணிகளுக்கூடாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கல்விப் பரிமாற்றங்களை இரு நாடுகளும் ஆதரித்து ஊக்குவிக்கின்றன. 

ஃபுல்பிரைட் ஆணைக்குழு மற்றும் EducationUSA என்பன இணைந்து நடாத்திய, அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமது கல்வி நடவடிக்கைகளில் வெற்றிபெறுவதற்காக மாணவர்களை தயார்படுத்தல் மற்றும் கல்வி கற்க அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்னரான நெறிப்படுத்தல் நிகழ்வில் 100 இலங்கை மாணவர்களும் புலமையாளர்களும் கலந்துகொண்டனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மையான சர்வதேச கல்விப் பரிமாற்ற விருதான மதிப்புமிக்க ஃபுல்பிரைட் மானியங்களை பெற்றுக்கொண்டவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இந்த ஆண்டுக்கான குழுவில் ஃபுல்பிரைட் புலமைப்பரிசிலைப் பெற்ற ஐவர், முதுமானிக் கற்கைகளுக்கான ஃபுல்பிரைட் புலமைப்பரிசிலைப் பெற்ற ஐவர், Fullbright Teaching and Excellence Achievement Program நிகழ்ச்சித்திட்டத்தின் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் Fulbright Humphrey Awards நிகழ்ச்சித்திட்டத்தின் நம்பிக்கைக்குரிய தொழில்வல்லுநர்கள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். 

மனதில் பதியத்தக்க ஃபுல்பிரைட் மானியத்தை பெறுவோர் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம், UCLA மற்றும் நோர்த் கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழகம் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் சட்டம், மொழியியல், போக்குவரத்து பாதுகாப்பு, தொழில்முனைவு மற்றும் நெல் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமெரிக்க தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகரும் ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் தலைவருமான ஹைடி ஹட்டன்பக் கூறுகையில்,

“உங்களது கல்விப் பயணத்தைத் தொடர்வதற்காக அமெரிக்காவை நீங்கள் தேர்ந்தெடுத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்வரும் வருடங்கள் நிறைய கற்றல் அனுபவங்களையும் மற்றும் பல புதிய வாய்ப்புகளையும் உங்களுக்குத்  தரும். எனினும் கல்விப் பரிமாற்றங்கள் என்பவை உயிரியல் அல்லது வான்பௌதீகவியல் பற்றியது மட்டுமன்றி, அமெரிக்க இலங்கை உறவின் இதயமாக விளங்கும் எமது நாட்டு மக்களுக்கிடையில் காணப்படும் மக்கள் உறவுகளையும் அவை வளப்படுத்தி பலப்படுத்துகின்றன. உங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு, எமது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் கௌரவத்தையும் வளர்த்து, நீங்கள் சந்திக்கும் அனைவருடனும் இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களையும் பகிர்ந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

அமெரிக்காவில் தமது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு EducationUSA ஆலோசனை சேவைகளை பயன்படுத்திய கிட்டத்தட்ட 90 மாணவர்களும் இந்த நெறிப்படுத்தல் நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களில் பலர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிடமிருந்து தமது கல்வி நடவடிக்கைகளுக்கான நிதி உதவிகளையும் பெற்றுக்கொண்டனர். விண்ணப்ப நடைமுறைகளின்போது எதிர்கொள்ளும் பொருளாதார தடைகளை கடப்பதற்கு அதியுயர் தகுதிகளைக் கொண்ட சர்வதேச மாணவர்களுக்கு உதவி செய்யும் EducationUSA Opportunity Fund Program எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மிக முக்கியமான உதவியைப் பெற்றுக்கொண்ட இருவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் வேய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் கலாநிதி பட்டப்படிப்பையும், மற்றவர் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் கலாநிதி பட்டப் படிப்பையும் தொடரவுள்ளனர்.   

“இந்த குறிப்பிடத்தக்க புலமையாளர்களும் மாணவர்களும் கல்விப் பரிமாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்துக்கான உதாரணமாக விளங்குகின்றனர். இவர்கள் நாடு திரும்பியதும், இலங்கைக்கு பயனளிக்கும் வகையில் தமது அனுபவங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஏனைய ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின்  பாரம்பரியத்தை தொடர்வார்கள். எமது இரு-தேசிய ஃபுல்பிரைட் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அமெரிக்க மற்றும் இலங்கை மக்களிடையே பரஸ்பர புரிதல் மற்றும் அவர்களுக்கு இடையிலான தொடர்புகள் எனும் பாலங்களை நாம் உருவாக்குகிறோம். சில சமயங்களில் பிளவுபட்டிருப்பதாகத் தோன்றக்கூடிய ஒரு உலகில், பரிமாற்றங்கள் மூலம் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் US-SLFC ஒரு நேர்மறையான பங்கை வகிக்க முடியும் என்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என அமெரிக்க - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா தெரிவித்தார்.

அமெரிக்க - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவைப் பற்றி...

1952இல் தாபிக்கப்பட்ட அமெரிக்க - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவானது ஒரு  தன்னாட்சியுடைய இரு தேசிய, அரசியல் சார்பற்ற, அரசு சாரா ஆணைக்குழுவாகும். 

கல்வி, கலாசார மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் ஊடாக புரிந்துணர்வு மற்றும் அமைதியின் பாலங்களை உருவாக்குவதே அதன் செயற்பணியாகும். இலங்கையில் அது செயற்படும் ஏழு தசாப்தங்களாக 2,000க்கும் அதிகமான இலங்கையர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கான பரிமாற்றங்களை இவ்வாணைக்குழு மேற்கொண்டுள்ளது. அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதை ஊக்குவிக்கும் EducationUSAஇனையும் இவ்வாணைக்குழு மேற்பார்வை செய்கிறது.

EducationUSA பற்றி... 

அமெரிக்க - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் EducationUSAஆனது உயர்தரத்துக்குப் பின்னரான கற்கைநெறிகளை வழங்கும் அமெரிக்காவிலுள்ள அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை பற்றிய துல்லியமான, விரிவான மற்றும் நிகழ்கால தகவல்களை இலவசமாக வழங்கி அமெரிக்காவில் உயர்கல்வியினைத்  தொடர்வதை  ஊக்குவிக்கிறது.

அமெரிக்கா - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் பணிகள் பற்றியும் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை நகரங்களில் அது ஏற்பாடு செய்யவுள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அலுவலர்கள் பொது மக்களுக்கு தகவல்களை வழங்கும் ஒரு நிகழ்வான September Road Show பற்றியும் மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு http://www.fulbrightsrilanka.orgஐப் பார்வையிடவும். 

மாணவர்களுக்கான நெறிப்படுத்தல் நிகழ்வில் இலங்கை மாணவர்களை சந்திக்கும் ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் சபைத் தலைவர் ஹைடி ஹட்டன்பக்

நிகழ்வில் மாணவர்களுடன் உரையாடும் ஃபுல்பிரைட் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெட்ரிக் மெக்னமாரா

நிகழ்வில் மாணவர்களுடன் உரையாடும் துணைநிலைத் தூதுவர் டக்ளஸ் சொனெக்

ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் சபைத்தலைவர் ஹைடி ஹட்டன்பக் மற்றும் ஃபுல்பிரைட் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா ஆகியோருடன் அமெரிக்காவிற்குச் செல்லவிருக்கும் மாணவர்களும் புலமையாளர்களும் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58