(நெவில் அன்தனி)
இன்னும் மூன்று வருடங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள தனது அணியில் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி பங்குபற்றக்கூடியதாக இருக்கும் என இந்திய அணியின் புதிய பயிற்றுநர் கௌதம் கம்பீர் கருதுகிறார்.
அனுபவம் வாய்ந்த ஜோடியினரான ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரிடமும் சர்வதேச கிரிக்கெட் ஏராளமாக குடிகொண்டிருப்பதாக கம்பீர் நம்புகிறார். மேலும் அவர்கள் இருவரும் 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணப் போட்டிவரை விளையாடக்கூடியவர்கள் என்பதை கம்பீர் மறுக்கவில்லை.
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கடந்த மாதம் நிறைவுபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் தோல்வி அடையாத அணியாக இந்தியா சம்பியனான சூட்டோடு விராத் கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றனர்.
அடுத்த 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது ரோஹித் ஷர்மா 40 வயதை எட்டியிருப்பதுடன் விராத் கோஹ்லிக்கு 38 வயதாக இருக்கும். அப்போது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடக்கூடிய உடல் வலிமை எந்தளவு இருக்கும் என்பதை இப்போது கூறமுடியாது.
எவ்வாறாயினும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவர்கள் இருவரும் இந்திய அணியில் பிரதான பங்காற்ற வேண்டும் என கம்பீர் எதிர்பார்க்கிறார்.
அவர்கள் இருவரினதும் உடல் வலிமை உயிரிய நிலையில் இருக்குமேயானால் அவர்களால் உயர்மட்ட கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடக்கூடியதாக இருக்கும் என கம்பீர் கருதுகிறார்.
'ரி20 உலகக் கிண்ணமாக இருந்தாலும் சரி, 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, பிரதான போட்டிகளில் அவர்களால் அதிஉயரிய ஆற்றல்களை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் என எண்ணுகிறேன்.
'அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியும். முக்கியமாக சம்பியன்ஸ் கிண்ணம் (2025), இந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் விஜயம் ஆகியவை மிக முக்கியமானவை' என செய்தியாளர்களிடம் திங்களன்று கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
'அவர்களுக்கு தேவையான உற்சாகம் அளிக்கப்படும். அவர்கள் தங்களது உடற்தகுதியைப் பேணினால், அவர்களால் 2027 உலகக் கிண்ணத்திலும் தொடரக்கூடியதாக இருக்கும் என நம்பலாம்' என்றார் கம்பீர்.
இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி 11 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், 6 அரைச் சதங்களுடன் 765 ஓட்டங்களை (சராசரி 95.62, ஸ்ட்ரைக் ரேட் 90.31) மொத்தமாக பெற்றார். ரோஹித் ஷர்மா ஒரு சதம் 3 அரைச் சதங்களுடன் 597 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி 54.27 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 125.94 ஆகவும் இருந்தன.
நடைபெற்று முடிந்த ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ரோஹித் ஷர்மா 8 இன்னிங்ஸ்களில் 257 ஓட்டங்களைப்பெற்று அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கு (281) அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருந்தார்.
ஆனால், விராத் கோஹ்லி, இறுதி ஆட்டத்தில் பெற்ற 76 ஓட்டங்கள் உட்பட 8 இன்னிங்ஸ்களில் 151 ஓட்டங்களையே மொத்தமாக பெற்றிருந்தார்.
ஒட்டுமொத்தத்தில் அவர்கள் இருவரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவுக்காக எந்தளவு சிறப்பான, அதி உச்ச பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதை கம்பீர் நன்கு அறிவார்.
ஆனால், அவர்களது எதிர்காலம் தொடர்பான எத்தகைய முடிவும் தனிநபரின் பொறுப்பில் இருக்கும் என்பதையும் அவர் நன்கு அறிவார்.
'இது மிகவும் தனிப்பட்ட முடிவாகும். அவர்களுக்குள் எவ்வளவு கிரிக்கெட் மீதமிருக்கிறது என என்னால் கூறமுடியாது. எல்லாம் அவர்களையும் வீரர்களையும் பொறுத்தது. அவர்களால் எவ்வளவு காலத்துக்குத்தான் அணிக்கு பங்களிப்பு செய்ய முடியும்? ஏனெனில் இறுதியில் அணிதான் மிகவும் முக்கியம்' என்றார் கம்பீர்.
'ஆனால், விராத், ரோஹித் ஆகிய இருவராலும் எவ்வளவு வழங்க முடியும் என நோக்கும்போது, அவர்களிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சியிருப்பதாக நான் கருதுகிறேன். அவர்கள் இன்றும் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்பதுடன் எந்தவொரு அணியும் அவர்கள் இருவரையும் முடிந்தவரை அணியில் வைத்திருக்க வேண்டும் என விரும்பும்' என கம்பீர் மேலும் குறிப்பிட்டார்.
விராத் கோஹ்லி - கௌதம் கம்பீர் உறவு
விராத் கோஹ்லியுடனான உறவுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது,
'விராத் கொஹ்லியுடன் நான் என்ன வகையான உறவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று கேட்டால் அது இரண்டு முதிர்வடைந்தவர்களுக்கு இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன்' என பதிலளித்தார்.
'ஆடுகளத்தில், ஒவ்வொருவரும் தத்தமது சொந்த அணிக்காகவும், சொந்த ஜேர்சிக்காகவும் போராடுவதற்கும், இறுதியில் வெற்றிபெற வேண்டும் என விரும்புவதற்கும் உரிமை கொண்டுள்ளனர். ஆனால், தற்போது நாங்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 140 கோடி இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். எனவே நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கப் போகிறோம். அத்துடன் இந்தியாவை பெருமைப்படுத்த முயற்சிப்போம் என்று நான் நம்புகிறேன்.
'நான் களத்திற்கு வெளியே ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து வருகிறேன். நாங்கள் அதைத் தொடர்ந்து பேணுவோம். ஆனால், எங்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை தெளிவாக கூறுவதாக இருந்தால், அது இரண்டு தனிப்பட்டவர்களுக்கு இடையிலானது என நான் நினைக்கிறேன்' என கம்பீர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM