(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி கொண்ட ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது.
ரைலி ரூசோவ் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், குசல் மெண்டிஸ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன ஜெவ்னா கிங்ஸின் வெற்றியை இலகுவாக்கின.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு நடைபெற்ற LPL இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 184 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும், ஜெவ்னா கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
பெத்தும் நிஸ்ஸன்க முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் ஜெவ்னா கிங்ஸ் பலத்த நெருக்கடியை எதிர்கொண்டது.
ஆனால், ரைலி ரூசோவ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் சாதனைமிகு 185 ஓட்டங்களைப் பகிர்ந்து ஜெவ்னா கிங்ஸின் வெற்றியை இலகுவாக்கினர்.
லங்கா பிறீமியர் லீக் வரலாற்றில் இந்த இணைப்பாட்டமானது சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டமாகப் பதிவானது.
ரைலி ரூசோவ் 53 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 40 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்களையும் பெற்றனர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் மார்வல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
கோல் மார்வல்ஸ் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன் காரணமாக கோல் மார்வல்ஸ் 150 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், அடுத்த 10 ஓவர்களில் மேலதிகமாக 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 136 ஓட்டங்களைக் குவித்த கோல் மார்வல்ஸ் மொத்த எண்ணிக்கையை 184 ஓட்டங்களாக உயர்த்தியது.
வியாஸ்காந்த் வீசிய 12ஆவது ஓவரில் சீபேர்ட் 3 சிக்ஸ்கள் உட்பட 23 ஓட்டங்களையும் அணித் தலைவர் சரித் அசலன்க வீசிய 16ஆவது ஓவரில் பானுக்க ராஜபக்ஷ 4 சிக்ஸ்கள் உட்பட 28 ஓட்டங்களையும் விளாசி கோல் மார்வல்ஸ் அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
டிம் சீபேர்ட் 37 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்றார்.
அவருடன் 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த பானுக்க ராஜபக்ஷ, 5ஆவது விக்கெட்டில் சஹான் ஆராச்சிகேவுடன் பெறுமதிமிக்க 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தார்.
சஹான் ஆராச்சிகே 16 ஓட்டங்களைப் பெற்றார்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பானுக்க ராஜபக்ஷ 34 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களைக் குவித்தார்.
ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேசன் பெஹ்ரெண்டோர்வ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சம்பியனான ஜெவ்னா கிங்ஸுக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 3 கோடியே 35 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற கோல் மார்வல்ஸ் அணிக்கு ஒரு கோடியே 51 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.
ஆடடநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளும் ரைலி ரூசோவுக்கு சொந்தமானது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM