(இராஜதுரை ஹஷான்)
நாட்டை திருத்துவதாக போதனை வழங்கும் ஒருசில சட்டத்தரணிகள் போதைப்பொருள் வியாபாரிகளின் பணத்துக்காக செயற்படுகிறார்கள். மில்லியன்கணக்கில் சேவை கட்டணம் வழங்கினாலும் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக முன்னிலையாக போவதில்லை என்ற கொள்கையில் உள்ள கௌரவமான சட்டத்தரணிகளும் நாட்டில் உள்ளார்கள். கஞ்சிபானை இம்ரான் எவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்றார் என்பதை அவருக்கு சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி நன்கு அறிவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யுக்திய விசேட பொலிஸ் சுற்றிவளைப்புக்கள் பற்றி மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் காணப்படவில்லை. இல்லாத விடயங்களை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
யுக்திய விசேட சுற்றிவளைப்பு 2023.12.17 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 19 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் வனாத்தவில்லு பகுதியில் பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுகின்றன.
அத்துடன் 955 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 42 கைக்குண்டுகளும், 525 கிலோகிராம் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆகவே யுக்திய விசேட சுற்றிவளைப்பின் ஊடாக எதையும் செய்யவில்லை என்று அரசியல்வாதிகள் குறிப்பிட முடியாது.
யுக்திய சுற்றிவளைப்புக்கு முன்னரான 07 மாத காலப்பகுதியில் மாத்திரம் 54 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 38 மனித படுகொலைகளும் பதிவாகியுள்ளன. சுற்றிவளைப்பின் பின்னர் போதைப்பொருள் வியாபாரமும் குறைவடைந்துள்ளது. அதேபோல் மனித படுகொலைகளும் குறைவடைந்துள்ளன.
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக குழுவினருக்கு எதிராக இனி கடுமையாக செயற்படுவோம். போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுவினருக்கு எதிராக செயற்படும்போது ஒருசில முன்னிலை சட்டத்தரணிகள் அவர்களுக்கு சார்பாக செயற்பட்டுக்கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கு சட்டத்தின் ஊடாக நெருக்கடிகளை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறான நிலையில் தான் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துருகிரிய பகுதியில் கிளப் வசந்த என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலைக்குரியது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் ஊடகங்களை வைத்துக்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இவ்விடயம் குறித்து பிரதி பொலிஸ்மா அதிபரை கடுமையாக எச்சரித்து இவ்வாறான தவறு இனி நேரக்கூடாது என்று அழுத்தமாக குறிப்பிட்டுள்ளேன்.
பாதாள குழு உறுப்பினர் மாக்கந்துர மதூஷ் என்பவரின் பணம் கிளப் வசந்தவிடம் இருந்ததாகவும் அதனால் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. விசாரணைகளில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. கிளப் வசந்த ஆரம்ப காலத்தில் களியாட்ட விடுதிகளை நடத்தி வசதியாக இருந்தார். ஆனால், அவர் இறக்கும் போது கடனாளியாகவே இருந்துள்ளார்.
கஞ்சிபானை இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையாக அறிவிக்காமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி தனக்கு அதிகாரம் கிடைத்தால்தான் கஞ்சிப்பானை இம்ரானை அழைத்து வருவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பிடுகிறார். இவ்வாறானவர்களின் முட்டாள்தனமான கருத்துக்கு கவனம் செலுத்தப் போவதில்லை.
கஞ்சிப்பானை இம்ரான் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை எனக்கு தெரியாது. ஆனால் கஞ்சிபானை இம்ரான் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு அவருக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் ஒத்துழைப்பு வழங்கியதை கஞ்சிபானை இம்ரானின் சகாவான கனேமுல்ல சஞ்ஜீவவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
நாட்டை திருத்துவதாக போதனை வழங்கும் ஒருசில சட்டத்தரணிகள் போதைப்பொருள் வியாபாரிகளின் பணத்துக்காக செயற்படுகிறார்கள். மில்லியன்கணக்கில் சேவை கட்டணம் வழங்கினாலும் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை என்ற கொள்கையில் உள்ள கௌரவமான சட்டத்தரணிகளும் நாட்டில் உள்ளார்கள் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM