இந்திய கலாச்சார நிலையம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிராலயம் என்பன, உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து இவ்வாண்டுக்கான சர்வதேச யோகாசன தினக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வொன்றை நேற்று (7) நடத்தியது. சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் கலாநிதி. ராஜித சேனாரத்ன, இந்திய உயர்ஸ்தானிகர் திரு.தரஞ்சித் சிங் ஆகியோர் இவ்வைபவத்தை ஆரம்பித்து வைத்ததுடன், யோகாசன செயன்முறை விளக்க நிகழ்விலும் கலந்துகொண்டனர்.
இதில், உலக சுகாதார தினம் என்ற கருப்பொருளில் உரையாற்றிய ஸ்ரீ வியாசா கல்யாணசுந்தரம், உள ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்துக்கு ஹட யோகா மற்றும் பிராணாயாமம் எவ்வாறு துணை புரிகிறது என்பதை விளக்கினார்.
உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி கலாநிதி ஜெக்கொப் குமரேசன், ஐக்கிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி யூனா மெக்கலி மற்றும் நடிகை அனோஜா வீரசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சர்வதேச யோகாசன தினம் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. கொழும்பில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் இது குறித்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. மூன்றாவது சர்வதேச யோகாசன தினம், எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம்!