(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத்துறையில் புதிய குடியிருப்பு கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழுள்ள தோட்டங்கள் நேரடியாக அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் அவர்களுக்கு காணி உரிமத்தை வழங்கும் வேலைத்திட்டத்தை இலகுவாக முன்னெடுக்க முடியும். காணி உரிமத்தை வழங்கினால் அந்த மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் நிரந்த தீர்வினைக் காண முடியும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து 1,350 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான முன்மொழிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இது குறித்து எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஆண்டு மலையக மக்கள் தொடர்பான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அதனை புறக்கணித்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இம்முறை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அதனை நாம் வரவேற்கின்றோம். மலையக மக்களுக்கு பிரச்சினைகள் காணப்பட்டாலும் நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.
சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு கடந்த வாரம் 9 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை ஒன்பதுக்கும் மேற்பட்டதாக உயர்வடைந்துள்ளது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து கடிதமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் 1,350 ரூபா சம்பளம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன் போது தீர்வொன்றை எட்ட முடியும் என்று நாம் நம்புகின்றோம்.
பெருந்தோட்டத்துறையில் புதிய குடியிருப்பு கிராமங்களை அமைத்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாரம் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போது மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை காணப்படவில்லை. இதனால் அவர்கள் இலங்கையர்களாக அந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இதன் காரணமாக பெரும்பாலான பெருந்தோட்டங்களில் 8,000 குடும்பத்துக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் மாத்திரமே காணப்படுகின்றார். இவ்வாறான நிலைமையின் காரணமாகவே அரசாங்கத்தின் வரப்பிரசாதங்கள் நேரடியாக அந்த மக்களை சென்றடைவதில்லை. 8,000 மக்களை ஒரு கிராம உத்தியோகத்தர் நிர்வகிப்பதென்பது சாத்தியமற்றது. எனவே தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெருந்தோட்டங்களில் பெருந்தோட்ட வீடுகளை குடியிருப்பு கிராமங்களாக அங்கீகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெருந்தோட்டங்கள் கிராமங்களாக அங்கீகரிக்கப்படும் போது அந்த மக்களுக்கு புதிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கிடைக்கப்பெறும். அத்தோடு அரசாங்கத்தின் வரப்பிரசாதங்கள் நேரடியாக அந்த மக்களை சென்றடையும். எவ்வாறிருப்பினும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் லைன் அறைகள் அங்கீகரிக்கப்பட்டு விட்டால் மக்கள் அதே நிலைமையிலேயே இருப்பர். எனவே வீடுகளை வழங்கிய பின்னர் காணிகளை வழங்கினால் அது சிறந்த திட்டமாக இருக்கும் என்று இந்த கலந்துரையாடலின் போது சிலர் தமது யோசனைகளை முன்வைத்தனர்.
ஆனால் வீட்டுரிமை வேறு, காணி உரிமை வேறாகும். வீடொன்றை நிர்மாணித்து காணி உரிம பத்திரத்தை வழங்குவதும், காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதும் வெவ்வேறானதாகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு நாட்டிலும் பின்தங்கிய சமூகத்துக்கு காணி உரிமை காணப்பட்டால் மாத்திரமே அவர்களால் முன்னேற்றமடைய முடியும். தற்போது ஒரு இலட்சத்து 76,000 குடும்பங்கள் பெருந்தோட்டப்பகுதிகளில் வீடுகள்இன்றி இருக்கின்றனர். 2020ஆம் ஆண்டளவில் வருடத்துக்கு 2,000 வீடுகளை நிர்மாணிக்கக் கூடிய நிலைமை காணப்பட்டது.
அன்று ஒரு வீட்டின் மதிப்பு 9 இலட்சத்து 50,000 ஆகும். கொவிட் தொற்று, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் இந்த பெறுமதியானது 32 இலட்சம் வரை உயர்வடைந்தது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வரும் நாடொன்றுக்கு 32 இலட்சம் செலவில் எவ்வாறு 176,000 வீடுகளை அமைத்து கொடுக்க முடியும்? எனவே அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று எந்த அரசாங்கம் கூறினாலும் அது முற்றிலும் பொய்யான வாக்குறுதியாகவே அமையும். எனவே தான் காணி உரிமையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்தோம்.
115,000 மலையக மக்கள் மாத்திரமே இன்று பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுகின்றனர். எஞ்சியுள்ள 8 இலட்சத்து 50,000 பேர் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். புறக்கோட்டையில் சுமார் 7,500 பேர் தொழில் புரிகின்றனர். இவர்கள் எண்ணினால் தமது பெற்றோருக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்க முடியும். இன்று மலையகத்துக்கு 35,568 மலசலகூடங்கள் தேவைப்படுகின்றன. மலையக மக்களால் அவற்றை நிர்மாணித்துக் கொள்ள முடியாமல் இல்லை. அதற்கான வசதிகள் அவர்களுக்கு காணப்பட்டாலும், காணி உரிமை இன்மையால் ஒரு செங்கல்லைக் கூட நாட்ட முடியாத நிலைமையில் அவர்கள் காணப்படுகின்றனர்.
எனவே தான் கடந்த ஆண்டு வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவை பத்திரமொன்று தயாரிக்கப்பட்டு, அங்கீகாரமும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதற்காக ஜனாதிபதியால் 4,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி முகாமைத்துவம் தொடர்பான தரவுகள் இலங்கை நில அளவை திணைக்களத்துக்கு வழங்கப்படுகிறது. அதற்கமைய ஏற்கனவே 1,000 காணி உறுதி பத்திரங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. காணி இல்லாதவர்களுக்கு மாத்திரமின்றி, 1972இலிருந்து நிர்மாணிக்கப்பட்ட 66,000 வீடுகளில் காணி உறுதி பத்திரங்களைக் கொண்ட 15,000 வீடுகளைத் தவிர எஞ்சிய 51,000 வீடுகளுக்கும் இந்த காணி உறுதி வழங்கப்படும்.
இரு முதன்மை வங்கிகள் உள்ளிட்ட 5 வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னடுத்துள்ளோம். அவற்றில் இரு வங்கிகள் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதி காணப்படுமாயின் அவர்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. பெருந்தோட்டங்கள் கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் லையன் வீடுகள் இல்லாமலாக்கப்பட்டு, அந்த காணிகள் அங்குள்ள இளைஞர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு வழங்கப்படும். கிராமங்களாக்கும் திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழுள்ள தோட்டங்கள் நேரடியாக அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். அவ்வாறு கொண்டு வரப்பட்டால் காணி உரிமத்தை வழங்குவது இலகுவாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM