ஹரியானாவின் நிதித்துறை ஆணையாளர் நீதிமன்றம் ஒன்று, அழைப்பாணை மற்றும் பிடியாணை என்பவற்றை வட்ஸ்அப் மூலம் அனுப்ப முடிவுசெய்துள்ளது. இதற்கான அனுமதியை ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஷோக் கேம்கா வழங்கியுள்ளார்.

இதுவரை காலமும் இந்தியாவில் பிடியாணைகள் மற்றும் அழைப்பாணைகள் உள்ளிட்ட நீதிமன்ற அறிவிப்புகள், வாதிகளுக்கும் பிரதிவாதிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் தொலை நகல் மூலமே அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே ஹரியானா தலைநகர் சண்டிகாரின் குறித்த நீதிமன்றம் வட்ஸ்அப் மூலம் ஆணைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்துள்ளது.

ஹிஸார் என்ற கிராமத்தில் சொத்து விடயத்தில் மூன்று சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கு நிதித்துறை ஆணையாளர் நீதிமன்றத்திற்கு வந்தது. இம்மூவருக்கும் நீதிமன்றம் அழைப்பாணைகளை அனுப்பியது.

எனினும், சகோதரர்களில் ஒருவரான க்ருஷான் காத்மண்டுவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார். அவரை அலைபேசியில் தொடர்புகொண்டபோதும் தனது காத்மண்டு முகவரியைத் தர மறுத்துவிட்டார்.

இந்த விவகாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் கேம்கா வசம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, தற்காலத்தில் தொலைபேசி, அலைபேசி இலக்கங்களும் ஒருவரது முகவரிக்குச் சமமாகப் பார்க்கப்படலாம் என்று கூறி, ஆணையின் பிரதியொன்றை க்ருஷானின் அலைபேசி இலக்கத்துக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்குமாறு பணித்தார்.

வட்ஸ்அப்பில் தகவல் போய்ச் சேர்ந்ததைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால், ஆணை கிடைக்கவில்லை என்று அவர் கூற முடியாது என்றும் அஷோக் கேம்கா தெரிவித்தார்.