தமிழ் - சிங்களப் புதுவருடம் நெருங்கி வரும் நிலையில், போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

புதுவருடத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இணைந்து புறக்கோட்டைப் பகுதியில் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டனர். புறக்கோட்டை சந்தை மற்றும் ஐந்தாம் குறுக்குத் தெரு உள்ளிட்ட மொத்த விற்பனைச் சந்தைப் பகுதிகளை அவர்கள் மேற்பார்வை செய்தனர்.

இந்தத் திடீர் விஜயத்தையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், “அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்கு மேலதிகமாகவே சந்தையில் இருக்கின்றன. குறிப்பாக அரிசி கையிருப்பு வழக்கத்தைவிட உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான அளவு பொருட்கள் சந்தையில் உள்ளன” என்று தெரிவித்தார்.

“ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரிலேயே நாம் இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டோம். தேவையான அளவு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் இருப்பதை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

அரசின் ஆகக் குறைந்த சில்லறை விலையை விடக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் சில விற்பனை செய்யப்படுவதாகவும், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், தவறான கருத்துக்களைப் பரப்பி அதன் மூலம் அதிக இலாபம் பெற முயற்சிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.