நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார்.
மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபர், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, யாழ் மாவட்ட தனியார் பஸ் சங்கம், பிரதேச செயலகம் நல்லூர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை சாரணர் சங்கம், அன்னதான மடங்கள், தண்ணீர்பந்தல் என்பவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள்.
இக்கூட்டத்தில் திருவிழா புற ஏற்பாடுகள் தொடர்பாக பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1. ஆலயச் சூழலில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகள் 07.08.2024 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 04.09.2024 நள்ளிரவு வரை ஆலய வெளி வீதியின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.
2. பிரதான வீதித்தடைகள் பருத்தித்துறை வீதியில் மாநகர சபைக்கு முன்புறம் அரசடிச்சந்தி, கோயில் வீதியில் சங்கிலியன் வீதி சந்தி, பிராமணக்கட்டு குள வீதிச் சந்தி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். சுகாதார பாதுகாப்பு தேவைகளிற்கேற்ப மேற்படி வீதித்தடைகளின் அமைவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.
3. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல இம்முறையும் மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்னால் உள்ள குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதி ஊடாக ஆனைப்பந்திசந்தியை அடைந்து யாழ் நகரை அடைய முடியும். யாழ் நகரில் இருந்து திரும்பும் வாகனங்கள் அதே பாதை ஊடாக பருத்தித்துறை வீதியை அடைய முடியும். விசேட பெருந்திருவிழாக்களின் போது முத்திரைச்சந்தியில் திரும்பி கச்சேரி நல்லூர் வீதி ஊடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும். கோயில் வீதி வழியாக வரும் வாகனங்கள் சங்கிலியன் வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்தும், செட்டித்தெரு ஒழுங்கையூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து பயணிக்க முடியும்.
4. தூக்குக் காவடிகள் வழமை போல் பருத்தித்துறை வீதி வழியாக உள்நுழைந்து ஸ்ரீமுருகன் தண்ணீர் பந்தலில் காவடிகள் இறக்கி டிராக்டர்கள் செட்டித்தெரு வீதியூடாக வெளியேற வேண்டும்.
5. ஆலய வீதிச்சூழலில் வீதித்தடைகளுக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமை போல வாகன அனுமதி அட்டை மாநகர சபையால் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிரந்தர வியாபாரிகள் பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
6. உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
7. ஆலய வெளி வீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது.
8. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பொலித்தீன் பாவனை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
9. உற்சவ காலங்களில் ஆலய வெளி வீதி சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
10. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்.
11. உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
12. ஆலயச் சூழலில் ட்ரோன் (Drone) கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு அமைவாக நல்லூர் திருவிழா நடைபெறுவதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM