கலாநிதி ஜெகான் பெரேரா
இந்த வருடம் அக்டோபரில் நடத்தப்பட வேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு மேலாக தொங்கும் கேள்விக்குறி இன்னமும் அகன்றுபோகவில்லை. அதற்கான பதில் தொடர்ந்து பின்போடப்பட்டுக் கொண்டே போகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என்று நிலவும் குழப்பத்தை நீக்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் யோசனை இறுதியாக வந்திருக்கிறது.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறைத்த அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் சட்டபூர்வத்தன்மையை உயர்நீதிமன்றம் மூன்று தடவைகள் உறுதிப் படுத்தியிருக்கிறது.
உயர்நீதிமன்றத்தினாலோ, வேறு எந்த நீதிமன்றத்தினாலோ, பாராளுமன்றத்தினாலோ அல்லது வேறு எந்த நிறுவனத்தினாலுமோ பிரச்சினை கிளப்பப்படாத நிலையில், அதுவும் ஒன்பது வருடங்கள் கழித்து "ஆறு வருடங்கள்" என்ற சொற்களை "ஐந்து வருடங்கள்" என்று மாற்றும் ஒரே நோக்கத்துக்காக மாத்திரம் ஏன் அரசாங்கம் அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவரும் யோசனையை முன்வைத்திருக்கிறது என்று பேராசிரியர் நிஹால் ஜெயவிக்கிரம போன்ற சட்ட அறிஞர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
கொழும்பில் இடம்பெறுகின்ற தந்திரவேலைகள் வடக்கில் உள்ள வாக்காளர்களின் சிந்தனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இது தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயம் என்பதால் போலும் அவர்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பது போன்று தெரிகிறது.
வடக்கில் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நான் வண. களுப்பஹன பியரத்னவுடனும் வண. விசாகா தர்மதாசவுடனும் சேர்ந்து மூன்று நாட்களை செலவிட்டேன். பௌத்த பிக்குமாரும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரும் கைச்சாத்திட்ட "இமாலயப் பிரகடனம்" என்று அறியப்பட்ட ஆவணம் ஒன்றுக்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இவ்விருவருமே தலைமை தாங்கினர்.
நீண்டகால இனநெருக்கடிக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றுக்கு அடிப்படையாக அமையக்கூடிய சில அடிப்படைக் கோட்பாடுகளை இந்த ஆவணம் முன்வைக்கிறது. ஆனால் அவை பரந்தளவிலான பேச்சுவார்த்தை செயன்முறை ஒன்றின் ஊடாக விரிவாக ஆராயப்பட்டு திருத்தம் செய்யப்படவேண்டியவையாக இருக்கின்றன.
வடக்கில் அந்த மூன்று நாட்களும் ஒரு கணிசமான எண்ணிக்கையான சிவில் சமூக உறூப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்விமான்களைச் சந்தித்தோம். தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பாதை மற்றும் நியாயமானதும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வொன்று தொடர்பான பேச்சுவார்த்தைகள் என்று வந்தபோது பெருமளவு நல்லெண்ணமும் உணர்ச்சி வெளிப்பாடும் காணப்பட்டது.
தாங்கள் நல்லிணக்கத்துக்கு தயாராயிருப்பதாகவும் ஆனால் தெற்கில் உள்ள அரசாங்கம் எதைத் தருவதற்கு தயாராயிருக்கிறது என்பதை அறிய விரும்புவதாகவும் அவர்கள் கூறினார்கள்.
சமஷ்டித் தெரிவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா இல்லையா என்ற விடயம் குறித்தே வடங்கில் உள்ள புத்திஜீவிகள் தற்போது தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்பேசும் மக்கள் அதிகப்பெரும்பான்மையினராக வாழும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதற்காக களமிறக்கப்படக்கூடிய ஒரு தமிழ் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்பதை அந்த யோசனையை ஆதரிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை தேர்தலில் நிறுத்துவதன் மூலமாக சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையிலான அரசியல் தீராவொன்றைக் காணும் தங்களது அபிலாசையை தமிழ் மக்கள் கைவிடவில்லை என்ற செய்தியை தேசிய அரசியல் சமுதாயத்துக்கும் குறிப்பாக சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிக்கமுடியும் என்று அவர்கள் நப்புகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் முன்று பிரதான வேட்பாளர்களாக விளங்கக்கூடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் வேறுபட்ட வடிவங்களில் தமிழர்களின் அபிலாசைக்கு சில சலுகைகளை அறிவித்திருக்கிறார்கள். அதாவது தற்போது நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்று பத்து வருடங்களுக்கும் குறைவான காலப் பகுதிக்குள் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு,கிழக்கு மாகாணங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கக்கூடிய சமஷ்டி ஆட்சிமுறையொன்றை தமிழ் அரசியல் சமுதாயம் விரும்பியது. பாராளுமன்றத்தில் சந்தித்த தொடர்ச்சியான பல தோல்விகளுக்குப் பின்னரே அவ்வாறு ஒரு முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
நிரந்தரமான இனத்துவ பெரும்பான்மையின் பாராளுமன்ற பலத்தை எதிர்கொண்ட தமிழ் அரசியல் சமுதாயம் ( அண்மைய இந்திய வம்சாவளி தமிழர்களின் ) குடியுரிமையையும் ( தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ) மொழிச் சமத்துவத்தையும் இழந்தது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரினால் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் வாக்குகளில் ஒரு உயர்ந்த விகிதத்தைப் பெறக்கூடியதாக இருக்குமானால், அது சமஷ்டித் தீர்வொன்றுக்கான அபிலாசை தொடருவதற்கான சான்றாக அமையும்.
அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒரு அதிகாரப்பகிர்வு முறையை வழங்கும் ஒரு சமஷ்டி ஆட்சிமுறை தற்போதைய மாகாண சபை முறையில் இருந்து வேறுபட்டது. அரசியலமைப்பை மீறி அதிகாரத்தில் இருப்பவர்களின் அரசியல் சுயநலம் காரணமாக ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக மாகாணசபைகள் இயங்காமல் இருக்கின்றன.
தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் யோசனை முன்வைக்கப்பட்டதற்கு இரண்டாவது காரணம் தற்போது தமிழ் அரசியல் சமுதாயத்திற்குள் நிலவுகின்ற பிளவுகளாகும். பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகள் சேர்ந்து அமைத்த அரசியல் கூட்டணிகள் சிதறுப்பட்டுக் கிடக்கின்றன.
தங்களது தலைமைத்துவம் குறித்தோ அல்லது தங்களது கொள்கைகள் குறித்தோ தீர்மானிக்க இயலாத அளவுக்கு அரசியல் கட்சிகள் மத்தியிலான பிளவுகள் ஆழமானவையாக இருக்கின்றன. இதன் விளைவாகவே தமிழ் சிவில் சமூகத் தலைவர்கள் பெரும் எண்ணிங்கையான சிவில் அமைப்புக்களையும் குழுக்களையும் அணிதிரட்டி ( தற்போது 89 அமைப்புக்கள் என்று கூறப்படுகிறது) பிளவுண்டு கிடக்கும் தமிழ் அரசியல் சமுதாயத்தை ஐக்கியப்படுத்தும் செயன்முறையை தொடங்குவதற்கு பொதுவேட்பாளர் ஒருவரை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆனால், பொது வேட்பாளர் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் மாத்திரமல்ல, கட்சிகளுக்கு உள்ளேயும் முரண்பாடான கருத்துக்கள் இருப்பதாக இந்த விவகாரம் தொடர்பில் விமர்சன ரீதியாக எழுதியிருக்கும் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் கூறியிருக்கிறார்."தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான யோசனைக்கு ஆதரவு திரட்டுவதற்கு ' மக்கள் மனு ' என்ற ஒரு சிவில் சமூக அமைப்பு முதலில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது. தற்போது தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற புதிய சிவில் சமூக அமைப்பே பொதுவேட்பாளர் யோசனைக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை தீவிரமாக முன்னெடுக்கிறது."
ஃபொக்ஸ் உடன்படிக்கை
தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கும் தெரிவு வடக்கில் ஏகமானதான ஒன்று அல்ல. எந்தவொரு ஜனநாயக சமுதாயத்திலும் ஏகமனதான தீர்மானங்கள் இருப்பதில்லை. ஆனால் அதற்கு பதிலாக பல்வகைமையும் வேறுபாடும் ஒரு பலவீனமாக இல்லாமல் பலமாக மாறக்கூடியதாக கையாளப்படவேண்டியது அலசியமாகும்.
பொருத்தமான தமிழ்ப் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அந்த வேட்பாளர் வாக்காளரைக் கவரக்கூடியவராகவும் பொருத்தமானவராகவும் விளங்குவதற்கு அவசியமான குணாதிசயங்கள் மற்றும் கொள்கைகள் பற்றியும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
வேட்பாளராக களமிறங்குவதற்கு ஏற்கெனவே சிலர் முன்வந்திருக்கிறார்கள். தற்போது இது விடயத்தில் கருத்தொருமிப்பு கிடையாது. இறுதியில் இந்த விடயம் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக மேலும் பிளவுகளை தோற்றுவித்து விடவும் கூடும்.
பொதுவேட்பாளர் கணிசமான ஆதரவைப் பெறுவாரேயானால் அவரே தமிழ் மக்களின் எதிர்காலத் தலைவராக நோக்கப்படக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. அத்தகைய ஒரு நிலைவரம் ஏற்படக்கூடும் என்பது குறித்து தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்களுக்கு சந்தேகங்கள் இருக்கலாம். சில தமிழ் அரசியல் கட்சிகள் பொதுவேட்பாளர் கோட்பாடு குறித்து எச்சரிக்கை உணர்வைக் கொண்டவையாக இருக்கின்றன.
மூன்று பிரதான வேட்பாளர்களும் இனவாத அல்லது தேசியவாத ஆரவாரப் பேச்சுக்களில் இருந்து விடுபட்டவர்களாக தோன்றுவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பெ்றுத்தவரை ஒரு தனித்துவமான அம்சமாகும். இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலுமான உறவுகளைப் பொறுத்தவரை ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்கவும் நல்ல ஒரு கடந்த காலத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பேச்சுக்களில் அல்லது நடவடிக்கைகளில் இன, மத சிறுபான்மைச் சமூகங்களைக் குறிவைத்ததில்லை.
தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய ஆற்றலையும் பண்புகளையும் தாங்கள் கொண்டிருப்பதாக அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் பிரசாரங்களின் ஒரு பகுதியாக அவர்கள் மூவரும் கடந்த ஒரு சில மாதங்களாக வடக்கிற்கும் கிழக்கிற்கும் அடிக்கடி விஜயங்களை மேற்கொண்டிருந்தார்கள்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவாரேயானால் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய மூன்று வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிப்பதற்கான தெரிவை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் வாக்காளர் இழப்பதாகவே முடியும். தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி மக்களின் நல்வாழ்வுக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடக்கூடிய அதிகாரத்தைக் கொண்டவராக இருப்பார். வடக்கு, கிழக்கு மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் அவர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடவும் ஊக்கம் கொள்வார்.
இத்தகைய பின்னணியில், மூன்று பிரதான வேட்பாளர்களில் ஒவ்வொருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தங்களது முன்னுரிமைகளும் உள்ளடக்கப்படுவதை உறுதிசெய்வதே தமிழ்ச் சிவில் சமூகம் பரிசீலனைக்கு எடுக்கக்கூடிய ஒரு மாற்றுத் தெரிவாக இருக்கும். தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும் அந்த முன்னுரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஆதரவை வழங்குவதாக ஒவ்வொரு வேட்பாளரும் உறுதியளிக்க வேண்டியதும் அவசியமாகும்.
அத்தகைய உடன்படிக்கைக்கு இலங்கையில் முன்னுதாரணமும் இருக்கிறது. விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாக இருப்பதற்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் 1997 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் அன்றைய பிரதி வெளியுறவு அமைச்சர் லியாம் ஃ பொக்ஸின் மத்தியஸ்தத்தில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர்.
இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் விடுதலை புலிகள் உட்பட எந்த கட்சியுடனோ,குழுவுடனோ அல்லது தனிநபர்களுடனோ அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தைகளை எதிர்க்கட்சி மலினப்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யவே அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து முன்னெடுக்கக்கூடிய சமாதான முயற்சியை பிறகு எதிர்க்கட்சியாக வரும் முன்னைய ஆளும்கட்சியும் குழப்பக்கூடாது.
அந்த உடன்படிக்கையை இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு " முக்கியமானதும் பெறுமதியானதுமான ஒரு நடவடிக்கை " என்று வர்ணித்த அன்றைய வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அதை ஒரு நீண்ட பயணத்தின் முதல் அடி என்றும் குறிப்பிட்டார்.
பாதை உண்மையில் நீண்டதாகவே இருந்தது. அந்த நேரத்தில் அது தோல்வியில் முடிந்தது. ஆனால் இலங்கையும் அதன் மக்களும் அதற்கு பிறகு நீண்ட தூரத்தைக் கடந்து வந்துவிட்டார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும் முறைமை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்த, தொடர்ந்தும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்ற அறகலய இயக்கம் காரணமாகவும் வடக்கு மக்களிடமும் நாட்டின் ஏனைய பகுதி மக்களிடமும் மாற்றத்துக்கான நல்லெண்ணமும் திறந்தபோக்கும் காணப்படுகிறது. இந்த வாய்ப்பைப் தவறவிடாமல் பயன்படுத்தி சிறந்த நடைமுறைகளில் இருந்தும் கடந்த காலத் தோல்விகளில் இருந்தும் படிப்பினைகளைப் பெற்று புதிய முன்முயற்சிகளை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM