ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம் ஒன்றை அட்டன் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

பஸ் நிலையத்திலிருந்த சடலத்தை நபரொருவர் கண்டறிந்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் அலுத்கம பகுதியை சேர்ந்த பொண்ணுசாமி கணேஷன் (வயது 47) மூன்று பிள்ளைகளின் தந்தை என ஹட்டன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகம் மற்றும் உடற்பாகங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள உயிரிழந்தவர் ஹட்டன் நகரின் பொதி சுமக்கும் தொழில் ஈடுப்பட்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் குறித்த பஸ் நிலைய பகுதியில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த இவர் சிலரால் தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு எதும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.