– எஸ்.ஜோன்ராஜன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளின் மீதான அடக்குமுறைகளுக்கும் அத்து மீறல்களுக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்ட அப்பிரதேசமக்களின் போராட்டம் 92 ஆவது நாளையும் தாண்டி தொடர்கிறது. மேற்படி செயலகத்தை நாட்டிலுள்ள இதர செயலகங்களுக்கு நிகராக முழு அதிகாரங்களுடனும் இயங்க அனுமதிக்குமாறு கோரியே இப்போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது!
ஏறத்தாழ நூறு வீதம் தமிழர்களின் குடிப்பரம்பலைக் கொண்டுள்ள இப்பிரதேசத்தில் (9798 குடும்பங்களைச் சேர்ந்த 39000 பேர் வசிக்கிறார்கள். இவர்களில் முஸ்லிம்கள் 3215 பேர் மாத்திரமே. கல்முனைதெற்குபிரதேசசெயலகபிரிவைப் போல இங்கும் 29 கி.சே. பிரிவுகள் இவற்றுள் ஆறு பாரம்பரியதமிழ்க் கிராமங்களும் உள்ளடக்கம்.) அதன் செயலகத்தைக் கடந்த 28.07.1993 இல் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய ஒரு முழுமையான செயலகமாக இயங்கவிடாமல் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எதுவித வலுவான காரணங்களுமின்றி, கல்முனை தெற்கு எனப்படும் முஸ்லிம்களுக்கான செயலகத்தின் ஓர் உப அலுவலகமாக தரமிறக்கிவைத்துள்ளமை, மற்றும் இச்செயலகத்தின் நிதி,காணி,மற்றும் ஆளணிகள் யாவும் கல்முனை தெற்கு செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை ஆகியவற்றிற்கும் கண்டனம் தெரிவித்தே அப்பிரதேசமக்களால் இப்போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது!
கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் ஆளுகைக்குட்பட்ட நூறு வீதம் முஸ்லிம்கள் வசிக்கும் சாய்ந்த மருது பிரதேசத்தில் அவர்களுக்கென்று ஒருதனியான செயலகம் கடந்த 2002 இல் திறக்கப்பட்டு,அது சகலஅதிகாரங்களுடனும் தனியே இயங்கி வருகையில்,அதேபோன்று தமிழர்கள் வசிக்கும் கல்முனை வடக்கு பிரதேசம் மட்டும் சகல அதிகாரங்களுக்கும்,நிதி மற்றும் ஆளணித் தேவைகளுக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை நம்பியும் எதிர்பார்த்தும் இயங்குவது எந்தவிதத்தில் நியாயமானது?
கடந்த 1993 இல் பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு செயலகம் உருவாக்கப்பட்டபோது,அதே தொடரில் மட்டு மாவட்டத்தில் கோறளைமத்தி (வாழைச்சேனை) கோறளைதெற்கு (கிரான்),அம்பாறை மாவட்டத்தில் நாவிதன் வெளி,வவுனியாவில் தெற்கு ஆகிய பிரதேச செயலகங்களுக்கும் அங்கீகாரமளிக்கப்பட்டு,அவை சகல அதிகாரங்களுடனும் சுமுகமாக இயங்கிவருகின்றன. ஆனால்,கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் மட்டும் ஏனிந்த மாற்றான் தாய் மனோபாவம் கடைப்பிடிக்கப்படுகிறது? கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குள் இருக்கிற தமிழ் மக்களின் பூர்வீகநிலங்களையும் இயற்கையான நீர் நிலைகளையும் கல்முனை தெற்கு பிரதேசசெயலகத்தின் அனுமதியின் பேரில் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம்கள் ஆக்கிரமித்துவருவதாகவும்,அத்துடன் தமிழர்களின் கலாசாரபண்பாட்டுஅடையாளங்களை இல்லாதொழிப்பதில் முனைப்புக் காட்டுவதாகவும் போராட்டக்காரர்கள் மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகவளாகத்தினுள் ஊழியர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய இந்துஆலயமொன்றை உடைத்த கற்றுமாறுகோரி முஸ்லிம்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை இதற்கொரு உதாரணமாகும்.
ஜனாதிபதியை தலைமையாகக் கொண்ட அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகின்ற பிரதேச செயலகமொன்றை ஓர் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான,அல்லது அப்பிரதேச செயலாளர் பிரிவை இல்லாமல் செய்வதற்கான அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கோ, அரசாங்க அதிபருக்கோ, அல்லது வேறெந்த ஏற்புடைய அதிகாரிக்கோ இல்லை. இருந்தாலும் சிலஅதிகாரங்களைமேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.
அதே வேளை வடக்கு செயலகம் இதுவரை வர்த்தமானிப்படுத்தப்படாமலிருப்பதுஅதன் தரமிறக்கத்திற்கான ஒரு குற்றச்சாட்டாகவும் முன்வைக்கப்படுகிறது. அது,ஆடத்தெரியாதவள் அரங்கு கோணல் என்று சொன்ன மாதிரியான ஒரு குற்றச்சாட்டாகும். கிழக்கில் சிலசெயலகப் பிரிவுகள் வர்த்தமானிப் பிரசுரமில்லாமல் அமைச்சரவை அங்கீகாரத்துடன் மாத்திரம் நெடுங்காலமாக முழு அதிகாரங்களுடனும் இயங்கி வருகின்றமையை இதற்கு உதாரணம் காட்டவியலும். சில செயலகங்கள் காலம் கடந்தும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதற்கு இடைப்பட்டகாலத்தில் அவை முழு அதிகாரங்களுடனும் இயங்கிவந்துள்ளமையையும் இங்குகுறிப்பிடவேண்டும்.
கல்முனை வடக்கு செயலகத்தை அதன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தை முன்னிட்டு இதர பிரதேச செயலகங்களுக்கு நிகராக இயங்கவைக்க உத்தரவிடுமாறு கோரிகல் முனைமேல் நீதிமன்றில் ஜனாதிபதிசட்டத்தரணி சுமந்திரன் எம். பி யூடாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் தீர்ப்புவரும் வரை போராட்டங்களைக் கைவிட்டு பொறுத்திருக்குமாறும் அம்பாறை மாவட்ட.தே. கூட்டமைப்பு அரசியல்வாதிகள் கோரிவருகின்றனர்.
அதற்கு போராட்டக்காரர்களின் பதில் பின்வருமாறுஅமைந்துள்ளது! அதாவது,வழக்கில் ஒருவேளை தங்களுக்குச் சார்பாகதீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதற்குக் கட்டுப்பட்டு அதிகாரங்களைக் கையளிக்கும் மனோபாவம் எதிர்த்தரப்புக்கு இல்லாமல் போனால் என்ன செய்வதென்ற கேள்வியை போராட்டக்காரர்கள் எழுப்புகிறார்கள்.
உதாரணத்திற்கு புணாணை மயிலத்தமடு,மற்றும் பெரியபோர தீவு விவேகானந்தபுரம் கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள் அத்துமீறி அபகரிக்கப்பட்டமையையும்,அங்கெல்லாம் பலவந்தமாக சிங்களக் குடியேற்றம் நிகழ்ந்து குடியேற்றக்காரர்கள் பொலிஸ் காவலரண்களுடன் பாதுகாக்கப்படுகின்றமையையும்,அவர்களை வெளியேற்ற ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டும்,அதைப் பொருட்படுத்தாமல் அரசாங்கமே அவர்களைப் பாதுகாப்பதையும், அதனை எதிர்த்து கடந்த ஒரு வருடகாலமாக பண்ணையாளர்கள் தெருவில் கூடியிருந்து மறியல் போராட்டம் நடத்தி வருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதனைவிட இன்னொருசுவாரஸ்யமானதகவலும் போராட்டக்காரர்களிடையேஉலவுகிறது. அதாவது, எதிர்த்தரப்பு எத்தகைய மனோப்பாவத்துடன் இருந்தாலும் கூட,தேர்தல் வரும் வரை இப்பிரச்சினைக்கு சுமுகமானதொரு தீர்வைத்தர அரசாங்கமே விரும்பவில்லையாம்!
தேர்தல் சமயத்தில் ஜனாதிபதியே இவ்விடயத்தில் தலையிட்டு வடக்கை சுயாதீனம் மிக்கதொரு செயலகமாகஅப்பகுதி மக்களிடம் கையளிக்கமனதாயிருக்கிறாராம். அதாவது செயலக பிரிவுக்குட்பட்டசுமார் 20 ஆயிரம் வாக்காளர்களையும் தமது பக்கம் திருப்ப ஜனாதிபதி இப்போதே திட்டமிட்டு விட்டாராம். எப்படி இருக்கிறதுதிட்டம்? எலிகளுக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்பது இது தானோ?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM