வரலாற்றில் பிரசித்தி பெற்ற வணிக மற்றும் பொருளாதார மையமாக அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாற்றுவதற்கு உரிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தஞ்சாவூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் நகரங்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்றன. ஆனால், அதன் நான்காவது நகரமாக கருதப்படவேண்டிய அநுராதபுரத்தின் முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகள் இதுவரையில் செய்யப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அநுராதபுரம் கலாசாரம், கல்வி, வர்த்தகம் மற்றும் பொருளாதார பெறுமதிகளை உலகுக்கு தெரியப்படுத்தி அதன் புராதன அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து, அடுத்த வாரம் இலங்கைக்கு வரவிருக்கும் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளருடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும், அந்த பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் முன்வந்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிய வளாகத்தில் LTL வர்த்தக குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வில் இன்று (13) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஜய ஸ்ரீ மகா போதிய மற்றும் அட்டமஸ்தான வளாகங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்க அரசாங்கம் ஒத்துழைக்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
இன்று அநுராதபுரம் புனித நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர் சியம் மகா நிகாயவின் மல்வத்து பீட பிரதம சங்கநாயக்கரும் அட்டமஸ்தான விகாராதிபதியுமான வண. பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அதனையடுத்து ஜய ஸ்ரீ மகா போதியை தரிச்சுத்து ஆசி பெற்றுகொண்ட ஜனாதிபதி சூரிய சக்தி கட்டமைப்பை திறந்துவைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
அதனையடுத்து அனுராதபுரம் புனித நகருக்கு வருகைத் தந்திருந்த மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
காபன் விமோசனத்தை மட்டுப்படுத்தி, நிகர பூச்சிய உமிழ்வை அடைவதற்காக அரசாங்கத்தின் தேசிய கொள்கையை சாத்தியப்படுத்துவதன் ஒரு அங்கமாக LTL ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் கிலோ வோட் 150 சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு ஜய ஸ்ரீ மகா போதிய வளாகத்தில் நிறுப்பட்டுள்ளது.
ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தின் முழுமையான மின்சக்தி தேவையை இந்த சூரிய சக்தி கட்டமைப்பு பூர்த்தி செய்யும் என்பதோடு, வரலாற்றில் முதல் முறையாக ஜய ஸ்ரீ மஹா போதிய வளாகம் முழுமையாக காபன் விமோசனம் பெற்ற பூச்சிய உமிழ்வை கொண்ட வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
"சூரிய சக்தி உள்ளிட்ட மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்திகளை இலங்கையின் அறிமுகப்படுத்த முன்வரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்கும் LTL நிறுவனத்திற்கு நன்றி கூற வேண்டும். அதனால் இந்த நிறுவனம் உலக பிரசித்தமான நிறுவனமாக மாறியுள்ளது. ஆனால், அவர்களில் ஆரம்பம் இலங்கையில் நிகழந்தது என்பதை அவர்கள் இன்றும் மறக்கவில்லை. அதனால் ஜய ஸ்ரீ மகா போதிய வளாகத்திலும் இவ்வாறான பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்காலத்திலும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம். அநுராதபுர நகரத்துக்கு ஆயிரம் வருடங்கள் பழமையான வரலாறு உள்ளது. அதேபோல் அநுராதபுரம் பழமையான வர்த்தக மற்றும் பொருளாதார மையமாகவும் திகழ்ந்துள்ளது. இத்தகைய பெறுமதியான நகரத்தில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடி கலாசார முக்கோண வலயம் ஆரம்பிக்கப்பட்டது. பொலன்னறுவை, சிகிரியா, தம்புள்ளை, கண்டி, அநுராதபுரம் போன்ற நகரங்கள் இதனால் பிரசித்தமடைந்தன. அதன் பின்னர் எந்த புதிய திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் நாம் இப்போது இந்த நகரத்தில் தொல்லியல் ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
தற்போது காம்போடியாவின் அங்கோர் நகரில் யுனெஸ்கோ அமைப்பு பிரான்ஸ் உட்பட்ட நாடுகளின் நிதியுதவியுடன் பெரிய அளவிலான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 30-40 வருடங்களாக இந்த பணிகள் இடம்பெறுகின்றன. அது போலவே யுனெஸ்கோவினால் பிரான்ஸ் உதவியுடன் லாவோஸ் - இலுவாங் பிரபாங் நகரத்திலும் அந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சீன அரசாங்கத்தின் சொந்த நிதியை கொண்டு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அநுராதபுர நகரத்தில் இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தொல்லியல் திணைக்களம் மற்றும் கலாசார முக்கோண வலயம் ஆகிய இரு தரப்பினருக்கும் இந்த பணிகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
அதேபோன்று மகா விகாரையில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ள டர்ஹெம் பல்கலைக்கழகத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி அந்த பணிகளையும் விரைவில் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். அந்த பணிகள் கலாநிதி பிரசன்ன குணவர்தனவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மகா விகாரை என்பது அநுராதபுர வரலாற்றின் ஒரு பகுதியாகும். அதனால் அநுராதபுர நகரம் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக யுனெஸ்கோ அமைப்பின் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.
நீண்ட காலங்களுக்கு இந்த நகரத்தின் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுமாறு அவரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளேன். இந்த பணிகளின்போது எமக்கு ஒத்துழைக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் முன்வந்துள்ளன. இவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல தீர்மானித்துள்ளோம்.
மதுரை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் பற்றி பேசுகின்ற நாம் அதன் நான்காவது நகரமாக அநுராதபுரத்தை மறந்துவிட்டோம். எனவே அநுராதபுர நகரத்தின் அபிவிருத்திக்காக இந்த பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு இணையாக அநுராதபுரத்தில் பல ஹோட்டல்களையும் அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் இந்த நகரத்துக்குள் பாரிய முன்னேற்றம் ஏற்படும்" என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சியம் மஹா நிகாயவின் மல்வத்து பீட பிரதம சங்கநாயக்கரும் அட்டமஸ்தான விகாராதிபதியுமான வண. பல்லேகம ஹேமரதன தேரர் தெரிவிக்கையில்,
இந்த நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு மகா விகாரை பீடத்தின் ஆசிர்வாதம் கிட்டும். ஜனாதிபதி இது போன்ற புண்ணியங்கள் கிடைக்கக்கூடிய பல பணிகளை செய்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு மின்சாரம் குறித்த நெருக்கடியிருந்தது. அந்த நிலைமையை சீர்படுத்த ஜனாதிபதியால் முடிந்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களின் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் காணப்பட்டன.அந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் சூரிய சக்தியால் மின்சாரம் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் திட்டம் வெற்றிகரமாக மாறியுள்ளது. இன்று ஜய ஸ்ரீ மஹா போதிய வளாகம் சூரிய சக்தியால் ஒளிமயமாகிறது. தர்மத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு இதற்கான புண்ணியம் கிடைக்கும். அவருடைய அனைத்து எண்ணங்களும் ஈடேரட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகையில்,
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டு செல்லும் செயற்றிட்டம் வலுவடைந்திருக்கிறது. அதற்காக பல்வேறு பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்போது மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கி அந்த துறையை பலப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அதேபோல் நெட் மீடரின் திட்டத்தின் கீழ் பாவனை செய்யும் மின்சார அலகுகளுக்கு மாத்திரம் கொடுப்பனவு செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின் வசதியை வழங்கும் செயற்றிட்டத்தை துரிதப்படுத்தும் வகையிலேயே இன்று ஜய ஸ்ரீ மகா போதியவுக்கு சூரிய சக்தி கட்டமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கான பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு LTL வர்த்தக நிறுவனத்தினால் ருன்வெலி மகா சாயவில் மின்சார ஒளிக் கட்டமைப்பொன்று நிறுவப்பட்டது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். LTL நிறுவனம் மின்சார சக்தி துறையில் பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்திய நிறுவனம்.
இலங்கை தனது தொழிலை ஆரம்பித்து சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பே அதற்கு காரணமாகும். 2002ஆம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்ட வேளையில் 18 மணித்தியால மின்வெட்டு காணப்பட்டது.
2022ஆம் ஆண்டிலேயே அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் 13 மணித்தியால மின் வெட்டு காணப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களுக்கு அந்த நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடிந்தது.
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விரிவுபடுத்த இந்தியாவிடமிருந்து 10 டொலர் மில்லியன்கள் நன்கொடையாக கிடைத்திருக்கிறது. அதன்படி, 100 டொலர் மில்லியன் பெறுமதியானதாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
LTL நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி நுஹுமான் மரிக்கார் கூறுகையில்,
வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி கட்டமைப்பை பொருத்தும் செயற்றிட்டம் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. 150 மெகாவொட் வலுசக்தியை உற்பத்தி செய்வதற்கான நிலையம் சியம்பலாண்டுவ பிரதேசத்தின் ஆரம்பிக்கப்படவுள்ளது. வலுசக்தி தேவையை பூர்த்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற LTL நிறுவனம் அர்ப்பணிக்கும் என்றார்.
மாகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM