(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
முப்பது வருடகால யுத்தம் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இனவாதம் மதவாதத்தைப் பரப்பி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) மதத் தீவிரவாதத்தினை தடுப்பதன் அவசியம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கொண்டுவந்த தனிநபர் பிரேரணை தொடர்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் எனும்போது 30 வருட யுத்தமும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுமே எமக்கு நினைவுக்கு வருகிறது.
ஈஸ்டர் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொள்ளப்பட்டனர். 500க்கும் அதிகமானவர்கள் காயங்களுக்கும் அங்கவீனமும் அடைந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதற்காகத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் எதுவும் செயற்படுத்தப்படாமல் இருக்கின்றன.
குறிப்பாக பொலிஸ் அதிகாரிகள், குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராகத் தண்டனைச்சட்ட கோவையின் கீழ் வழக்குத் தொடுக்க முடியுமானால் வழக்கு தொடுக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிக்கையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை இதுவரை இந்த அரசாங்கம் செய்யவில்லை.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதாக மக்கள் ஆணையை அரசாங்கம் பெற்றாலும், அரசாங்கம் என்றவகையில் இதில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் மாத்திரமல்ல, வெளிநாட்டவர்களுக்குக் கூட நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. அதனை அரசாங்கம் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
அதேபோன்று நாட்டுக்குள் இனவாத செயற்பாடுகளைப் பரப்பி, சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்திய பலர் அரசாங்கத்தில் இருக்கின்றனர். வைத்தியர் ஷாபி சகாப்தீன், மலட்டுக் கொத்து, மலட்டு உள்ளாடை என இனவாத பிரசாரம் மேற்கொண்டு, நாட்டில் இன ஐக்கியத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
அதேபோன்று நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எல்.எல்.ஆர். ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்தவில்லை.
அந்த பிரதேசங்களில் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாமல் போயிருக்கிறது. அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியாமல் போயிருக்கிறது. அந்த மக்களின் அடிப்படை வசதிகளைக்கூடச் செய்துகொடுக்காமல் இருக்கிறது. அப்படியானால் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் மறந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று இனங்களுக்கிடையில் பிரிவினை வாதத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM