(எம்.எப்.எம். பஸீர்)

கொழும்புக்கு தெற்கு கடற்பரப்பில் தீ பரவலுக்கு உள்ளான  எம்.ஏ.எஸ். டெனியலா கப்பலில் இருந்து இலங்கை கடலில் இரசாயனம் மற்றும் எரிபொருள் பதார்த்தங்கள் கலந்துள்ளனவா? என்பது தொடர்பிலான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ஆய்வுக்காக விசேட குழுவொன்று கப்பல் தீப்பற்றிய கடற்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார்.

இந்த குழுவினர் வௌ;வேறு கோணங்களில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபையின் பொது முகாமையாளர் கூறினார்.

எதேனுமொரு வகையில் இலங்கை கடற்பரப்பினுள் எரிபொருள் பதார்த்தங்கள் கலந்திருப்பின் அவற்றை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து எகிப்து நோக்கி பயணித்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான எம்.எஸ்.சீ. டெனியலாவில் பரவிய தீ நேற்று பிற்பகல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கூட்டாக மேற்கொண்ட முயற்சியினால் கப்பலில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது.

கப்பலில் இருந்த கொள்கலன்களில் இரசாயனப் பதார்த்தங்கள் இருந்தமை தெரியவந்ததை அடுத்து, இலங்கைக்கு 13 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கடலில் வைத்து தீயை அணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

தீ பரவலுக்கு இரசாயன பதார்த்தங்களே காரணம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே, கடலில் இரசாயனம் கலந்துள்ளதா? என ஆராய சமுத்திர சூழல் பாதுகபபு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.