வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

வடகொரியா பிராந்திய நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை  அச்சுறுத்தும் வகையில்,  தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருவதோடு, பல்வேறு கட்ட பரிசோதனைகளை சர்ச்சைகளுக்கு மத்தியில் மேற்கொண்டும் வருகிறது. 

இந்நிலையில் ஐ.நா. பொருளாதார தடை, உலக நாடுகளின் கண்டனம் என எதையும் பொருட்படுத்தாமல் தனது படைபலத்தை அதிகரித்து வரும் வடகொரியா, சமீபத்தில் ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தமைக்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

குறித்த பிராந்திய பதற்றத்தை தகர்க்கும் முகமாகவும், வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தென்கொரியா புதிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. அத்தோடு தென்கொரியாவின் தயாரிப்பான குறித்த ஏவுகணையானது 800 கி.மீ. தூரம் வரை சென்று வடகொரியாவின் எந்த நகரையும் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பரிசோதனை வெற்றி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நவீன ஏவுகணைகளை நடப்பாண்டில் அந்நாட்டு இராணுவத்தில் இணைத்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.