மஞ்சுதவழ் மலைமுகடும் காடும் பச்சைப்
பட்டாடை விரிப்புப்போற் பரந்து யாண்டும்
மிஞ்சிவளர் தேயிலையும் தெளிந்து தண்ணென்று
ஒழுகும்சிற் றாறுகளும் சிறைவி ரித்து
மஞ்ஞையினம் பயில்நடமும் சான்ற பெட்பின்
தொலஸ்பாகை தாமரைவல் லிப்ப திக்கண்
வஞ்சிவள்ளி தேவானை மருங்கி ருக்க
வைகுதிரு முருகனடி போற்றல் செய்வாம்!
இலங்கையின் மலையகத்தில், கண்டியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு அழகான நகரம்தான் தொலஸ்பாகை என்ற இடமாகும். சுமார் 3.500 அடி உயரத்தில் இருக்கும் இந்த நகரத்தில்தான் தாமரவல்லி தேயிலைத் தோட்டம் இருக்கின்றது. இது ராக்சாவா (Reexawa) மற்றும் கந்தக்கடை இடங்களுக்கு நடுவே அமைந்திருக்கின்றது. தாமரவல்லி தேயிலைத் தோட்டத்தின் மையப்பகுதியில் அமைந்திருப்பதுதான் தொலஸ்பாகை தாமரவல்லி ஸ்ரீமுருகன் ஆலயம். இங்கே வள்ளி, தெய்வானை சமோதரராய் எழுந்தருளி அருள் பாலிப்பவர்தான் சைவக் கடவுளான புஷ்பஸ்கந்தன் என்றழைக்கப்படும் ஸ்ரீமுருகன். இவர்களை விட முக்கிய தெய்வங்களான விநாயகரும், அம்மனும் இங்கு எழுந்தருளியிருக்கின்றார்கள். இக்கோயிலின் தலவிருட்சமாக மாமரமும், புனிததீர்த்தமாக மாகாஓயாவின் கிளை அருவியும் அருகே அமைந்திருக்கின்றன.
இந்து சமய மரபில் உருவ வழிபாடு தோன்றிய காலத்தைத் தொடர்ந்து கோயில்களும் உருவாகின. பொதுவாக இந்துக் கோயில்களின் அமைப்பைப் பார்த்தால் கோயில் மண்டபம், கற்பக்கிரகம், சுற்றுப்பிரகாரம், கோபுரம் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் கர்ப்பக்கிரகம் உட்பீடம், அதிஸ்டானம், பாதவர்க்கம், பிரஸ்தானம், விமானம், தூபி போன்ற அமைப்பைக் கொண்டது. இந்தக் கட்டமைப்பு வேதம் சார்ந்த ஆகமங்களின்படி, இந்துமத தத்துவங்களை உருவங்கள் மூலமாக வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டவை. இந்து மதத்தின் அடையாளமாக இந்தக் கோயில்கள் அறம், பொருள், இன்பம், வீடுபேறு, மற்றும் கர்மாக்களைச் சித்தரிக்கும் வகையிலான சின்னங்களைக் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் உள்ள கோயில்கள் அனேகமானவை தென்னிந்திய கட்டடக் கலையைக் கொண்டுள்ளன. அதாவது தமிழர் கட்டடக் கலையின் வளர்ச்சியை இவை எடுத்தக் காட்டுகின்றன. மூர்த்தி அமர்ந்திருக்கும் இடத்தை கர்ப்பக்கிரகம், மூலஸ்தானம், கருவறை, என்றும் அழைப்பார்கள். கோபுரத்தில் இந்து சமயம் சார்ந்த சிற்பங்கள் இருக்கும். உச்சியில் இருப்பதைக் கலசம் என்று அழைப்பர். சிவபெருமானின் வாகனமாகிய நந்தியை உள்ளே நுழையும் போது காணமுடியும்.
பல்லவர் காலத்தில் தான் குடவரைக் கோயில்கள் உருவாகின. தொடர்ந்து சோழர்காலத்தில் கருவறை விமானங்கள்தான் உயரமாகக் கட்டப்பட்டன. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பாண்டியர் காலத்தில்தான் கோபுரங்கள் தனியாக உயரமாக அமைக்கப்பட்டன. சுற்று வட்டாரத்தில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் அமைந்ததுதான் தொலஸ்பாகையில் உள்ள தாமரவல்லி ஸ்ரீமுருகன் ஆலயம். இந்த ஆலயம் அமைந்த வரலாற்றை முதலில் பார்ப்போம். 1948 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானியருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களை அவர்கள் விற்கத் தொடங்கினார்கள்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், கோடீஸ்வரருமான திரு. ஏ.வி. கிருஷ்ணபிள்ளை அவர்கள் மலேசியாவில் இருந்து திரும்பிவந்து தேயிலைத் தோட்டத் தொழிலில் முதலீடு செய்ய முடிவு செய்தார். அதன் பலனாக ஆங்கிலேய நிறுவனமான சிம்ஸன் நிறுவனத்திடம் இருந்து 1000 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தையும் அதனுடன் இணைந்த தொழிற்சாலையையும் 1954 ஆம் ஆண்டு அக்ரோபர் 1 ஆம் திகதி கொள்வனவு செய்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். சைவ பக்தர்களான அவரது குடும்பத்தினருக்கு வழிபடுவதற்கு அருகாமையில் இந்துக் கோயில்கள் எதுவும் அப்போது இருக்கவில்லை. அப்படி வழிபட வேண்டுமானால் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நாவலப்பிட்டி நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது.
இதன் காரணமாக தாமரவல்லி தோட்டத்தின் மையப் பகுதியில் தங்களுக்கு மட்டுமல்ல, அப்பகுதியில் வாழும் இந்து மக்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும் ஒரு சைவக் கோயிலைக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் பலனாக தொலஸ்பாகை ஸ்ரீமுருகன் கோயிலின் கட்டுமானம் 1959 ஆம் ஆண்டு தொடங்கியது. 1960 ஆம் ஆண்டு கோயில் கட்டுமான வேலைகள் முடிவடைந்ததால் இந்தியாவில் இருந்து விக்கிரகங்கள் கொண்டு வரப்பட்டு இங்கே பிரதிட்சை செய்யப்பட்டு பத்து நாட்கள் கும்ப அபிசேகம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து, நித்திய பூசையும், ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் திருவிழாக்களும் தொடர்ந்தும் நடைபெறுகின்றன.
ஊரெழு ஸ்ரீ வீரகத்திவிநாயகர் தேவஸ்தான பிரதமகுருக்கள் சிவஸ்ரீ சோமசுந்த குருக்கள் தலைமையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, குறைந்தது இரண்டு கூட்ட மேளதாளங்களுடன் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும். முதலாவது மற்றும் பத்தாவது திருவிழாக்களில் 108 சங்காபிஸேகமும், ஓன்பதாவது திருவிழாவில் திருக்கல்யாணமும் ஊஞ்சலில் நடைபெறும். பத்தாவது திருவிழாவின் போது சுவாமி மயில்வாகனத்தில் வெளிவீதி வருவார். திருவிழாக் காலங்களில் இந்துமத, கலாச்சார உரைகளும் இங்கு இடம் பெறுகின்றன. இக்கோயிலின் அதிசயம் என்னவென்றால், தைமாதம் உதிக்கும் சூரியன் மூலஸ்தானத்திற்கு சில நிமிடங்கள் ஒளி கொடுத்துப் பக்தர்களைப் பரவசப்படுதத்துவதுதான்!
1967 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த தலைமுறையினரான அவரது மகன் திரு. வி.கே. ரவீந்திரசோதி மருமகன்களாகிய திரு. எஸ். ஆர். நல்லையா திரு. கு. சிவகணநாதன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர். ஏதிர்பாராத விதமாக 1974 ஆம் ஆண்டு தேயிலைத் தொழிற்சாலை உட்பட தனியார் தோட்டங்கள் அரச உடமையாக்கப்பட்டன. மிகுதியாக இருந்த அவர்களது தேயிலைத் தோட்டத்தை குடும்பத்தினர் பராமரித்தனர். தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு வகுப்புவாதக் கலவரத்தால் பாதிப்பு ஏற்பட்டதால், திரு கிருஷ்ணபிள்ளை தொழிலில் இருந்து ஓய்வு பெற்று யாழ்ப்பாணத்தில் உள்ள ‘ஊரெழு’ என்ற தனது சொந்த ஊருக்குச் சென்று குடியேறினார்.
மீண்டும் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் இப்பகுதி மீண்டும் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே கோயிலையும் பங்களாவையும் அதனுடன் சேர்ந்த காணியையும் குடும்பச் சொத்தாக வைத்துக் கொண்டு ஏனைய தோட்டத்தை விற்க வேண்டி வந்தது. இவற்றைப் பராமரிப்பது மற்றும் கோயில் காரியங்களைக் கொண்டு நடத்துவது போன்ற பொறுப்புக்கள் உறவினரான திரு நவசோதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டு அமரர் ஏ.வி. கிருஷ்ணபிள்ளையின் மூன்றாம் தலைமுறையினரைச் சேர்ந்த, இலங்கையின் தலைநகரான பொழும்பில் வசிக்கும் பேரப்பிள்ளைகள் திரு பிரணவன் சிவகணநாதன் மற்றும் திரு. அருள் சிவகணநாதன் ஆகியோர் கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் தாமரவல்லி தோட்டத்திற்குச் சென்று பார்த்த போது, பல தெய்வவிக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் கோயில் பராமரிக்கப்படாமல் இருப்பதையும் அவதானித்தனர். எனவே புனரமைப்புப் பணிகளைத் தொடங்கி 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் கும்ப அபிசேகம் செய்வித்தனர். இந்தப் புனித நாளை முன்னிட்டு அயலகத் தோட்டங்களிலும் விடுமுறை விடப்பட்டது. சுமார் 500 மேற்பட்ட தொழிலாளரும் குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கோயிலை உடைத்தவர்களும், விக்கிரகங்களைத் திருடியவர்களும் காலப்போக்கில் அருள்மிகு தெய்வங்களால் தண்டிக்கப்பட்டதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. இந்து மதம் வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆன்மீக அடிப்படையில் இயங்குவதால் ‘தெய்வம் நின்று கொள்ளும்’ என்பதை அங்குள்ள அயலவர்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. ஒருவர் பாம்பு கடித்தும், மற்றவர் பேருந்து விபத்திலும் மரணமானார்கள். இதற்கு உடந்தையாக இருந்த இன்னுமொருவர் மரத்தால் விழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதையும் பக்தர்களால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு மீண்டும் கோயில் புதுப்பிக்கப் பெற்று புதிதாகக் கும்ப அபிசேகம் நடைபெற்றது. இன்று உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்தக் கோயிலின் பெருமை தெரிந்து அருள் பெறுவதற்காக வருகை தந்த வண்ணம் இருக்கின்றார்கள். கவியோகி சுத்தானந்த பாரதியார், குன்றக்குடி அடிகளார், பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள், யோகி ராமையை சுவாமிகள், கோலாலம்பூர் சத்தியானந்த சுவாமிகள், நல்லூர் சுவாமிநாத தம்பிரான், மகாதேவா ஆச்சிரமம் ஸ்ரீ வடிவேல் சுவாமிகள், தபோவனம் சச்சிதானந்த சுவாமிகள், ஆத்மஜோதி முத்தையா அவர்கள், அருமைநாயகம் அவர்கள், தங்கம்மா அப்பாக்குட்டி போன்ற ஆன்மீகம் சார்ந்த பெரியோர் பலர் இக் கோயிலுக்கு வந்து வழிபட்டு, சொற்பொழிவு ஆற்றிச் சென்றிருக்கிறார்கள். சமீபத்தில் பெரிய சரவணபவ சுவாமிகள் இங்கிலாந்தில் இருந்து வந்து கோயிலைத் தரிசனம் செய்தார்.
கோயிலின் தினசரி நான்குகால பூசைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. திங்கள் வெள்ளி இரண்டு நாட்களும் விசேட அபிஸேகம், பூசையோடு அன்னதானமும் வழங்கப்படுகின்றது. திருவிழாக் காலங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. இதைவிட அனைத்து இந்துப் பண்டிகைகளும் இங்கே கொண்டாடப் படுகின்றன. ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்கு வருகைதரும் அன்பர்களுக்குப் பொங்கல் பரிமாறப் படுகின்றது. மற்றும் தீபாவளி, தைப்பொங்கல், தைபூசம், சிவராத்திரி, நவராத்திரி, திருவெண்பா, தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், வெசாக் போன்ற தினங்களில் பூசைகள் பெரிய அளவில் நடைபெறுகின்றன. கோயில் ஸ்தாபகர் அமரர் திரு. கிருஷ்ணபிள்ளை அவர்கள் வாக்குறுதி அளித்தபடி, கோயில் தற்போது மூன்றாவது தலைமுறைக் குடும்பத்தால் நடத்தப்படுகின்றது. தொலஸ்பாகை தாமரவல்லியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் அருளால் இவர்களின் வழிகாட்டலில் கோயில் பராமரிக்கப்பட்டு தொடர்ந்தும் இயங்கும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் இடம்பெற்றிருக்கின்றது. ஓம் முருகா!
மூவினமும் ஒன்றாகி அன்பின் நின்று
மலையுச்சித் திருக்கோவில் முறையின் வந்து
நாவினிக்கத் திருப்பெருமை பாடிப் போற்றி
நயனங்கள் நீர்வாரத் தொழுதல் கண்டு
பூவுலகின் இருளகன்று பசியும் நோயும்
பறந்தோடப் போர்பூசல் ஒழிந்து போக
மேவியருள் பரந்தோங்க அமைதி அன்பு
விளங்கவருள் புரிமுருகன் திருத்தாள் போற்றி!
குரு அரவிந்தன், தொலஸ்பாகை தாமரை வல்லித்தோட்டம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM