டி.பி.எஸ். ஜெயராஜ்
முதுபெரும் தமிழ் அரசியல் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் 2024 ஜூன் 30 கொழும்பில் அமைதியாக இயற்கை எய்தினார். 90 வயதைக் கடந்த அவர் அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்தார். இராப்போசனத்துக்கு பிறகு சூலமங்கலம் சகோதரிகள் இராஜலக்சுமியும் ஜெயலக்சுமியும் பாடிய ' கந்தசஷ்டி கவசம் ' பக்திப்பாடலை ஒலிநாடாவில் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு வேதனை முனகலுடன் சம்பந்தன் நிலைகுலைந்தார். உடனடியாக லங்கா வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லப்பட்ட அவர் அங்கு இரவு 11 மணியளவில் தனது இறுதி மூச்சைவிட்டார்.
பாலன் தேவராய சுவாமிகளினால் இயற்றப்பட்ட கந்தசஷ்டி கவசம் முருகப்பெருமானைப் போற்றும் பாடல்களைக் கொண்டது. சிவபெருமான் - பார்வதியின் இரண்டாவது மகனான முருகன் 'தமிழ்க்கடவுள்' என்று போற்றப்படுகிறார். கந்தசஷ்டி கவசத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அமைதியாக மரணமடைவது ஒரு இந்து பக்தனைப் பொறுத்தவரை உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மரணமாகும். மிகவும் ஆழமான மதநம்பிக்கையுடைய சம்பந்தனின் குலதெய்வம் திருகோணமலை பத்திரகாளி அம்மன்.
1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி பிறந்த 91 வயதான சம்பந்தன் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வயதில் மிகவும் மூத்தவராவார். இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் சம்பந்தன் இருந்தார். முன்னதாக அவர் தமிழரசு கட்சியை பிரதான உறுப்புரிமைக் கட்சியாகக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவராக இருந்தார்.
ஒரு சட்டத்தரணியான இராஜவரோதயம் சம்பந்தன் 1977 - 1983 காலப்பகுதியில் திருகோணமலை தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார். பிறகு அவர் 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையும் அடுத்து 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இறக்கும்வரை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். மொத்தமாக 32 வருடங்கள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2015 - 2019 காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் சம்பந்தன் பதவி வகித்தார்.
இறுதிவரையும் சம்பந்தன் முழுமையான நினைவாற்றலைக் கொண்டிருந்தார். வயது மூப்பு மற்றும் பலக்குறைவு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு சக்கரநாற்காலியை பயன்படுத்தியே இயங்கினார். அவரது பாராளுமன்ற வரவு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஒரு கணிசமான காலமாக அவரால் தனது தொகுதியான திருகோணமலைக்கு செல்லக்கூடியதாக இருக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக அவர் பாராளுமன்றத்தில் இருந்து மூன்று மாத விடுமுறையைப் பெற்றுக்கொண்டார். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் காரணமாக கொழும்பு லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து அங்கிருந்து வெளியேறினார். வீடு திரும்பிய ஒரு சில தினங்களில் மரணம் சம்பவித்தது.
இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்
மூத்த தலைவரின் பூதவடல் ஜூூலை 2 ஆம், 3 ஆம் திகதிகளில் கொழும்பு பொரளை றேமண்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 3 ஆம் திகதி மாலை பாராளுமன்றத்தில் அஞசலிக்காக வைக்கப்பட்ட பூதவுடல் யாழ்நகருக்கு விமானமூலம் கொண்டுசெல்ப்பட்டு ஜூலை 4 ஆம் திகதி மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமையகத்தில் வைக்கப்பட்டபோது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர். அடுத்து யாழ்ப்பாண மக்களின் அஞ்சலிக்காக 'தந்தை செல்வா நினைவு கலையரங்கில்' பூதவுடல் வைக்கப்பட்டது.
ஜூலை 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு விமானமூலம் கொண்டுசெல்லப்பட்ட பூதவுடல் தபால் கந்தோர் வீதியில் உள்ள அவரது வாசஸ்தரத்தில் ஜூலை 5ஆம், 6ஆம் திகதிகளில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்குகள் இடம்பெற்றன.
கொழும்பு றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவடல் வைக்கப்பட்டிருந்த தினங்களில் அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உட்பட பெரும் தொகையான மக்கள் இறுதி மரியாதையைச் செலுத்தினர். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஷங் ஆகியோரும் அடங்குவர். அனுதாபச் செய்திகளை அனுப்பியவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் முன்னாள் இந்திய அமைச்சர் பி. சிதம்பரம் ஆகியோரும் அடங்குவர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இராஜவரோதயம் சம்பந்தனும் முதற்தடவையாக 1977 ஜூலையில் ஒன்றாக பாராளுமன்ற பிரவேசம் செய்தவர்கள். பாராட்டத்தக்க ஒரு நல்லெண்ண வெளிப்பாடாக ஜனாதிபதி விக்கிரமசிங்க மறைந்த தமிழ்த் தலைவருக்கு பூரண இராணுவ மரிய்தைகளுடன் அரசு ஏற்பாட்டில் இறுதிச் சடங்குகளை நடத்த விரும்பினார். சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்களும் தமிழரசு கட்சியின் ஒரு பிரிவினரும் அதை விரும்பிய அதேவேளை கட்சிக்குள் செல்வாக்குமிக்க ஒரு குழுவினர் அதற்கு ஆதரவாக இருக்கவில்லை.
ஆனால், இறுதிச்சடங்கு ஏற்பாடுகளில் அரசாங்கம் மிகவும் ஒத்துழைத்துச் செயற்பட்டது. சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கும் இலங்கை விமானப்படை விமானத்திலேயே கொண்டுசெல்லப்பட்டது. இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் சம்பந்தனின் குடும்பத்தவர்கள் மற்றும் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களுடன் துடிப்புமிகு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டனர்.
தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி
முன்னதாக குறிப்பிடப்பட்டதை போன்று சம்பந்தன் 1977ஆம் ஆண்டிலேயே பாரளுமன்றத்தில் பிரவேசித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் ஒரு உறப்பினராக திருகோணமலை தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்றார். 1976 மே 14ஆம் திகதி உருவாக்கப்பட்ட கூட்டணி தனித்தமிழ் நாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து 1977 ஜூலை 21 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடமாகாணத்தில் சகல 14 தொகுதிகளையும் கைப்பற்றியதன் மூலம் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்ப்படக்கூடிய ஐந்து தொகுதிகளில் கூட்டணி நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியது.
போட்டியிட்ட 19 'தமிழ்' தொகுதியில் 18 தொகுதியில் வெற்றிபெற்ற கூட்டணி 1977 பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்தது. 18 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாக வந்ததையடுத்து அதன் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராகப் பதவியேற்று வரலாறு படைத்தார்.
1977ஆம் ஆண்டில் தெரிவான கூட்டணியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 2024ஆம் ஆண்டில் மூன்று பேர் மாத்திரமே உயிர் வாழ்ந்தனர்.செல்லையா இராஜதுரை (மட்டக்களப்பு), இராஜபாளையம் சம்பந்தன் (திருவண்ணாமலை), வீரசிங்கம் ஆனந்தசங்கரி (குளிர்ச்சி) ஆகியோர் அவர்கள்.
இராசதுரை மகிழ்ச்சியான ஓய்வுக்கு பிறகு மலேசியா, இந்தியா, இலங்கைக்கு இடையே சஞ்சாரம் செய்துகொண்டிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன் இப்போது உயிருடன் இல்லை. ஆனந்தசங்கரி தொடர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றன போதிலும் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லை. அவர் மாத்திரமே தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு இன்னமும் விசுவாசமாக இருந்து அதன் செயலாளர் நாயகமாக தலைமைத்துவத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் கூட்டணி பழைய செல்வாக்கான நிலையில் இல்லை.கடந்த வருடம் ஜூன் மாதம் 91 வயதை அடைந்த ஆனந்தசங்கரி இடைப்பட்ட வீழ்ந்துவிடும் சில தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், தனிப்பட்ட நண்பனாக இருந்து அரசியல் எதிரியாக மாறிய சம்பந்தனின் இறுதிச்சடங்கு கலந்துகொண்டு இறுதி மரியாதையைக் செலுத்த இல்லாதவராக இருக்கிறார்.
செல்வாக்கு மிக்க தமிழ் தலைவர்கள்
வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கட்டங்களில் செலாவாக்குமிக்க தலைவர்கள் தோன்றி ஆதிக்கம் செலுத்திய தோற்றப்பாடு இலங்கை தமிழ் தமிழ் அரசியலிலா ஒரு எடுத்துக்காட்டான அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்களான இராமநாதன், அருணாச்சலம், ஏ..மகாதேவா, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்லநாயகம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் வேறுபட்ட காலகட்டங்களில் செல்வாக்கு செலுத்திய ஜனநாயக தலைவர்களாவர். ஆயுதமேந்திய தமிழ் தீவிரவாதத்தின் எழுச்சியும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் திணிக்கப்பட்ட தலைமைத்துவத்தின் 'தோற்றமும்' இதிலிருந்து வேறுபட்டவை.
மேற்கூறப்பட்ட அளவுகோலின் அடிப்படையில் நோக்கும்போது உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னர் 2010க்கும் 2024க்கும் இடைப்பட்ட ஆண்டுகளை இராஜவரோதயம் சம்பந்தனின் தலைமைத்துவக் காலப்பகுதி என்று கருதமுடியும். அவரது பிடி கடந்த சில வருடங்களாக தளர்ந்துபோன போதிலும், உயர்த்தியிலும் அடையாள அடிப்படையிலும் கேள்விக்கிடமின்றிய தமிழ்த் தலைவராக சம்பந்தன் விளங்கினார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக 2014ஆம் ஆண்டுவரை பதவிவகித்த அவர் பல வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைலராகவும் இருந்தார்.
அண்மைக்காலமாக சம்பந்தன் கட்சியில் எந்தவிதமான உத்தியோகபூர்வ பதவியை வகிக்காமலும் சுகவீனம் காரணமாக பெருமளவுக்கு இயங்கமுடியாதவராகப் போயாவிட்டாலும் கூட அவரது தலைமைத்துவ அந்தஸ்து எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. வல்லமைமிக்க நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரிகளும் சிங்கள அரசியல் தலைலர்களும் அவரை வீடுதேடிச் சென்று சந்திப்பார்கள். மேலும், தமிழ் ஊடகங்களினாலும் அரசியல்வாதிகளினாலும் சம்பந்தன் "பெருந்தலைவர்" என்று அழைக்கப்பட்டார்.
"பெருந்தலைவர்" காமராஜர்
புகழ்பெற்ற இந்திய அரசியல் தலைவரும் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான கே. காமராஜ் காரணமாகவே தமிழ் அரசியலில் "பெருந்தலைவர்" என்ற அடைமொழி முக்கியத்துவம் பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு காலத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மிகவும் வல்லமை பொருந்திய தலைவராக இருந்த காமராஜ் 1964ஆம் ஆண்டில் 'கிங்மேக்கராகவும்' 1966ஆம் ஆண்டில் 'குயின் மேக்கராகவும்' பாத்திரத்தை வகித்தார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு 1964ஆம் ஆண்டில் லால்பஹதூர் சாஸ்திரியும் அவருக்கு பிறகு 1966ஆம் ஆண்டில் நேருவின் புதல்வி இந்திரா காந்தியும் பிரதமர்களாக வந்தனர். இந்த நியமனங்களில் காங்கிரஸ் தலைவராக காமராஜ் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகித்தார்.
இந்திய அளவில் உயர்த்தியான முக்கிய தலைவராக காமராஜ் விளங்கியபோதிலும், அவரும் காங்கிரஸ் கட்சியும் 1967ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு தேர்தலில் தோல்வியைத் தழுவவேண்டியேற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது.அதேவேளை காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. இந்திரா காந்தி மேல்நிலைக்கு வந்த அதேவேளை அவரை எதிர்த்த காமராஜ் போன்றவர்களின் செல்லாக்கு அருகிக்கொண்டு போனது. 1971 தேர்தலில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் பிரிவினரும் மற்றையவர்களும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தோல்வி கண்டனர். ஆனால் காமராஜ் தனது பாராளுமன்ற ஆசனத்தில் வெற்றி பெற்றார்.
அடுத்து வந்த வருடங்கள் காமராஜுக்கு அரசியல் ரீதியில் சரிவுக் காலமாகவே இருந்தபோதிலும் ஒரு பெருந்தலைவராக கணிசமான மதிப்பை அவர் தக்கவைத்துக் கொண்டார். பதவியில் இல்லாத போதிலும் மதிப்பு காரணமாக அவர் பெருந்தலைவர் என்று அழைக்கப்படார். உத்தியோகபூர்வமாக எந்த பதவியை வகிக்காத நிலையிலும் ஒரு பெருந்தலைவராக காமராஜ் கருதப்பட்டார். மோகனதாஸ் கரம்சந்த் காந்தி மாத்திரமே ' மகாத்மா ' என்றும் சுபாஷ் சந்திரபோஸ் மாத்திரமே ' நேதாஜி ' என்று அழைக்கப்பட்டதைப் போன்று காமராஜ் மாத்திரமே இந்திய அரசியல் கருத்தாடல்களில் 'பெருந்தலைவர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
"பெருந்தலைவர்" சம்பந்தன்
பெருந்தலைவர் என்ற காமராஜின் அடைமொழி இலங்கை தமிழ் அரசியல் கருத்தாடல்களில் சம்பந்தனுக்கு இணைக்கப்பட்டமை முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும். காமராஜைப் போன்று சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாரே தவிர வேறு எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை என்கிற அதேவேளை காமராஜைப் போன்று சம்பந்தனை முக்கியத்துவம் இல்லாதவராக ஓரங்கட்ட முடியவில்லை. அதனால்தான் பெருந்தலைவர் என்ற வர்ணனையும் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த பின்புலத்தில் இந்த பத்தி 'பெருந்தலைவர்' சம்பந்தனின் அரசியல் பயணத்தை இரண்டு் பாக கட்டுரையாக ஆராய்கிறது.
இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் ஏழு பிள்ளைகளில் மூத்தவராக 1933 பெப்ரவரி 5 பிறந்தார். அவரது தந்தையார் ஏ. இராஜவரோதயம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் அரசாங்க சேவையில் பணியாற்றினார். சுதந்திரத்துக்கு பின்னர் கல்லோயா அணைக்கட்டு நீர்த்தேக்க நிர்மாணத்திட்டத்தில் ஒரு களஞ்சிய அத்தியட்சகராக அவர் ஓய்வுபெற்றார்.
சம்பந்தன் நான்கு கிறிஸ்தவ கல்வி் நிறுவனங்களில் கல்வி கற்றார். திருகோணமலை சென். ஜோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் சென். ஆன்ஸ் கல்லூரி மற்றும் மொறட்டுவ சென். செபஸ்தியன்ஸ் கல்லூரி ஆகியவையே அவையாகும். அரசாங்க சேவையில் இருந்தபோது தனது தந்தையார் இடத்துக்கு இடம் மாற்றப்பட்ட காரணத்தினாலேயே தான் பல பாடசாலைகளில் கல்வி கற்கவேண்டிவந்ததாக சம்பந்தன் ஊடக நேர்காணல் ஒன்றில் சம்பந்தன் கூறினர்.
மொறட்டுவ சென்.செபஸ்தியன்ஸ் கல்லூரியில் தனது இரண்டாம் நிலைக் கல்வியை நிறைவுசெய்த பிறகு " சாம் " என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட சம்பந்தன் அன்றைய இலங்கை சட்டக் கல்லூரியில் பிரவேசித்தார். 1958 ஆம் ஆண்டில் ஒரு புறொக்டராக அவர் சித்தியெய்தினார். கொழும்பில் பெயர்பெற்ற எவ்.ஜே. அன்ட் ஜி. டி சேரம் சட்டநிறுவனத்தில் ஒரு பயிற்சிக் காலத்துக்கு பிறகு தனது சொந்த நகரான திருகோணமலைக்கு திரும்பி சட்டத்தொழிலை தொடங்கினார்.
என்.ஆர். இராஜவரோதயம்
இளம் வழக்கறிஞர் உறுதியான சட்டத்தொழிலை கட்டியெழுப்புதற்கு தனது சக்தியையும் நேரத்தையும் அர்ப்பணித்தார். சம்பந்தனின் நெருங்கிய உறவினர்களில் இருவர் அரசியல்வாதிகளாக இருந்தபோதிலும், அரசியலுக்குள் இழக்கப்படவதை அவர் பெருமளவுக்கு தவிர்த்தார். 1947 பொதுத்தேர்தலில் திருகோணமலை தொகுதியில் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தெரிவான சம்பந்தனின் மாமனார். பிறகு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த என்.ஆர். இராஜவரோதயம் சம்பந்தனின் மைத்துனராவார். என்.ஆர்.ஆர். என்று பொதுவாக அறியப்பட்ட அவர் 1952 தொடக்கம் 1953 வரை தமிழரசு கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அரசியலைப் பற்றி அக்கறை இல்லாதவராக இருந்தபோதிலும், சம்பந்தன் 1960 மார்ச்சிலும் ஜூலையிலும் நடைபெற்ற இரு பொதுத் தேர்தல்களில் தனது மைத்துனருக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டார். தமிழரசு கட்சியின் உறுப்பினராக இணைந்துகொண்ட அவர் அதன் இளைஞர் முன்னணியின் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அரசாங்க நிருவாகத்தில் சிங்களம் மாத்திரமே உத்தியோகபூர்வ மொழியாக திணிக்கப்பட்தை எதிர்த்து தமிழரசு கட்சி ஒரு பெரிய ஒத்துழையாமை இயக்கத்தை 1961 பெப்ரவரியில் முன்னெடுத்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல கச்சேரிகளின் முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட ' சத்தியாக்கிரகம்' அன்றாட நிருவாகத்தை முடங்கச் செய்தது.
சத்தியாக்கிரகம்
என்.ஆர். இராஜவரோதயம் தலைமையார் நடைபெற்ற திருகோணமலை சத்தியாக்கிரக போராட்டத்தில் சம்பந்தனும் பங்கேற்றார். சித்திரை புத்தாண்டுக்கு பிறகு பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. நிராயுதபாணிகளான அமைதிவழிச் சத்தியாக்கிரகிகளுக்கு எதிராக பொலிசாரும் ஆயுதப்படைகளும் கோரமான முறையில் படைபலத்தைப் பிரயோகித்தனர். சத்தியாக்கிரக இயக்கத்துக்கு தலைமை தாங்கியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் கைதுசெய்து செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி பனாகொடை இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட திருகோணமையைச் சேர்ந்தவர்களில் சம்பந்தனும் ஒருவர். இளம் வழக்கறிஞரான அவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. ஐக்கிய இராச்சியத்தின் சொலிசிட்டர்கள் பரீட்சைக்கு அவர் தோற்றவிருந்தார். முன்னணி வழக்கறிஞரும் பிரபலமான கியூ.சி.யுமான தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் ஆலோசனையைச் சம்பந்தன் நாடினார். பரீட்சைக்கு தோற்றுமாறு சம்பந்தனுக்கு செல்வநாயகம் பச்சைக்கொடி காட்டினார். எனவே சம்பந்தன் மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு அவர் விசாரணையின்றி பனாகொடை இராணுவ முகாமில் இருந்து வெளியேறினார்.
தேர்தலில் போட்டியிட மறுப்பு
என்.ஆர். இராஜவரோதயம் 1963ஆம் ஆண்டில் அவரது 55 வயதில் காலமானார். இடைத்தேர்தல் ஒன்று நடைபெற்றது. இளைஞர்களைை அரசியலுக்கு வருமாறு ஊக்கப்படுத்திய செல்வநாயகம் இடைத்தேர்தலில் தமிழரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடுமாறு சம்பந்தனைக் கேட்டார். அதற்கு இணங்க அவர் மறுத்துவிட்டார். எஸ்.எம்.மாணிக்கராஜா தமிழரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மாணிக்கராஜா 1970ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். செல்வநாயகம் மீண்டும் சம்பந்தனை 1970 பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சியின் திருகோணமலை வேட்பாளராக நிற்குமாறு கேட்டார். சம்பந்தன் மிகவும் மரியாதையாக அதை ஏற்க மறுத்தார். பி. நேமிநாதன் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நேமிநாதனின் உற்சாகமற்ற செயற்பாடுகள் திருகோணமலை வாசிகளுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதன் விளைவாக நேமிநாதனை பதிலீடு செய்யுமாறு தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு பெருமளவு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகள் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு காலகட்டமாகும். ஒரு திரும்புமுனையாக 1972ஆம் ஆண்டில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய கூட்டணியை அமைத்தார்கள். 1976ஆம் ஆண்டில் அது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாக மாற்றியமைக்கப்பட்டது.1977ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்தது. திருகோணமலை தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வேட்பாளராக சம்பந்தனே போட்டியிடவேண்டும் என்று செல்வநாயகம் உறுதியாக முடிவெடுத்தார்.
அதேவேளை, சம்பந்தன் திருகோணமலையில் மிகுந்த வருவாய் தரவல்ல சட்டத்தொழிலை மிகுந்த திறமையுடன் வளராத்தெடுத்திருந்தார். அவரது கட்சிக்காரர்கள் மிகவும் வசதிபடைத்தவர்கள் தொடங்கி வறியவர்கள் வரை பெருவாரியானவர்களாக இருந்தனர். "பெரியவரிடம் (செல்வநாயகம்) நழுவுவதற்கு இயன்றவரை முயற்சிசெய்து பார்த்ததாக பல வருடங்களுக்கு பிறகு சென்னை மந்தைவெளியில் உள்ள தனது தொடர்மாடி வீடடில்வைத்து என்னிடம் சம்பந்தன் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்." "திருகோணமலையில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மோசமானவை. என்னால் முடியாது என்று அவருக்கு கூறமுடியவில்லை" என்று சம்பந்தன் சொன்னார் என்பது எனக்கு நல்ல நினைவு.
குளியலறையில் விழுந்தகாரணத்தினால் கடுமையாக சுகவீனமுற்று செல்வநாயகம் 1976 சித்திரையில் காலமானார். தனது மரணம் குறித்து அவருக்கு ஒரு முன்னுணர்வு இருந்திருக்கவேண்டும். தனது மறைவுக்கு சில மாதங்கள் முன்னதாக செல்வநாயகம் தனது அரசியல் வாரிசான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துடனும் திருகோணமலைக்கான வேட்பாளர் இராஜவரோதயம் சம்பந்தனுடனும் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார்.
ஒரு புறத்தில் செல்வநாயகம் சம்பந்தனிடமிருந்து திருகோணமலையில் போட்டியிடுவதற்காக உறுதிப்பாட்டை மீளவும் பெற்றிருந்தார். மறுபுறத்தில் சம்பந்தனையே திருகோணமலை வேட்பாளராக நியமிப்பது என்ற உறுதிமொழியை அமிர்தலிங்கத்திடம் பெற விரும்பினார். அமிர்தலிங்கம் இணங்கக்கொண்ட பிறகு "என்னதான் நடந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் சம்பந்தன் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுதை உறுதிசெய்யவேண்டும்" என்று அமிரிடம் செல்வநாயகம் கூறினார்.
இரு பிரச்சினைகள்
அந்த கட்டத்தில் செல்வநாயகம் வெளிப்படுத்திய உணர்வுகள் உண்மையில் தீர்க்கதரிசனமானவையாக இருந்தன. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நியமனப்பத்திரங்கள் கையளிப்பதற்கான நேரம் நெருங்கியதும் இரு பிரச்சினைகள் எழுந்தன. சம்பந்தன் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்குள் ஒரு பிரிவினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இன்னொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். மறுபுறத்தில் மிகவும் உறுதியான தமிழ்த் தேசியவாத வேட்பாளரும் திருகோணமலையில் தனியாகப் போட்டியிடுவதற்கு விரும்பினார். அவ்வாறு நடந்தால் தமிழ்த் தேசியவாத வாக்குகள் சிதறுப்பட்டு ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற்றுவிடக் கூடும்.
அது ஒரு சிக்கலான நிலைவரம். என்றாலும் தடைகளுக்கு மத்தியிலும் சம்பந்தன் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வேட்பாளராக திருகோணமலையில் போட்டியிட்டார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதையும் மேற்கொண்டு சம்பந்தனின் அரசியல் பயணம் பற்றியும் இந்த கட்டுரையின் இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM