நாட்டின் எதிர்காலத்துக்காக உடன்படிக்கைகளைச் செய்யும் அரசாங்கம் மக்களினதும் எதிரணியினதும் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் 

Published By: Vishnu

06 Jul, 2024 | 01:43 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இன்னமும்  ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியே இருக்கின்ற வேளையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க   இலங்கையை அதன் சர்வதேச வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்த தனது ஆட்சியின் வெற்றியை முதன்மைப்படுத்தி பேசியிருக்கிறார். இலங்கைக்கு இருதரப்பு கடன்களை வழங்கிய பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடன் (Official Creditor Committee) 580 கோடி அமெரிக்க டொலர்களுக்கான சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கைச்சாத்தான உடன்படிக்கை பல்வேறு  வழகளில் கொண்டாடப்பட்டது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். பல்வேறு நகரங்களில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இலங்கையின் பொருளாதார மீடசியின் சிற்பி தானே என்றும் ஜனாதிபதி பெருமையுடன் அறிவித்தார்.பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மக்களுக்கு விளக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

" பொருளாதார பாதாளத்தில் இருந்து எமது நாட்டையும் அதன் மக்களையும் காப்பாற்றுவதற்கு எனது ஆற்றலில் நான் நம்பிக்கை வைத்தேன். இதே போன்ற நெருக்கடியில் இருந்து வெளிக்கிளம்புவதற்கு ஏனைய நாடுகள் கடைப்பிடித்த  மூலோபாயங்கள் பற்றிய ஆழமான விளக்கப்பாட்டையும் விரிவான வேலைத் திட்டத்தையும் நான் கொண்டிருந்தேன். மேலும், நன்கு திட்டமிடப்பட்ட எனது கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்பு மூலமாக பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது" என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க தனதுரையில் கூறினார்.

தற்போதைய தருணத்தில் இலங்கைக்கு முக்கியமானவையாக விளங்குகின்ற நாடுகளிடம் இருந்து கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு உடனடியாகவே பெரும் பாராட்டுக்கள் குவிந்தன.

உடன்படிக்கை கைசசாத்தான செய்தியை வரவேற்ற கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங், " இலங்கையின் பொருளாதார மீட்சியிலும் அதன் விரிவாற்றலிலும் இது ஒரு நேர்மறையான முன்னோக்கிய நடவடிக்கை. இலங்கையின் நிதியியல் நிலைவரத்தில்  மேலும் கூடுதல் நம்பிக்கையை கட்டயெழுப்ப இது உதவும். நீண்டகால சுபிட்சத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவரக்கூடிய வெளிப்படைத் தன்மைவாய்ந்ததும் நிலைபேறானதுமான மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சீர்திருந்தச் செயன்முறையை இலங்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்கா ஊக்கம் கொடுக்கிறது" என்று கூறினார்.

அதே போன்றே ஜப்பான்,  இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவையும் இலங்கை கண்டுவரும் முன்னேற்றம் குறித்து திருப்தியை வெளிப்படுத்தின.

 அதேவேளை இலங்கையின் இரண்டாவது உடன்படிக்கை ஒன்றையும் செய்துகொண்டது. சீனாவின் எக்சிம் வங்கியுடன் 420 கோடி டொலர்களுக்கான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையே அதுவாகும். ஆனால் அந்த உடன்படிக்கை ( சீனாவை உள்ளடக்காத உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவுடன் உடன்படிக்கையை எட்டுவதற்கு பேசாசுவார்த்தை நடத்திய இலங்கைக் குழுவையும் ஜனாதிபதியையும் பாராட்டிய அதே தரப்புகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது. சீனா உட்பட ஏனைய கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இலங்கை சமத்துவமான முறையில் நடந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள்.

குறிப்பாக அவர்கள் இலங்கையின் கடன் உடன்படிக்கைகள் தொடர்பான விபரங்களையும் சமத்துவமாக நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற சகல தகவல்களையும் தருமாறு கேட்டனர்.

 இரு உடன்படிக்கைகள் தொடர்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பற்றிய விபரங்கள் வெளியில் தெரியாது. ஆனால், பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும்போது பெரும்பாலும் அந்த விபரங்கள் வெளியிடப்படும். இந்த பதற்றநிலை அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாத பாரதூரமான பிரச்சினையை பிரதிபலிக்கிறது.

" இந்த உடன்படிக்கைகளை அடுத்து சகல இருதரப்பு கடன் தவணைக் கொடுப்பனவுகளை 2028 ஆம் ஆண்டு வரை எம்மால் தாமதிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் 2043 ஆம் ஆண்டுவரை ஒரு விரிவான காலத்துக்கு  சகல கடன்களையும் சலுகை நிபந்தனைகளின் அடிப்படையில்  திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பும் எமக்கு கிடைக்கும்" என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒரு மறைபுதிராகக் குறிப்பிட்டார். இந்த சலுகை நிபந்தனைகள் எவை என்று அவர் கூறவில்லை. அத்துடன் திருப்பிச் செலுத்தவேண்டிய முதலில் (payable capital )  செய்யப்படக்கூடிய  குறைப்பு (Haircut ) பற்றியும் அவர் குறிப்பிடவில்லை.

சலுகை நிபந்தனைகளின் அடிப்படையில் திருப்பிச் செலுத்துவதற்கான தொகை 580 கோடி டொலர்களாக இருக்கப்போகும் அதேவேளை, 2022 ஆம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட நேரத்தில்  மொத்த வெளிநாட்டுக் கடன் சுமார் 400 கோடி டொலர்களாக இருந்தது.

கடந்த வருடம் கடன் வழங்குனர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோது திருப்பிச் செலுத்தவேண்டிய முதலில் ஒரு 30 சதவீத குறைப்பு செய்யப்படக்கூடியது சாத்தியம் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த துறையைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி  பெற்றகடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வசதியாகவே கடன்  வழங்குனர்கள் அவற்றைப் பெறுபவர்களுக்கு சலுகை அடிப்படையில் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். இது வழமையான நடைமுறையாகும்.  இந்த பின்னணியில் பார்க்கும்போது  இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேசம் கொடுத்த ஆதரவு எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவும் குறைவானதாகும் அல்லது நியாயமானதாகக் கூட இல்லை.

" கடன் வழங்குனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தவேண்டிய முதலில் செய்யப்பபட்ட குறைப்பு மீது கவனத்தைக் குவித்து கடந்த 200  வருடங்களாக அரசாங்கங்களின் வெளிநாட்டுக் கடன் நெருக்கடியை நாம் ஆராய்ந்தோம். நாம் எடுத்துக்கொண்ட மாதிரிகள் 1815 ஆம் ஆண்டில் இருந்து 327 கடன் மறுசீரமைப்புக்களையும் கடனைத் திருப்பிச் செலூத்துவதற்கு தவணை தவறிய 205 சந்தர்ப்பங்களையும் உள்ளடக்கியதாக இருந்தன.

கடன் வழங்குனர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பரந்தளவில் வேறுபட்டவையாக இருந்தன. ஆனால் புள்ளிவிபர பகிர்வு இரு நூற்றாண்டு காலத்தில் ( திருப்பிச் செலுத்தவேண்டிய முதலில் சராசரியாகச் செய்யப்பட்ட குறைப்பு சுமார் 45 சவீதமாக இருந்தது) குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையானதாக இருந்தது" என்று கடந்த மாதம் ஜேர்மனியில் வெளியிடப்படட ஆய்வு ஒன்று கூறியது.

சர்வதேச ஆதரவு இலங்கை அதன் கடன் மறுசீரமைப்புக்கு பெருமளவுக்கு சிறந்த நிபந்தனைகளைப் பெற்றால் மாத்திரமே அர்த்தமுடையதாக இருக்கும்.

 கடன் சுமையில் செய்யப்பட்ட குறைப்பு மக்களின் வாழ்வில் உடனடியாக தாக்கத்தை  ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய  பயன்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் ஜனாதிபதியின் வெற்றிப் பேச்சு  பொதுமக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற  பட்டாசு வெடித்தல் கொண்டாட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்களின் பங்கேற்பு இருக்கவில்லை.

பெற்றோல் விலைக்குறைப்பு போன்று கட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பாவனைப் பொருட்களின் விலைகளில் குறைப்பு இடம்பெற்றதைத் தவிர மற்றும்படி உடனடியாகவோ அல்லது குறுகிய காலத்திலோ மக்களின் பொருளாதார வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை நிலையாகும். 

கடந்த இரு வருடங்களாக எந்த விதமான அதிகரிப்பும் இன்றி தேக்கநிலைச் சம்பளத்தை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் இரண்டு தொடக்கம் மூன்று மடங்காக அதிகரித்திருக்கும் அடிப்படை வாழ்க்கைச் செலவுடன் போராடவேண்டியிருக்கிறது. வாழக்கைச் செலவு அதாகரிப்புக்கும் வரி உயர்வுக்கும் எதிராக வீதிகளில் இறங்கி வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்ட கென்யா நாட்டு மக்கள் கூட்டத்தைப் போலன்றி, அதிகப் பெரும்பான்மையான இலங்கை மக்கள் இடர்பாடுகளை பொறுத்துக்கொண்டு மௌனமாக வீடுகளுக்குள் இருக்கிறார்கள்.

கைவசம் இருக்கும் பதில் 

 ஆனால், மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மக்களின் பிரச்சினைகளையும் மனக்குறைகளையும் பொதுவெளிக்கு கொண்டுவருகிறார்கள். பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகத்திலும் நீர்ப்பீரங்கி தாக்குதலிலும் முடிவடைந்த ஆசிரியர்களின் போராட்டம் இதற்கு ஒரு உதாரணமாகும்.

 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளராக இருக்கும் கலாநிதி அகிலன் கதிர்காமர்  பின்வருமாறு எழுதுகிறார்

 " சமூகச் செலவினங்களை பேணிப்பாதுகாப்பதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழான சிக்கனத் திட்டம் தவிர்க்கமுடியாத வகையில்  நிதியமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட 2023 ஆண்டறிக்கையில் பிரதிபலித்தவாறு, சமூகச் செலவினங்களின்  உண்மையான பெறுமதியில் குறைப்புகளுக்கு வழிவகுக்கிறது. 2021 -- 2023 காலப்பகுதியில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு 100 சதவீதத்தினால் அதிகரித்தது. அதை நாம்  டொலர்களின் அடிப்படையில் நோக்குவோமேயானால், இலங்கை ரூபாவின் பெறுமதி 50 சதவீதத்தினால் ( டொலருக்கு நிகராக 200 ரூபாவில் இருந்து 300 ரூபாவுக்கு) வீழ்ச்சி கண்டது. ஆனால், இந்த காலப்பகுதியில் பொதுக் கலவிக்கான அண்ணளவான செலவின அதிகரிப்பு 22.5 சதவீதம் மாத்திரமே. உயர்கல்விக்கான அதிகரிப்பு வெறுமனே 13.1 சதவீதம் மாத்திரமே.

எளிய வார்த்தைகளில் கூறுவதானால்,  கல்விக்கான பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்புகளை வழங்குவதற்கு பணமில்லை அல்லது கடந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கத்தினால் நிறைவேற்றமுடியாமல் இருக்கிறது.

 பல தசாப்தங்களாக இலங்கை கல்விக்கான செலவினத்தை குறைத்துக்கொண்டே வந்திருக்கிறது என்று கலாநிதி அகிலன் கதிர்காமர் மேலும் கூறுகிறார். உண்மையில் கல்விக்கான செலவினம் படுமோசமாகக் குறைந்து வந்திருக்கிறது.1970 ஆம் ஆண்டில் கல்விக்கான செலவினம் உள்நாட்டு நிகர உற்பத்தியில் 5  சதவீதத்துக்கு நெருக்கமாக இருந்தது. அது 2022 ஆம் ஆண்டில் 1.2 சதவீதமாக இருந்தது. கல்விக்கான செலவினங்களைப் பொறுத்தவரை உலகில் மிகவும் குறைந்த செலவினங்களில் இது ஒன்று.

ஜனாதிபதி அறிவித்தவாறு கல்வி தொடர்பான அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை தனியார் துறையிடம் கையளிப்பதாகவே  இருக்கிறது. ஆனால் கல்விச் சேவைகளை வழங்குவதில் இருந்து அரசாங்கம் வாபஸ்பெறுவது, ஒரு சமூகசேவையாக இல்லாமல் இலாபம் சம்பாதிக்கும் நோக்குடன்  கல்வி வர்த்தகமயமாகிவரும் பின்னணியில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பெரும் பாதிப்பாக அமையும். பாரதூரமான பொருளாதார இடர்பாட்டின் பொதுவான பின்புலத்தில் நோக்கும்போது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக இருக்கும் மக்கள் பிரிவினரின் கல்விக்கான அரசாங்கத்தின் முதலீடு கூடுதலாக அதிகரிக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது.

 தங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு அரசாங்கம் தவறியதை கண்டித்தே கடந்தவாரம் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இளந்தலைமுறையினருக்கு போதித்து அவர்களை தயார்செய்யும் தலையாய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற்போதிலும் இன்று மிகவும் குறைந்த சம்பளத்தைப் பெறுகின்ற பிரிவினராக ஆசிரியர் சமூகத்தினரே விளங்குகிறார்கள்.

அவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்தும்  நீர்ப்பீரங்கித் தாக்குதல் நடத்தியும் கலைக்கிறார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாக நடத்துவது அரசாங்கத்தைக் கேள்விகேட்பதற்கான ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதற்காக ஒன்றுகூடுகிறவர்களை கையாளுவதற்கு கைவசம் வைத்திருக்கும்  பதிலாக இருக்கிறது.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பின் பின்னணியில் இருக்கும் முக்கியமான ஆளுமை என்ற வகையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டம் செய்பவர்களுடன் அல்லது அவர்களின் தலைவர்களுடன் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறியவேண்டியது முக்கியமானதாகும். அவர்கள் தங்களது மனக்குறைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பைக் கொடு்க்கவேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானாக்கும் உடன்படிக்கைகளை செய்யும்போது அரசாங்கம் மக்களினதும் எதிரணி அரசியல் கட்சிகளினதும் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டியதும் அவர்களின் ஆதரவைப் பெறவேண்டியதும் முக்கியமானதாகும். தீர்வுகள் காலத்தின் சோதனைக்கு தாக்குப்பிடிப்பதற்கும் நிலைபேறானவையாக அமைவதற்கும் இது மாத்திரமே ஒரே வழியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15