இந்தியாவில் 10ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் புனே மைதானத்தில் மோதவுள்ளன.

புனே அணியை பொறுத்தவரை கடந்த முறை, 7வது இடமே கிடைத்தது. இதனால், இந்த தொடரில் டோனிக்கு பதிலாக அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் புதிய அணி தலைவராக நியமிக்கப்பட்டார். 

இந்திய மண் என்றாலே விருப்பத்துடன் விளையாடும் ஸ்மித்தின் அதிரடி ஆட்டம் இன்றும் வெளிப்படலாம் என்றும் தலைமை என்ற கடின சுமையின்றி களமிறங்கும் டோனியின் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தப்படும் என்று புனே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

புனே அணிக்கு இங்கிலாந்து சகலத்துறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் பலம் சேர்க்கிறார். மேலும் டுபிளசி, மயாங்க் அகர்வால் குறித்த அணியிற்கு பலம் சேர்க்கவுள்ளனர்.

'சுழல்' வீரர் அஷ்வின் 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' பாதிப்பால் விலகியது புனே அணியிற்கு சவாலாக அமைந்துள்ளது. இவரின் இடத்தை அவுஸ்ரேலியாவின் ஆடம் ஜாம்பாவும், வேகப்பந்துவீச்சில் டிண்டா, உனக்தத் உள்ளிட்டோர் உள்ளனர். 

கடந்த தொடரில் மும்பை அணி 5வது இடம் பிடித்திருந்தாலும், இரண்டு முறை பட்டம் வென்ற அணியாக திகழ்கிறது. பட்லர், பொலாட், அணித்தலைவர் ரோஹித் சர்மா என விளாசல் வீரர்களின் வரிசை அமைந்துள்ளது. மிச்சல் ஜோன்சன், பும்ரா என வேகக்கூட்டணி மிரட்டுகிறது. அனுபவ வீரரான லசித் மாலிங்க பங்களாதேஷ் தொடரில் பங்கேற்பதால் இப்போட்டியினை தவிர்த்துள்ளார். பாண்டியா, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் அணிக்கு வலு சேர்க்கும் வண்ணம் உள்ளனர். மேலும்  புதிய பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனாவின் பங்களிப்பும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.