(எம்.எப்.எம்.பஸீர்)

சனத் திரள் மிக்க பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகளின் பணப் பையை மிக சூட்சுமமாக திருடும் வழிப் பறி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இரு யுவதிகளை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கைதான இரு யுவதிகளையும் விசாரணை செய்ததில் புத்தாண்டு காலப்பகுதியில் வழிப் பறிக்கென விஷேடமாக 16 பேரைக் கொன்ட திட்டமிடப்பட்ட யுவதிகள் குழுவொன்று கொழும்புக்கு வந்து நடமாடி வருகின்றமை தெரியவந்துள்ளதாகவும் ஏனையோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு யுவதிகளும் புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன் அவர்களுடன் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வழிப் பறிக்காக வந்தோர் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளையில் மூன்று யுவதிகள் பஸ் ஒன்றினுள் பயணி ஒருவரின் 6000 ரூபாவுடன் கூடிய பணப்பையை திருடிக் கொண்டு ஓடும் பஸ் வண்டியில் இருந்து பாய்ந்து தப்பியோடியுள்ளனர். இதன் போதும் பணப்பை உரிமையாளரும் பஸ்ஸில் இருந்து பாய்ந்து மூவரில் இருவரைக் பிடித்துக்கொண்டுள்ளார். இதன் போது அந்த வழியாக பொரளை பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றங்கள் தொடர்பிலான பிரிவின் பொருப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் விக்ரமரத்ன சம்பவத்தைக் கண்ணுற்று இரு யுவதிகளையும் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இதன் போதே 16 யுவதிகள் திட்டமிட்டு வழிப் பறிக்கென இவ்வாறு கொழும்புக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதான ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட 6000 ரூபாவுடன் கூடிய பணப்பை மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யுவதியிடமிருந்து 7000 ரூபாவுடன் கூடிய பணப்பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த 7000 ரூபா பணப்பை தொடர்பில் விசாரணை செய்த போது அது, பொலிஸ் தலைமையகத்தில் சேவையாற்றும் பெண் பொலிஸ் காண்ஸ்டபிளுடையது என தெரியவந்துள்ளதுடன் அவரும் கடமைக்கு போகும் போது, அவரது பயணப்பை திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.