பௌர்ணமி தினங்களை சுட்டிக்காட்டி ஆட்சியை கவிழ்ப்பதாகக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீட கனவு காண்கின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்,

இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்விதமான தேர்தல்களும் நடைப்பெறுவதற்கு வாய்ப்பில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் வலு தெரியாமல் மஹிந்த ராஜபக்ஷ பௌர்ணமிதினத்தில் ஆட்சியை கவிழ்க்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.

 ரசாங்கம் இவற்றை பெரிதாக கருத்தில் கொள்ளாது. நல்லாட்சி அரசாங்கம் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்ற முடியும்.

எனவே எதிர் கட்சியில் இருக்கும் போதும் அதிகாரங்கள் இல்லாது இருக்கும் போது இவ்வாறு கூறுவது வழக்கமான விடயம் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.