LPL ஆரம்பப் போட்டியில் தசுன் ஷானக்க சகலதுறைகளிலும் பிரகாசிப்பு; கண்டி பெல்கன்ஸுக்கு இலகுவான வெற்றி

02 Jul, 2024 | 10:56 AM
image

(நெவில் அன்தனி)

கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை (01) ஆரம்பமான ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் தம்புள்ள சிக்சர்ஸ் அணியை எதிர்கொண்ட நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸ் 4 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

இலங்கையின் முன்னாள் அணித் தலைவர்களான தசுன் ஷானக்க, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் மிகச் சிறந்த ஆற்றல்வெளிப்பாடுகள் கண்டி பெல்கன்ஸ் அணியை மிக இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

தசுன் ஷானக்க பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தியமை அணிக்கு போனஸாக அமைந்தது. கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இந்த ஆரம்பப் போட்டி அரங்கில் குழுமியிருந்த பெருந்திரளான ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தம்புள்ள சிக்சர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைக் குவித்தது. எவ்வாறாயினும் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் தம்புள்ள சிக்சர்ஸின் முன்வரிசை ஆட்டங்கண்டது.

தனுஷ்க குணதிலக்க (11), நுவனிது பெர்னாண்டோ (4), குசல் பெரேரா (0), தௌஹித் ரிதோய் (1) ஆகிய முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் பிரகாசிக்கத் தவறினர். (25 - 4 விக்.) ஆனால், அதன் பின்னர் நியூஸிலாந்து வீரர் மார்க் செப்மன், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்து விக்ரமசிங்க (21 வயது) ஆகிய இருவரும் கண்டி பெல்கன்ஸ் பந்துவீச்சாளர்களை மிகத் திறமையாக எதிர்கொண்டு பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். மார்க் சப்மன் 61 பந்துகளில் 8 பவண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 91 ஓட்டங்களுடனும் சமிந்து விக்ரமசிங்க 42 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் தசுன் ஷானக்க 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 180 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் 17.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

கண்டி பெல்கன்ஸின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. அண்ட்றூ ப்ளெச்சர் (0), மொஹமத் ஹரிஸ் (5) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க 4ஆவது ஓவரில் கண்டி பெல்கன்ஸின் மொத்த எண்ணிக்கை 26 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பவர் ப்ளே நிறைவில் அணியின் மொத்த எண்ணிக்கையை 59 ஓட்டங்களாக உயர்த்தினர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்ததிருந்தபோது கமிந்து மெண்டிஸ் 27 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் 40 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார். அவர் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் தனது குழந்தையைத் தாலாட்டுவது போல துடுப்பை அசைத்து மகிழ்ச்சியை வெளியிட்டார். தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸும் தசுன் ஷானக்கவும் அதிரடியில் இறங்கி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

தசுன் ஷானக்க 15 பந்துகளில் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 46 ஓட்டங்களுடனும் ஏஞ்சலோ மெத்யூஸ் 20 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ்  அடங்கலாக 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகன்: தசுன் ஷானக்க

ஆரம்ப விழா

ஐந்தாவது லங்கா பிறிமியர் லீக் அத்தியாயத்தின் முதலாவது போட்டி தொடங்குவதற்கு முன்னர் பல்லேகலை விளையாட்டரங்கில் கோலாகல ஆரம்ப விழா நடைபெற்றது.

ஆரம்ப விழாவில்   ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, நிறைவேற்றக் குழு உறுப்பினர்கள் எல்பிஎல் போட்டி பணிப்பாளர் சமன்த தொடன்வெல ஆகியோரும் சிறப்பு தூதுவர் மைக்கல் க்ளார்க், அணிகளின் தலைவர்களான திசர பெரேரா, மொஹமத் நபி, சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் ஆரம்ப வைபவத்தின்போது குறியீடு தூதுவர் மைக்கல் க்ளார்க் சகிதம் வெற்றிக் கிண்ணத்துடன் எல்பிஎல் அணிகளின் தலைவர்களான திசர பெரேரா, மொஹமத் நபி, சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் தோன்றும் காட்சி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10