ரொபட் அன்டனி
இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா ஆகியவற்றுடன் இலங்கை இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டியதையடுத்து புதன்கிழமை இது தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டுள்ளன. அதன்படி புதன்கிழமை மாலை சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கொழும்பிலும் பீஜிங்கிலும் கைச்சாத்திடப்பட்டது. மேலும் ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பரிஸ் நகரில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்தியாவுடன் மெய் நிகர் வழியே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த அடைவு மட்டமானது இலங்கையின் பொருளாதார மீட்சி செயற்பாடுகளில் மிக முக்கியத்துவமிக்க மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. அதாவது இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் ஊடாக 2018 ஆம் ஆண்டுவரை இருதரப்பு கடன் செலுத்த வேண்டியதில்லை. அதற்கான நிவாரணம் கிடைக்கிறது.
10 பில்லியன்களுக்கு கடன் மறுசீரமைப்பு
இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 5.9 பில்லியன் டொலர்களுக்கும் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4.2 பில்லியன் டொலருக்கும் இந்த கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது 10 பில்லியன் டொலர்களுக்கு இவ்வாறு இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்குகின்றன. அவுஸ்திரேலியா, ஒஸ்ட்ரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜேர்மனி, ஹங்கேரி, கொரியா, நெதர்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்வீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளன.
சீனா கைச்சாத்து
சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த ஜயசிங்க பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அதன் பின்னர் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹாங் மற்றும் திறைசேரி உதவிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
பிரான்ஸின் பரீஸ் நகருக்கு சென்றுள்ளத நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் கடன் வழங்குநர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். இதன் விளைவாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
என்ன நிவாரணங்கள்?
சீனா இலங்கைக்கு 4.7 பில்லியன் டொலர் இருதரப்பு கடன்களை வழங்கியுள்ளது. இலங்கைக்கு அதிகளவு இருதரப்பு கடன்களை வழங்கிய நாடாக சீனா காணப்படுகின்றது. அதில் தற்போது 4.2 பில்லியன் டொலர்களுக்கு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கியுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்வாறான கடன் ரத்து மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்பதனை ஜூலை மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள இந்தியாவுடன் 1.74 பில்லியன்களுக்கும், ஜப்பானுடன் 2.68 பில்லியன் டொலர்களுக்கும் மறுசீரமைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ, கொரியா போன்ற நாடுகளுடனும் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
சீனாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகள் அனைத்தும் உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிப்பதால் அதற்காக ஒரு உடன்படிக்கையும் சீனா இந்த குழுவில் அங்கம் வகிக்காததால் சீனாவுடன் மற்றுமொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பரிஸ் நகரில் செஹான்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
‘’பிரான்சின் பாரிஸில் இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கை தனது கடனில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. உடன்படிக்கையானது இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதன் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க இலங்கைக்கு வர்த்தக மற்றும் பிணைமுறி கடன்களை வழங்கியுள்ள தனியார் கடன் வழங்குநர் குழுவுடனும் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்த தரப்புடன் 14.7 பில்லியன் டொலர்களுக்கு மறுசீரமைப்பு செய்யவேண்டியுள்ளது.
வங்குரோத்திலிருந்து மீண்டது இலங்கை
இந்த பின்னணியில் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இந்த தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்டைியைடுத்து சர்வதேச கடன்களை மீள் செலுத்துவதை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியது இதனால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை சர்வதேச கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பை செய்யவேண்டும். கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடுகளுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு முடியாது என்பதால் இலங்கை தனது அரச கடன் மறுசீரமைக்கும் செயற்பாட்டை 2022 இல் ஆரம்பித்தது. அதனடிப்படையிலேயே தற்போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
வெவ்வேறு நிவாரணங்கள்
தற்போதைய ஒப்பந்தங்களின் பிரகாரம் கடன் வழங்கிய நாடுகள் வெவ்வேறு வழிகளில் கடன் நிவாரணம் வழங்குகின்றன. உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கி போன்ற உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் இவற்றை வெவ்வேறாக தீர்மானிக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் தகவல்களின்படி உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்க கணிசமான கடன் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு?
கடன் மறுசீரமைப்பு எனப்படுவது இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சு நடத்தி பெறப்பட்ட கடன்களை எவ்வாறு மீள் செலுத்துவது என்பது தொடர்பான ஒரு திட்டத்தினை உருவாக்குவதை குறிக்கின்றது.
மூன்று கருவிகள்
இந்த கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் மூன்று கருவிகள் பிரயோகிக்கப்படலாம். பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கலாம். அல்லது அந்த கடன்களுக்கான தவணை பணத்தை மீள்செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். மூன்றாவதாக இலங்கை இந்த நாடுகளிடம் பெற்றிருக்கின்ற கடன்களில் ஒரு தொகையை கழித்து விடலாம். அல்லது ரத்து செய்துவிடலாம். அவ்வாறு இணக்கப்பாட்டுக்கு வந்து உடன்படிக்கை நாணய நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பல்தரப்பு கடன்கள்
இலங்கை சர்வதேச மட்டத்தில் மூன்று வகையான கடன்களை பெற்றிருக்கின்றது. பல்தரப்பு, இருதரப்பு, வர்த்தக கடன்கள் பெறப்பட்டுள்ளன. பல்தரப்பு கடன்களை பொறுத்தவரை 10.7 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 6 பில்லியன் டொலர்களும் உலக வங்கியிடம் 4379 மில்லியன் டொலர்களும் நாணய நிதியத்திடம் 681 மில்லியன்களும் ஏனைய வங்கிகளிடம் 491 மில்லியன்களும் பெறப்பட்டுள்ளன. இவற்றுக்கு கடன் மறுசீரமைப்பு செய்ய முடியாது. இவை உரிய திகதியில் மீள் செலுத்தப்படவேண்டும்.
இருதரப்பு கடன்கள்
அதேபோன்று இந்தியா சீனா மற்றும் ஜப்பான் தலைமையிலான பரிஸ் கிளப் நாடுகள் போன்றவற்றிடம் இலங்கை இருதரப்பு கடன்களை பெற்றுள்ளது. இந்த கடன்களும் கிட்டத்தட்ட 10.8 பில்லியன் டொலர்களாகும். பரிஸ்கிளப் அங்கத்துவ நாடுகள் எனும்போது ஜப்பானிடம் 2.5 பில்லியன் டொலர்கள், பிரான்ஸிடம் 435 மில்லியன்கள், கொரியாவிடம் 435 மில்லியன்கள் மற்றும் ஏனைய சில நாடுகளிடம் 1.2 பில்லியன் டொலர்களும் பெறப்பட்டுள்ளன. இதில் பரிஸ் கிளப்பில் அங்கத்துவம் வகிக்காத நாடுகள் என்ற வகையில் சீனாவிடம் 4.7 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கு அடுத்ததாக இந்தியாவிடம் கடன்கள் பெறப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு வங்குரோத்து அடையும்போது இந்தியாவிடம் கிட்டத்தட்ட 450 மில்லியன் டொலர் கடன்கள் காணப்பட்டன. (ஆனால் 2022 வங்குரோத்தின் பின்னர் இலங்கைக்கு 3.8 பில்லியன் கடன் இந்தியாவிடம் இருந்து கிடைத்தது.)
தனியார் பிணைமுறி கடன்கள்
அதேபோன்று இலங்கை சர்வதேச தனியார் கடன் வழங்குனர்களிடம் பிணைமுறி கடன்களை பெற்றிருக்கின்றது. வர்த்தக கடன்களையும் பெற்றிருக்கின்றது. இந்த கடன்களும் வட்டியுமாக கிட்டத்தட்ட 14.5 பில்லியன் டொலர் அளவில் உள்ளன. அவற்றுக்கு கடன் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். மேலைத்தேய நாடுகளில் இயங்கும் தனியார் நிதி நிறுவனங்களில் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது நிதியை வைப்பு செய்துள்ளனர். அந்த நிறுவனங்கள் இலங்கை போன்ற நாடுகளில் பிணைமுறிகளை பெற்று கடன்களை வழங்கியுள்ளன. அவையே பிணைமுறி கடன்களாகும். அந்த தனியார் கடன் வழங்குனர்களுடனும் மறுசீரமைப்பு செய்துகொள்ளவேண்டும். இது தொடர்பில் பேச்சுக்கள் தொடர்கின்றன. ஆனால் இன்னும் இணக்கப்பாட்டை எட்டவில்லை. விரைவில் இணக்கப்பாட்டை எட்ட வேண்டியுள்ளது. இதேவேளை இலங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்படிக்கை பாரிஸ் நகரில் எட்டப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அறிவிப்பு
இந்நிலையில் கடன் மறுசீரமைப்பை அடுத்து எதிர்வரும் 2028 ஆம் ஆண்டுவரை சர்வதேச இருதரப்பு கடன்களை மீள்செலுத்த வேண்டியதில்லை என்று ஜனாதிபதி ரணில் அறிவித்துள்ளார்.
‘’ கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய, எமது கடன் வழங்குநர்களான சீனா, சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் இணைத்தலைமை வகிக்கும் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களும், பரிஸ் கழகத்தின் செயலகமும் வழங்கிய ஆதரவுக்கு நன்றி கூறுகிறேன். இந்த ஒப்பந்தங்களின் மூலம், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும். அதன்பின் சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்த 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கும்’’ என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும் ‘’ வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்க அந்தந்த நாடுகளுக்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. எட்டப்பட்டுள்ள இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறும் விசேட பாராளுமன்ற அமர்வில் பிரதமர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பார் ’’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வரவேற்பு
இதேவேளை உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கை எட்டியுள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள இந்தியா இலங்கையின் நீண்டகால பொருளாதார மீட்சி செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதிவழங்கியுள்ளது. இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் இணைத்தலைவராக இந்தியா செயற்பட்டதுடன் இலங்கைக்கு முதலில் நிதியியல் உத்தரவாதம் வழங்கிய நாடாகவும் காணப்படுகின்றது.
என்ன நன்மைகள்
இது இவ்வாறு இருக்க இந்த இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதன் மூலம் என்ன நன்மைகள் இலங்கைக்கு கிடைக்கும் என்பதும் முக்கியமாகும். பொருளாதார ரீதியாக இதன்மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.
இலங்கை பெறுகின்ற வரி வருமானத்தை கடனை செலுத்துவதற்கு பதிலாக அத்தியாவசிய பொது சேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கால அவகாசத்தை வழங்குவதுடன் பொருளாதாரம் விரிவடைந்து வேலைவாய்ப்புக்கள் உருவாகவும் வறுமை குறையவும் வழிவகுக்கும். அதேநேரம் இலங்கை தொடர்ந்து டொலர் உள்வருகையை அதிகரித்து வெளிநாட்டு கையிருப்பை பலப்படுத்தவேண்டும். அப்போதுதான் கடன்களை மீள செலுத்த ஆரம்பிக்கும்போது சுமை இல்லாமல் இருக்கும்.
முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இருதரப்பு நிதியுதவி வசதிகளைப் பெறுவதை மீண்டும் தொடங்கலாம். பல்வேறு சர்வதேச அபிவிருத்தி திட்டங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வரவு செலவுத்திட்டத்தின் மூலதன செலவினங்களுக்கு உதவும் வகையிலான குறுகிய கால வெளிநாட்டு நிதி கிடைப்பதில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் இலங்கையின் கடன் தரப்படுத்தலை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவு அமையும். உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பின் முடிவானது வெளிநாட்டு நிதியுதவிக்கான எளிதான பிரவேசமாகும். கடன் தரப்படுத்தல் நிறுவனங்களின் குறிகாட்டிகளும் எப்படி வரும் என்பதும் இன்றியமையாததாகும்.
அடுத்த சவால் என்ன?
இன்னும் சவால்கள் உள்ளன. அடுத்ததாக சர்வதேச தனியார் பிணைமுறி கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்டுவதே மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. அதனை விரைவில் முன்னெடுப்பது அவசியமாகும். அப்போதுதான் நாணய நிதிய திட்டத்தை முன்கொண்டு செல்ல முடியும். தற்போது மூன்றாவது தவணைப்பணத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. தொடர்ந்து தவணைப் பணத்தை பெறவும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தை கொண்டு செல்லவும் தனியார் பிணைமுறியாளர்களுடனான மறுசீரமைப்பு ஒப்பந்தம் எட்டப்படவேண்டும். இதற்கிடையில் தேர்தலும் வரப்போகிறது. என்ன நடக்கிறது என்பதனை பார்க்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM