ஹெரிட்டன்ஸ் கந்தலம 30 ஆண்டுகால தனித்துவ விருந்தோம்பல் மற்றும் பேண்தகு தரச்சிறப்பை கொண்டாடுகிறது 

28 Jun, 2024 | 02:51 PM
image

யிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸுக்குச் சொந்தமான ஹெரிட்டன்ஸ் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோட்ஸ் தொகுதியின் பிரதான சொத்தாகிய ஹெரிட்டன்ஸ் கந்தலம அதன் 30ஆவது ஆண்டு நிறைவை 2024 ஜூன் 24ஆம் திகதி கொண்டாடியது. 

இலங்கையின் கலாசார முக்கோணத்தில் வளமான சோலையின் நடுவே சூழல்நல ஓய்விடமாக எழுந்து நிற்கும் ஹெரிட்டன்ஸ் கந்தலம, இயற்கைச் சூழலில் மனதிற்கினிய அனுபவங்களை வழங்குகிறது.

புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் தேசமான்ய ஜெப்ரி பாவா அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹொட்டேல், ஆசியாவில் LEED சான்றிதழைப் பெற்ற முதலாவது ரிசோட் என்ற வகையிலும் Green Globe 21 சான்றிதழைப் பெற்ற முதலாவது ரிசோட் என்ற வகையிலும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகின்றது. இச் சான்றிதழ்கள் சுற்றாடலை பேணிப் பாதுகாப்பதில் ஹொட்டேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த சான்றாகும். சுற்றாடல் முகாமைத்துவ அமைப்புக்காக இலங்கையின் நீண்டகால ISO 14001 சான்றிதழையும் ஹெரிட்டன்ஸ் கந்தலம பெற்றுள்ளது.

1990களின் ஆரம்பத்தில் சமூகத்தினரின் எதிர்ப்பு மற்றும் தவறான பிரசாரங்களுக்கு மத்தியில் நிறுவப்பட்ட ஹெரிட்டன்ஸ் கந்தலம, சுற்றாடல் மற்றும் கலாசார ரீதியாக தெரிவிக்கப்பட்ட கண்டனங்களின் சவால்களைச் சமாளித்து 1994ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. வனஜீவராசிகளின் வாழ்விடங்கள் சீர்குலைக்கப்படும் என்பதும் உள்ளூர் கலாசாரம் மற்றும் சமூகத்தின் மீது தாக்கம் ஏற்படும் என்பனவே பிரதான கண்டனங்களாக இருந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் முகமாக, ஹெரிட்டன்ஸ் கந்தலம அதன் கட்டடக்கலை வடிவமைப்பில் பிரதான மாற்றங்களைக் கொண்டுவந்தது. 

தூண்களில் உயர்த்தி எழுப்பப்பட்ட ஹொட்டேல் கட்டடம், அருகிலுள்ள ஏரி இயற்கையாகவே மழைநீரினால் நிரப்பப்படுவதற்கும் வன ஜீவராசிகள் சுதந்திரமாக வாழ்வதற்கும் இடமளிக்கும் வகையில் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டது. இதனால் சுற்றாடலுக்கான பாதிப்பும் மிகவும் குறைந்துள்ளது.

ஹெரிட்டன்ஸ் கந்தலம ரிசோட் உயிரினப் பல்வகைத் தன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது என்பதை அதன் 211 ஏக்கர் பரப்புடைய சூழல்நல வன ஒதுக்கப் பிரதேசம் எடுத்துக்காட்டுகின்றது. இப்பிரதேசம் 128 ஆவணப்படுத்தப்பட்ட சுதேசிய தாவர இனங்கள், 64 வண்ணத்துப்பூச்சி இனங்கள், 183 பறவையினங்கள், 19 ஊரும் விலங்கினங்கள் மற்றும் 11 பாலூட்டி விலங்கினங்களைக் கொண்டுள்ளது. அத்துடன், 11 பாதுகாக்கப்பட்ட நீரோடைகளும் இப்பிரதேசத்துக்குச் செழிப்பூட்டுகின்றன.

ஹெரிட்டன்ஸ் கந்தலம இன்று ஒரு கட்டடக்கலை அதிசயமாக மாத்திரமன்றி, பேண்தகு தன்மையுள்ள சிறந்த நடைமுறைகளின் கலங்கரை விளக்கமாகவும் விளங்குகிறது. இந்த ரிசோட் அது அமைந்துள்ள சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதன் ஊழியர்களில் 60 சதவீதமானோர் 20 கிலோ மீட்டர் சுற்றுப்புறத்துக்குள் வசிப்பவர்கள். ரிசோட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் சேவைகள் அப்பகுதியிலிருந்தே பெறப்படுவதால், உள்ளூர் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு செய்யப்படுகிறது. 

ஹெரிட்டன்ஸ் கந்தலமவில் பரிமாறப்படும் உணவுகளும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. ஜெப்ரி பாவாவுக்கு மரியாதை செலுத்தும் பாவா இரவுணவு முதல் நூற்றாண்டுகால குகையில் பரிமாறப்படும் மனங்கவர் இரவு உணவு வரை அனைத்து உணவுகளுமே இலங்கையின் சமையல் மற்றும் கலாசார பாரம்பரியத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை விருந்தினர்களுக்கு வழங்குகின்றன.

எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் ஹோல்டிங்ஸின் இணை பிரதித் தவிசாளரும் இணை முகாமைத்துவ பணிப்பாளருமான ஸ்டஷானி  ஜயவர்தன கருத்து வெளியிடுகையில்,

“நாம் எமது பயணத்தில் இந்த முக்கியமான மைற்கல்லை அடைந்திருப்பது குறித்து நம்ப முடியாத அளவுக்குப் பெருமிதம் அடைகின்றோம். பேண்தகு தன்மை, சூழல் பாதுகாப்பு மற்றும் இணையற்ற விருந்தினர் அனுபவத்திற்கான நிலையான அர்ப்பணிப்பை ஹெரிட்டன்ஸ் கந்தலம உள்ளடக்குகின்றது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பையும் சமூகத்திற்கான உதவியையும் சமநிலைப்படுத்துவதன் மூலம் இயற்கைச் சூழல் அமைப்புகள் மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டு பொறுப்பு வாய்ந்த சுற்றுலாத்துறையை எவ்வாறு வளர்க்க முடியும் என்பதற்கு ஹெரிட்டன்ஸ் கந்தலம ஓர் உதாரணமாக விளங்குகின்றது. 

30 ஆண்டுகளைக் கொண்டாடும் நாம், கந்தலம பிரதேசத்தின் இயற்கை எழிலைப் பாதுகாத்து, இனிவரும் தலைமுறைகளுக்கு அர்த்தமுள்ள கதைகளைச் சொல்வதற்கான எமது வாக்குறுதியை மீள வலியுறுத்துகின்றோம்” என்று கூறினார்.

எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸின் இணை முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சுசித் ஜயவிக்கிரம தனது கருத்தை வெளியிடுகையில்,“எமது பொறுப்பு மிகச் சிறந்த விருந்தோம்பலை வழங்குவதற்கு அப்பாலும் விரிவானது. சமூகத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குவதற்கும் மக்களுக்கு வலுவூட்டுவதற்கும் நாம் எம்மை ஆழமாக அர்ப்பணித்துள்ளோம். 30 ஆண்டுகால தரச்சிறப்பைக் கொண்டாடும் நாம், விருந்தினர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எமது சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக்கூடிய பேண்தகு தன்மையுள்ள சுற்றுலாத் துறை நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். உள்ளூர் மூலவளங்களைப் பயன்படுத்துதல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சமூகத்தினருக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நாம் எமது ரிசோட்டின் சுவர்களுக்கு அப்பாலும் சாதகமான தாக்கத்தை உருவாக்க முயற்சி செய்கின்றோம்” என்று தெரிவித்தார்.

30ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, எமது 30 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தையும் முக்கிய நிகழ்வுகளையும் சித்திரிக்கும் விசேட கண்காட்சி ஒன்று ஜூன் 24ஆம் திகதியிலிருந்து ஹெரிட்டன்ஸ் கந்தலமவில் நடத்தப்படுகின்றது.

எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் பற்றி…

ஹெரிட்டன்ஸ் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோட்ஸ் என்பது இலங்கையின் மாபெரும் கூட்டுநிறுவனங்களில் ஒன்றான எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி.யின் ஒரு பகுதியான எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸின் பிரதான பிரான்ட் ஆகும். எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் அதற்குச் சொந்தமான 17 ஹொட்டேல்கள் மற்றும் ரிசோட்களை இலங்கை, மாலைதீவு, ஓமான், இந்தியா ஆகிய நாடுகளில் நடத்துகின்றது. நிறுவனத்துக்குச் சொந்தமான ஹொட்டேல்கள் ஹெரிட்டன்ஸ் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ், அடாரன் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ், துர்யா ஆகிய வர்த்தகப் பெயர்களில் இயங்குகின்றன. பிரபல கட்டடக்கலை மேதை ஜெப்ரி பாவா அவர்களினால் இலங்கையில் வடிவமைக்கப்பட்ட ஆகக்கூடிய ஹொட்டேல்களின் பாதுகாவலனாக ஹெரிட்டன்ஸ் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் விளங்குவதால் அவற்றின் கட்டடக்கலை சிறப்பும் தனித்துவம் வாய்ந்ததாகும்.

ஹெரிட்டன்ஸ் கந்தலம அன்றும் இன்றும் 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right