சர்வதேச நாணய நிதியத் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து நேற்றைய தினம் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம் என்றாலும் நேற்றைய தினம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 265 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், களுத்தறை, புளத்சிங்கள மதுராவல, ரெமுன மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 27 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2028 வரை கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. 2028 முதல் கடன் தவணைகளைச் செலுத்த வேண்டும். இது ஒரு நல்ல விடயம் போல் தெரிந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் 2023 மார்ச் அறிக்கை கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின்படி, நாம் 2033 முதலே கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த இணக்கப்பாட்டு கலந்துரையாடலினால் 2033 இலக்கை எட்ட முடியாது போயுள்ளது.
2028 ஆம் ஆண்டு முதல் கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
மேலும், சகல நாடுகளையும் விட நமது நாடு கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை வேகமாக பூரத்தி செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது முற்றிலும் தவறான கருத்தாகும். எமது நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. செயல்முறையை முழுமைப்படுத்தாமல் இவ்வாறு பட்ட பொய்யை மக்களிடம் சொல்வது தவறாகும். எம்மை விட வேகமாக தங்கள் கடனை மறுசீரமைப்புச் செயல்முறையை முழுமையாக மறுகட்டமைத்த பல நாடுகள் உள்ளன.
கானா போன்ற நாடு முன்னெடுத்த விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் அந்நாட்டின் மொத்த கடனில் 37% குறைப்பை, செய்து கொள்ள முடிந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையின் அடிப்படையில் நமது நாட்டில் வட்டி குறைப்புக்கான இணக்கப்பாடு எட்டப்படவில்லை. வட்டியையும் கந்துவட்டியையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு நாடாக நாம் ஒரு முழுமையான இணக்கப்பாட்டை எட்டவில்லை. சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் அடங்களாக சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை. இந்த கலந்துரையாடல்கள் ஜூலை 3 ஆம் திகதி வரை தொடர்கிறது.
இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், எமது நாட்டுக்கு எதிராக வழக்குத் தொடரவும் குறித்த தரப்பினர் தயார் நிலையில் உள்ளனர்.
கானா நிதி அமைச்சர் தனிப்பட்ட முறையில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுதான், கானா நாடு எமது நாட்டை விட வேகமாக ஒரு விரிவான ஒப்பந்தத்தில் நுழைந்ததற்கு வழிவகுத்த காரணமாகும். எமது நாட்டின் நிதியமைச்சர் அவ்வாறான கலந்துரையாடலுக்குச் செல்லவில்லை. இதனால் அரசாங்கம் பொய்யுரைத்து வருகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கடன் சலுகையைப் பெற இந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. கானா மற்றும் சாம்பியா போன்ற நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கு வெளிநாட்டு வருமானம் மற்றும் பணவனுப்பல்களை அடிப்படைகளாக கொண்டிருந்தன.
கானா மற்றும் சாம்பியா வெளிநாட்டு வருவமானம் மற்றும் பணவனுப்பல்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இருந்தாலும், ஒரு நாடு என்ற ரீதியில் நாம் இந்த பேச்சுவார்த்தைகளிலும் கலந்துரையாடல்களிலும் தவறிழைத்துள்ளோம். இங்கு பிழை நேர்ந்துள்ளது.
மேலும், சீன அபிவிருத்தி வங்கியுடனும் நாம் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும் தான். சாம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு இந்த வங்கி இருதரப்பு கடன்களையே வழங்கியிருந்தாலும், எமது நாட்டுக்கு வணிகக் கடனாகவே வழங்கியுள்ளது. இங்கும் பல பிரச்சினைகள் எழுகின்றன.
சமத்துவ அடிப்படையில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வருவமாறு இருதரப்பு கடன் வழங்குநர்களின் ஒரு தரப்பான பாரிஸ் கிளப் அறிவிப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
எக்ஸிம் வங்கி, எமது நாட்டில் உள்ள அரச முயற்சியாண்மைகளுக்கு கடன் வழங்கியுள்ளது. நீர் வழங்கல் மற்றும் தாமரை கோபுரம் நிர்மாணிப்பதற்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த எந்த வெளிக்கொணர்வும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவையின் 179 மில்லியன் டொலர் பிணைமுறி பத்திரங்களுக்கான காலக்கேடு முடிவடையவுள்ளது. இந்த பத்திரதாரர்கள் கடன் வெட்டுக்கு உடன்பாடில்லை.
இவர்கள் வழக்கு தொடரவும் தயாராகி வருகின்றனர். இந்த பிணைமுறி பத்திரங்களின் காலக்கேடு முடிவடையும் திகதி நெருங்கி வருவதால், இது குறித்து அரசாங்கம் எடுக்கும் கொள்கை நிலைப்பாடு என்ன? என்றும், அந்த கொள்கை நிலைப்பாட்டை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
இதுபோன்ற பல சிக்கல்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன. இது குறித்த சரியான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தத் தகவல்கள் தொடர்பில் அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வுகளை செய்து, நாட்டுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த உண்மைகளை மக்களிடம் முன்வைக்க தயார்.
எமது நாட்டின் கல்வித்துறையில் சேவையாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்களது உரிமைகளுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அவர்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.
அது அவர்களின் உரிமை என்றாலும், அவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டத்துக்கு மிலேச்சத்தனமாக அரசாங்கம் மிகவும் அடக்குமுறைத்தனமாக நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கல்வித் துறையில் 7 பகுதியினர் உள்ளனர். சகல அரசியல்வாதியும் கல்வி குறித்து பேசுகின்றனர். கல்வியில் மனித வளத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அவர்களினது சுய திருப்தியை மேம்படுத்தும் பயணத்தை மேற்கொண்டால் தான் கல்வியில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைய முடியும்.
இந்நாட்டிலுள்ள 10,096 பாடசாலைகளில் 41 இலட்சம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும், அவர்களை புத்திஜீவிகளாகவும் மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்ற இந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இவ்வாறு தாக்கப்பட்டமைக்கு வருந்துகிறேன்.
ஆசிரியர்கள் எப்பொழுதும் தங்கள் மாணவச் செல்வங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே செயற்பட்டு வருகின்றனர். சிறப்புச் சலுகைகள் ஏதும் பெறாமல் மாலை வேளையில் கூட, பாடசாலைகளில் மேலதிக வகுப்புகளை நடத்தி மாணவர்களை பரீட்சைகளில் தேர்ச்சியடையச் செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அவர்களின் முன்மொழிவுகளை முன்வைக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், மிலேச்சத்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமான முறையிலும் தாக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM