(எம்.எப்.எம்.பஸீர்)

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டொக்டர். சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புதிதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சுதத் நாகமுல்லா ஆகியோரின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபாலவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனயவுப் பிரிவு ஊடாக விஷேட விசாரணைகளை செய்ய பொலிஸ்மா அதிபருக்கு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படியே தற்போது புதிதாக குற்றப் புலனயவுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நேற்று கடுவலை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதனை விட இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த முல்லேரிய பொலிஸாரிடமும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடமும் குற்றப் புலனயவுப் பிரிவு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.