2024 ஜூலை மாத ராசி பலன்கள்

26 Jun, 2024 | 04:39 PM
image

மேஷம் 

வாழ்க்கையை சூழ்நிலைக்கு தகுந்தபடி அமைத்துக்கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரனுடன் ராசியில் ஆட்சி பெறுவதும், தன ஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்வையிடுவதும், சனியின் பார்வை ராசியில் அமைவதும், உங்களின் அனைத்து காரியங்களும் திறம்பட செய்து பாராட்டை பெறுவீர்கள். விளையாட்டுத்துறை சார்ந்த வெளியூர் பயணம் சிலருக்கு அமையும்.

தாயார் வழி சொந்த உறவுகளில் இருந்துவந்த விரிசல்கள் மறையும். குடும்ப ஒற்றுமை ஏற்பட சிலர் முயற்சி செய்து நன்மை பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் திறம்பட செயற்படுவீர்கள். அரசியலில் முன்பிருந்த செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். உங்களின் சொந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடல் ரீதியான சின்ன தொந்தரவுகள் உண்டாகும். எதற்கும் அஞ்சாமல் உங்களின் கடமையை செய்வீர்கள். பொது விடயங்களில் உங்களுக்கு எது நியாயமானதாகப்படுகிறதோ... அதை விட்டு பின்வாங்காமல் கடைசி வரை அதற்காக போராடுவீர்கள். உங்களின் மன வலிமைதான் உங்களுக்கு எப்பொழுதும் பலமாக அமையும்.

கலைத்துறையினருக்கு திடீர் வாய்ப்புகள் அமையும். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு பயனுள்ளதாக அமையும். கணவன் -மனைவி ஒற்றுமை நிலவும். மனம் விட்டுப் பேசி சமாதானம் கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு கட்ட, மனை வாங்க சிலருக்கு சந்தர்ப்பம் அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:

16-07-2024 செவ்வாய்க்கிழமை மாலை 06.35 முதல் 18-07-2024 வியாழக்கிழமை இரவு 02.51 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

வழிபாடு: வியாழன் காலை 06 - 07 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து கடலை மிட்டாய் வைத்து, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வர நீங்கள் நினைத்த சகல காரியமும் வெற்றியை தரும்.

ரிஷபம்

நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யத் துடிக்கும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு பார்வைபடும் இடங்கள் சிறப்பான பலனை பெற்றுத் தரும். உங்களின் ராசிநாதன் தன ஸ்தானத்தில் சுகஸ்தானாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று அமர்வது காரியத்தில் திறம்பட செயற்பட்டு நன்மை அடைவீர்கள். லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து ராசியை பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் பலன் கிடைக்கும்.

சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும், வெளிநாட்டு தொழில் முதலீடுகளிலும் ஆர்வம் உண்டாகும். ஒன்லைன் வர்த்தகத்தில் முதலீடுகளை செய்வீர்கள். எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு, பின்பு யோசித்து செயற்படுவீர்கள். உரிய நேரத்தில் செய்திடாமல் தாமதமானதால் சிலருக்கு பதற்றமான சூழ்நிலை உண்டாகும். கலைத்துறையில் வளம் பெறுவீர்கள். 

உங்களின் சகல முயற்சிகளுக்கு பக்க பலமாக உதவிகள் கிட்டும். உங்களைப் பற்றி மட்டும் சிந்தித்து செயற்படுவீர்கள். பொது விடயங்களில் உண்மையான விடயங்களுக்கு உறுதுணையாக இருந்து செயற்படுவீர்கள். உயர்கல்வி கற்க சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அமையும். குறுகிய கால முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். 

விவசாய இடுபொருட்கள் விலை ஏற்றம் உண்டாவதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வெள்ளி, தங்க நகை வியாபாரம் ஆதாயம் தரும். மளிகை பொருள் விற்பனை நல்ல லாபத்தை பெற்றுத் தரும். ஆணாதிக்கம் உள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். மனைவியுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

18-07-2024 வியாழன் இரவு 02.52 முதல் 21-07-2024 ஞாயிறு காலை 08.37 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.

வழிபாடு: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து இலுப்பெண்ணெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நினைத்தபடி சிறப்பாக நடக்கும்.

மிதுனம்

உங்களை வளம் பெறச் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் தனாதிபதியுடன் லாபாதிபதி சம்பந்தப்படுவதால், உங்களின் எண்ணங்களை செயற்படுத்த மேலும் வளம் செய்வார்கள். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து குருவைப் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சனி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்ப்பதால் எதையும் எளிதாக செய்ய முடியாமல் போனாலும் உங்களின் சொந்த முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

முக்கிய விடயங்களைப் பற்றி பேசும்போது.. நம்பிக்கையானவர்களா என்பதை தெரிந்து கொண்டு பேசத் தொடங்குங்கள். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். புதிய செலவுகள் உண்டாகும். காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பால் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மேம்பாடு அடையும். 

குறுகிய முதலீடுகள் மூலமும் கமிசன் தொழில் மூலமும் வருமானம் கிடைக்கும். அரசியலில் நல்ல ஆலோசனை சொல்வீர்கள். புத்துணர்வுடன் செயற்படுவீர்கள். காரண காரியமில்லாமல் எதிலும் நீங்கள் தலையிட மாட்டீர்கள். சரியான நேரத்தில் உங்களின் செயல் பாராட்டும்படி அமையும். 

கலைத்துறையினருக்கு சில புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் ராசிநாதன் தன ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் தேவைகளுக்கேற்ப பொருளாதார மேன்மையை அடையச் செய்வார். சாதனையாளர்களாக வரவேண்டும் என்ற உங்களின் முயற்சி சிறப்பாக செயற்பட ஊக்கத்தைப் பெறுவீர்கள். 

நினைத்த காரியம் வெற்றி பெற உங்களின் செயற்பாடுகளை துரிதப்படுத்துவீர்கள். பொது விடயத்தில் ஆர்வம் குறைவாக இருந்தாலும், பிறரின் உதவியை நாடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத் தேவைக்கான பணப் புழக்கம் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

21-07-2024 ஞாயிறு காலை 08.38 முதல் 23-07-2024 செவ்வாய் பகல் 12.25 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், திங்கள், செவ்வாய்.

வழிபாடு: வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து கொண்டை கடலை நைவேத்தியம் வைத்து வணங்கி வர நீங்கள் வேண்டிய வரம் விரைவில் கிடைக்கும்.

கடகம்

காலத்தை அறிந்து, அதற்கு தக்கபடி செயற்படும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதும், பாக்கியாதிபதி குரு லாப ஸ்தானத்தில் அமர்ந்து பார்வையிடுவதால் குரு பார்க்குமிடம் சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நல்ல விடயங்களை சொல்லி பாராட்டைப் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை விரைவாக செய்து முடித்து நன்மைப் பெறுவீர்கள்.

அரசியலில் இனி வாய்ப்பு இல்லை என்று நினைத்த உங்களுக்கு முன்பு இருந்த நன்மதிப்பு தொடரும். காலத்தையும் சூழ்நிலையையும் கருதி நீங்கள் யோசித்து செயற்படும் எந்த காரியமும் நற்பலன்களைப் பெற்றுத் தரும். பொது வாழ்வில் உங்கள் பங்கு சிறப்பாக அமையும். கொடுத்த இடத்தில் பல காலம் இழுபறியில் இருந்துவந்த பண பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நற்பலன்களையும், எதிர்காலத்தை வளம் பெற செய்யும் வாய்ப்பினையும் தரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பிறருக்கு பிணையம் இடுவதை தவிர்க்கவும். பணியில் உங்களின் மேலதிகாரியில் தொந்தரவு குறைந்து, நன்மை உண்டாகும். எதிலும் நீங்கள் சந்தித்துவந்த சோதனை காலம் இனி சாதகமான சூழ்நிலையாக மாறும். 

தாயாரின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் கடன் பிரச்சினை, வராத பணம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். தேவைக்கு பணம் வரும்.

சந்திராஷ்டம நாட்கள்: 23-07-2024 செவ்வாய் பகல் 12.27 முதல் 25-07-2024 வியாழன் மாலை 03.05 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென் கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

வழிபாடு: சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியைத் தரும்.

சிம்மம்

மனதில் பட்டதை உடனே செய்துவிட எண்ணும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு உங்களின் ராசிநாதன் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்து பஞ்சம ஸ்தானத்தை பார்வையிடுவதும் யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதும், எடுத்த காரியத்தை முடிக்கும் வரை உங்களின் முயற்சிகளை விடாமல் செய்து வருவீர்கள். கடந்த காலத்தில் இருந்துவந்த தொய்வு நிலை மாறி விரைவாக செயற்பட்டு நலம் பெறுவீர்கள்.

உங்களின் உடல்நலனில் அடிக்கடி கவனம் செலுத்த வேண்டிவரும். பொது விடயத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்டு செயற்படுவீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கும் மதிப்பும் மரியாதையும் மீண்டும் உயரும். உங்களின் நண்பர் போல பேசி இதுவரை உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவரை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.

உங்களை நம்பி வந்தவர்களுக்கு நன்மையை செய்ய வேண்டும் என்று நினைத்து செயற்படுவீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் இறுதி வரை போராடி வெற்றி காண்பீர்கள். நிலையான உத்தியோகம் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் அடிக்கடி சென்றுவரும் சூழ்நிலை உருவாகும். சுற்றத்தார்களின் அரவணைப்பு நீடிக்கும்.

கணவன் - மனைவி உறவில் சச்சரவு இருந்தாலும் சற்று இணக்கமான சூழ்நிலையும் நிலைக்கும். பாதியில் விட்டுப் போன சில காரியங்கள் மீண்டும் தொடரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு வாகனத்தை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். உங்களின் கைப்பேசியை மாற்றிக்கொள்ள வேண்டிவரும். சகோதரரின் உதவி கிட்டும். பொருளாதார நிலையில் சற்று மேன்மை தென்படும். தொழிலில் நல்ல வளர்ச்சியை பெற்று வருமானம் கூடும்.

சந்திராஷ்டம நாட்கள்: 25-07-2024 வியாழக்கிழமை மாலை 03.06 முதல் 27-07-2024 சனிக்கிழமை மாலை 05.27 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெண்மை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.

வழிபாடு: ஞாயிறு ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி உளுந்து வடை நைவேத்தியம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் சிறப்பாக அமையும்.

கன்னி

சொல்வதை செயலில் காட்டி, நன்மையைப் பெற்றுத் தரும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம ஸ்தானத்தை பார்ப்பதும், குரு உங்களின் ராசியையும் பஞ்சம ஸ்தானத்தையும் பார்வையிடுவதும் சகல காரியங்களும் நினைத்தபடி செயல்பட தொடங்கும். காலத்துக்கு தகுந்தபடியும், சூழ்நிலைகளையும் அனுசரித்து உங்களின் செயற்பாடுகளை செயல்படுத்துவீர்கள்.

ஒன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் உண்டாகும். சொந்த முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். எந்த ஒரு கலையையும் தானே ஆராய்ச்சி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். கணினித்துறையில் சிறந்த நிபுணத்துவமும், இந்த காலத்துக்குரிய விருப்பத்தையும் உணர்ந்து பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள். ஆசிரியர் பயிற்சி கல்வி சிறப்பாக அமையும்.

வணிகம், கணக்கியல், பட்டய கணக்காளர்.. போன்ற தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு பொருளாதார நிபுணத்துவம் சம்பந்தமான பதவி கிடைத்து, அதில் சிறப்பாக செயற்படுவார்கள். முதலீடு இல்லாத சமூக பணி செயற்பாடுகள் மூலம் வருமானம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல கலைநயமான நடிப்புத்திறனால் நிகழ்ச்சியில் நல்ல பாராட்டுகளை பெறுவீர்கள்.

புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலை சிலருக்கு வரும். நிலம் சம்பந்தமான சில வழக்குகள் பல காலம் நிலுவையில் இருப்பவருக்கு விரைவில் தீர்வு உண்டாகும். ஆடை சம்பந்தமான வியாபாரம் செய்பவருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பித்தளை பாத்திர வியாபாரம் சிறப்பாக நடக்கும். வாகன வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். ஆன்மிக பயணம் சென்று வருவீர்கள். கடமையைச் செய்து அதற்கு தகுந்த பலனை பெற்று, வளம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 27-07-2024 சனி மாலை 05.26 முதல் 29-07-2024 திங்கள் இரவு 08.26 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், ஞாயிறு.

வழிபாடு: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ மாலை போட்டு நெய் தீபமேற்றி வணங்கி வர நினைத்த காரியம் தடையின்றி சிறப்பாக நடக்கும்.

துலாம்

இன்னல்கள் வந்தாலும் அதை பற்றி நினைக்காமல் ஆக்கபூர்வமாக செயற்படும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி, தனஸ்தானாதிபதி பார்வையிடுவதும், ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் லாபாதிபதியுடன் சேர்ந்து இருப்பதும், நீங்கள் மென்மேலும் வளர்ந்து வர சகல வாய்ப்புகளும் அமையும். தொழிலில் நீங்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். பணியில் உங்களுக்கு இருந்த கஷ்டமான சூழ்நிலைகள் மாறி, இலகுவான சூழ்நிலை உண்டாகும். அலைச்சல் குறையும். 

வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் கல்வியில் அதிக பெறுபேறு பெற்று, உயர்கல்வியை விருப்பத்துக்கேற்ப தெரிவு செய்வார்கள். பொது நல கருத்துக்களை ஆதரித்து, அதற்கேற்ப செயற்படுவீர்கள். அரசியல்வாதிகளிடம்  காலம் அறிந்து பேசி காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவீர்கள். பிறருக்கு எதையும் விட்டுக் கொடுத்து, பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்வீர்கள். நல்ல மனிதர்களின் தொடர்புகளால் உங்களின் வாழ்க்கை நிலையில் மாற்றம் உண்டாகும்.

தொலைதூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும். முதலீடுகளை செய்யும் முன்பு அதன் நிலை பற்றி அறிந்து முதலீடு செய்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு சில காலம் சரியில்லாமல் இருந்த நிலை மாறி, வளம் பெறும் காலமாக அமையும். சிறந்த எழுத்தாளர்களாக மிளிர்வதற்கான திறமை உண்டாகும். கற்பனை வளம் நன்றாக இருக்கும். 

எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல், தெளிவாக செய்து முடிப்பீர்கள். உறவுகளில் இருந்த விரிசல் படிப்படியாக சரியாகி நன்மை உண்டாகும். தொழிலில் முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டிவரும். பேசியே எல்லோரின் மனதிலும் இடம்பிடித்துவிடுவீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்: 

02-07-2024 செவ்வாய் பகல் 12.16 முதல் 04-07-2024 வியாழன் மாலை 04.55 மணி வரையும்.

29-07-2024 திங்கள் இரவு 08.27 முதல் 30-07-2024 புதன் இரவு 12.52 மணி வரையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, திங்கள், செவ்வாய்.

வழிபாடு: வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து வணங்கி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வளம் பெறும்.

விருச்சிகம்

துணிச்சலும் மன வலிமையும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் கேது லாப ஸ்தானத்திலும், லாபாதிபதி பாக்கியஸ்தானத்திலும் அமர்வது உங்களின் பொருளாதார மேன்மையை பெற்றுத் தரும். தொழிற்சங்கப் பணிகளைச் சிறப்பாக செய்து வருவீர்கள். தொழிலாளர்களில் நன்மையை கருதி சிறப்பாக செயற்படுவதுடன், அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் சரிசெய்து தருவீர்கள். 

ஆன்மிக பயணம் சிறப்பாக அமையும். விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அடிக்கடி வெளியூர் பயணம் செய்ய வேண்டிவரும். உணவு சம்பந்தமான சிக்கல்கள் வரும். தனி திறமையுடன் செயற்படுவதை விரும்புவீர்கள். விளையாட்டுத்துறையில் ஆர்வமுடன் செயற்படுவீர்கள். 

நட்புக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், கடமையை செய்து பலனை எதிர்பாராமல் பலருக்கும் உதவிகளை செய்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகி மறையும். தொழில் செய்து வருபவருக்கு வியாபாரம் குறைவாகவே இருந்தாலும் வருமானத்தில் குறை வராது. சகோதரர்களின் பகை நீங்கி, சுபீட்சம் பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து நடப்பீர்கள்.

உங்களின் எண்ணத்துக்கு தகுந்தபடி, எல்லா வளமும் கிடைக்கும். செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்கள் மீது மோகம் உண்டாகும். அதை வாங்க கடன்பட வேண்டிவரும். வேலை கிடைக்க முயற்சி செய்தால், விரைவில் நல்ல வேலை அமையும். கலைத்துறையினருக்கு வெளியூர் சென்று நிகழ்ச்சி செய்யும் சூழ்நிலை உருவாகும். தொழிலிலும் உத்தியோகத்திலும் உங்களின் செயல் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்: 04-07-2024 வியாழன் மாலை 04.56 முதல் 06-07-2024 சனி இரவு 11.46 மணி வரையும்.

30-07-2024 புதன் இரவு 12.53 முதல் 03-08-2024 சனி காலை 07.28 மணி வரையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.

வழிபாடு: சனிக்கிழமை காலை 09.00 - 10.30 மணிக்குள் அதாவது ராகு காலத்தில் வைரவருக்கு நான்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வேண்டிக்கொள்ள காரிய தடை நீங்கி, சுபீட்சம் உண்டாகும்.

தனுசு

தங்களின் இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு உங்களின் ராசிநாதனின் பார்வை தனஸ்தானத்தில் படுவதும், உங்களின் யோகாதிபதி சூரியனும், லாபாதிபதி சுக்கிரனும் உங்களின் ராசியை பார்ப்பதும் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமையும். எதிரி கூட உங்களை பார்த்து ஒதுங்கிக்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். அரசியலில் இருந்து வருபவருக்கு புதியதாக பொறுப்புகள் ஏற்க வேண்டிவரும்.

பிறரின் கண்காணிப்பில் இருந்த சில பொறுப்புகளை கூடுதலாக உங்களிடம் ஒப்படைக்க வேண்டிவரும். உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக உதவி கிடைக்கும். பொது வாழ்வில் அக்கறை இருந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்தமாட்டீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

வேலைப்பளு காரணமாக வெளி வேலைகளை குறைத்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு புதிய இடமாக இருப்பதை பழகிக்கொள்ள வேண்டிவரும். படிப்பில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். தொலைதூர தொடர்பு மூலம் சிலருக்கு நல்ல செய்தி வரும். கணினி பயிற்சியை கற்றுக்கொள்ள ஆசைப்படுவீர்கள். செய்யும் தொழிலில் முழு கவனம் செலுத்தி மேன்மை கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு நீண்ட நாட்கள் வாய்ப்பு இன்றி இருந்த நிலை மாறி, புதிய வாய்ப்புகள் அமையும். நல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பெண்களுக்கு சிலருக்கு பொருத்தமான வரன் அமையும் வாய்ப்பு கிடைக்கும். முன்னோர் வழிபாடுகளை செய்து, பெரியோர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். அன்னதானம், ஆடைதானம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

இனி வரும் காலம் சிறப்பாக அமைய வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உங்களின் அன்றாட தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பொருளாதாரம் சிறக்கும். வாராகடன் சிலருக்கு வசூல் ஆகும்.

சந்திராஷ்டம நாட்கள்: 06-07-2024 சனி இரவு 11.47 முதல் 09.07.2024 செவ்வாய் மாலை 09.09 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.

வழிபாடு: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் செந்தூரமும் சாற்றி வழிபாடு செய்து வர, நினைத்த காரியம் சீக்கிரம் நடக்கும்.

மகரம்

பிறருக்கு உதவி செய்வதை கொள்கையாக கொண்ட மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்தும், லாபஸ்தானத்தை பார்ப்பதும், குரு உங்களின் ராசியை பார்ப்பதும் உங்களின் மன வலிமை சிறப்பாக அமையும். எந்த காரியமும் விரைவில் வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும்.

சனி ஆட்சி பெற்று தனஸ்தானத்தில் அமர்வதன் மூலம் உங்களுக்கு மக்கள் செல்வாக்கு உயரும். உங்களின் தனித்திறமைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு கொடுப்பார்கள். எதிலும் உங்களுக்கு வெற்றிதான். நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழிற்சங்க பொறுப்பு வகிப்பவர்கள் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்வார்கள்.

சுகஸ்தானத்தில் உங்களின் சுகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று சந்திரனுடன் சம்பந்தப்படுவதால் ரியல் எஸ்டேட், வீட்டு மனை விற்பனை மூலம் ஆதாயம் பெறுவீர்கள். சோதனைக் காலம் முடிந்து இனி சாதகமான காலமாக அமையும். உறுதியான நிலைப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, நற்செயல்களை செய்து வருவீர்கள்.

முக்கிய காரியங்களை கையாளும்போது நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் செய்து வருபவருக்கு வேண்டிய வசதிகள் கிடைக்கும். கடல் கடந்து வேலையில் இருப்பவர்களுக்கும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் சொந்த ஊருக்கு வந்து, உறவுகளிடம் அன்பை பரிமாறிக்கொள்ளும் நல்ல சந்தர்ப்பம் அமையும்.

கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக அமையும். உங்களின் ஒவ்வொரு செயலும் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதால், திறமை பெறுவீர்கள். உரிய நேரத்தில் அனைத்தையும் செய்து முடிக்கும் வகையில் உங்களின் செயற்பாடுகள் அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஏற்பட்டு, நலமுடன் இருப்பீர்கள். உங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வருமானம் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 09-07-2024 செவ்வாய் காலை 09.10 முதல் 11-07-2024 வியாழன் இரவு 08.23 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, புதன், வியாழன்.

வழிபாடு: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள எதிரி தொல்லை நீங்கி, சுபீட்சம் பெறுவீர்கள்.

கும்பம்

புத்துணர்ச்சியுடன் செயற்பட்டு காரியத்தை செயற்படுத்தும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஜென்மத்தில் அமர்ந்தாலும், உங்களின் அன்றாட செயற்பாடுகளை திறன்பட செயற்பட திறமைகள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருப்பீர்கள். நிலையான தொழில் செய்துவரும் உங்களின் தொழிலில் வளம் தடைப்பட்டாலும், நீங்கள் உங்களின் தனித்திறமையால் சரி செய்து கொள்வீர்கள்.

சில தடைகள் இம்மாதம் இருந்துவரும். எனினும் கடமையை செய்வதை தவிர்க்க மாட்டீர்கள். எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களின் பணியை செய்து வருவீர்கள். அரசியலில் சரியான கோட்பாடு இருந்தாலும் உங்களின் உடன் இருந்தவர்கள் உங்களுக்கு துரோகம் செய்ததை நினைத்து வேதனைப்படுவீர்கள்.

குரு உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது சற்று ஆறுதலை தருவதுடன் வருமானத்தில் நிறைவுகளை தருவார். உங்களின் முயற்சி பழுதின்றி நடக்கும். கலைத்துறையினருக்கு காலத்தை கடந்து, இனி நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் அறிமுகம் செய்த நபரே உங்களுக்கு எதிராக செயற்படுவதைக் காண்பீர்கள். உலக நியதிகளின்படி, எல்லாம் சிறப்பாக அமையும்.

அரசியலிலும் பொது வாழ்விலும் சிறப்பாக செயற்பட்டு உங்களின் மதிப்பை தக்கவைத்துக்கொள்வீர்கள். இனி வருங்காலத்தில் எதை செய்ய வேண்டாமென்று தீர்மானித்தீர்களோ.. அதை சரி செய்துகொள்வீர்கள். மாணவர்களுக்கு தடையின்றி கல்வி அமையும். முக்கிய பிரச்சினைகளை கையாளும்போது அதற்கு தகுந்தபடி உங்களின் செயற்பாடுகளையும் அனுசரித்து மாற்றிக்கொள்வீர்கள். 

விவசாயத்தில் செலவு செய்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். வெளியூர் சென்று வருவீர்கள். வெளிநாடு சென்று வர சிலருக்கு முயற்சிகளில் தடை உண்டாகும். குடும்ப ஒற்றுமையும் பொருளாதாரமும் சீராக கொண்டு செல்ல பாடுபடுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 11-07-2024 வியாழன் இரவு 08.24 முதல் 14-07-2024 ஞாயிறு காலை 08.05 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், ஒரெஞ்ச், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென் கிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, செவ்வாய்.

வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்தும் செவ்வாய்க்கிழமை சுப்ரமணியர் வழிபாடும் செய்து வர, உங்களின் அன்றாட பிரச்சினைகளால் தடை ஏற்படாமல், சிறப்பான வெற்றியை தரும்.

மீனம்

மற்றவர்களிடம் இரக்க குணம் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு, முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பார்க்குமிடத்தால் சிறப்பான பலனை பெற்றுத் தரும். தன ஸ்தானாதிபதியும் பஞ்சமாதிபதியும் தனஸ்தானத்தில் இணைந்திருப்பது பொருளாதார மேன்மையைப் பெற்று தரும். விரய சனியின் காலம் என்பதால் தேவையற்ற செலவுகள் உண்டாகும்.

தொழில் செய்யும் இடத்தில் உங்களின் உற்ற நண்பரால் செலவு செய்து பண விரையம் ஆகும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. ஆன்மிக தேடல் இருப்பவர்களுக்கு உற்ற குரு சந்திப்பு உண்டாகும். அதன் மூலம் புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வீர்கள். கொள்கை பிடிப்புடன் செயற்பட்டு உங்களின் வளர்ச்சி தேவையானவற்றை உருவாக்கிக்கொள்வீர்கள்.

வெளியூர் பயணம் செய்ய வேண்டிவரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையும் இடமாற்றமும் உண்டாகும். கலைத்துறையினருக்கும் இசைக் கலைஞர்களுக்கும் நாட்டிய கலைஞர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறுகிய கால தொழிலில் பண பலன்களை பெறலாம். எதிலும் அதிகமான முதலீடு செய்வதை தவிர்த்து, சிறிய அளவில் முதலீடுகளை செய்து வாருங்கள். 

யாரையும் நம்பாமல் அவர்களை கண்காணித்து உங்களின் செயல்களை உறுதி செய்யுங்கள். 

அரசியலிலும் பொது வாழ்விலும் எப்பொழுதும் உங்களுக்கு ஈடுபாடு குறைவாக இருக்கும். குடும்ப சூழ்நிலையில் சிலருக்கு தேவையற்ற வாக்குவாதம் வரும் என்பதால் சற்று மௌனமாக இருப்பது நல்லது. நல்ல காரியத்தை செய்வீர்கள். தர்ம காரியத்தில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 14-07-2024 ஞாயிறு காலை 08.06 முதல் 16-07-2024 செவ்வாய் மாலை 06.34 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள், செவ்வாய்.

வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து, ‘ஸ்ரீ ராமஜெயம்’ எழுதி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியை தரும்.

(கணித்தவர் : ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17
news-image

உங்களுக்கு நன்மை பயக்கும் சூட்சும நட்சத்திரங்கள்

2024-09-25 18:24:41
news-image

ஆயுள் முழுவதும் ஆதரிக்கும் நட்சத்திரங்கள்...!?

2024-09-24 17:22:30
news-image

சகல ஐஸ்வரியத்தையும் வழங்கும் பிரத்யேக தீப...

2024-09-23 22:16:18
news-image

எளிய பரிகாரங்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றியை...

2024-09-23 16:55:56