வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எம்முடைய ஜாதகத்தில் உள்ள கிரக வலிமை மட்டும் போதாது. எம்முடைய வீடு, அலுவலகம், தொழிற்சாலை, விற்பனை நிலையங்கள்.. ஆகியவை அமைந்துள்ள நிலமும், இடமும் அங்குள்ள நேர் நிலையான ஆற்றலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் உங்களது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் உங்களுடைய உழைப்பு, முதலீடு, தொழிலாளர்களின் ஒற்றுமை..என பல அம்சங்கள் ஆதரவாக இருந்தாலும்... நீங்கள் பணியாற்றும் இடத்தின் வாஸ்து, நீங்கள் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து.. ஆகியவற்றில் கோளாறு இருந்தால்... முன்னேற்றம் தடைபடும். இதனை நீக்குவதற்கும் எம்முடைய முன்னோர்கள் பல தாவரங்களை வளர்க்கும் பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
எமக்கு நவகிரகங்களின் தோஷங்கள் மற்றும் கர்ம வினைகளும், கர்ம பலன்களும் இருப்பது போல்.. நாம் குடியிருக்கும் வீடு, பணியாற்றும் அலுவலகம், எம்முடைய தொழிற்சாலை ஆகியவற்றிற்கும் நவ கிரக தோஷம் உண்டு. இதனை களைவதற்கும், இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் எம்முடைய முன்னோர்கள் பின்வரும் பரிகார தாவர வளர்ப்பு குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
வீட்டின் மத்திய பகுதி எனப்படும் வரவேற்பறை அதாவது ஹால் பகுதி பிரம்ம ஸ்தானம் எனப்படும். இவை வெட்டுப்பட்டிருந்தால் அதாவது பிரிக்கப்பட்டிருந்தால்.. தந்தைக்கும், மகனுக்கும் இடையே மனக்கசப்பு, கருத்து வேறுபாடு, கருத்து முரண்பாடு, இருவரிடமும் இணக்கமில்லாத சூழல் ஆகியவை உருவாகும். மேலும் குடும்ப தலைவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகவீனம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் அல்லது ஏற்கனவே இருந்தால் அவை நீடிக்கும். இதை வாஸ்து கோளாறு என நிபுணர்கள் விவரிப்பதுடன் இதற்கு நிவாரணமாக சோற்றுக்கற்றாழை செடியை வீட்டில் வளர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள். இதனை வீட்டில் வளர்ப்பதுடன் தொடர்ச்சியாக பராமரிக்கத் தொடங்கினால் சுகவீன குறைபாடு என்பது மறையத் தொடங்கும். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான கருத்து முரண் களையப்பட்டு, பேச்சு வார்த்தை ஏற்படும். நவ கிரகங்களில் சூரியன் பாதிக்கப்படுவதால்.. இத்தகைய வாஸ்து குறைபாடு உண்டாகிறது.
இதனைத் தொடர்ந்து எம்முடைய இல்லத்து பெண்மணிகள் அதிகமாக புழங்கும் இடமான சமையலறை. அக்னி மூலை எனப்படும் இந்த சமையலறை பகுதியில் ஏதேனும் நீர்க்கசிவு ஏற்பட்டாலோ அல்லது நீர் தொடர்பான பாதிப்புகள் உண்டானாலும் அது சந்திரனின் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக எம்முடைய இல்லத்தரசிகளுக்கு ஆன்மீகம் முன்னோர்கள் ஒரு விடயத்தை சொல்வார்கள். அதாவது ''தண்ணீரை அதிகமாக செலவழிக்க கூடாது'' என்பார்கள். அப்படி கட்டுப்பாட்டை மீறி தண்ணீரை அதிகமாக செலவழித்தால்... அந்த குடும்பத்தில் பொருளாதார நிலையில் எப்போதும் பற்றாக்குறை என்பது நீடிக்கும். அதாவது வருவாய்க்கும், செலவிற்கும் சமமாக இருக்கும். சில வீட்டில் வருவாய் விட செலவு அதிகமாக இருக்கும். கடன் படும் சூழலும் உருவாகும். பெண்மணிகளுக்கு உஷ்ணம் தொடர்பான சுகவீனம் ஏற்படக்கூடும். இவர்களுக்கு எம்முடைய நிபுணர்கள் உங்களது சமையலறையில் அக்னி மூலை பாதிக்கப்பட்டிருந்தால்... அல்லது குறைபாடுடன் இருந்தால்.... அதிலிருந்து நிவாரணம் பெற வாடாமல்லி எனும் செடியை வளர்த்தெடுக்க வேண்டும். எம்மில் சிலர் வாடாமல்லி செடியை ஒரு முறை வாங்கி வந்து அக்னி மூலையில் பதியமிடுவார்கள். அந்த செடி நாளாந்தம் துல்லியமான பராமரிப்பு இல்லை என்றால் அதை வாடிவிடும். வாடிய பிறகு மீண்டும் பெண்மணிகளுக்கு உஷ்ணம் தொடர்பான பிரச்சனை ஏற்படக்கூடும். இதனால் வீட்டில் வாடாமல்லி செடியை வளர்க்கத் தொடங்கினால்... அதனை வாடாமல் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் சந்திர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து உங்களது வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் நீங்கி மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.
எப்போதும் எம்முடைய வீட்டில் தென் பகுதி அதாவது தெற்கு திசை சற்று மேடாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் வாடகைக்கு இருக்கும்போதோ அல்லது சொந்த வீடாக இருக்கும் போதோ வீட்டில் தெற்கு திசை சற்று தாழ்ந்து இருந்தால்... செவ்வாய் தோஷம் இருக்கிறது என பொருள். இதனால் சகோதரர்களுக்கிடையே பிரச்சனை நீடிக்கும். ரத்தம் தொடர்பான சுகவீனம் ஏற்படும். கடன் பிரச்சனை எழும். இதிலிருந்து நிவாரணம் பெற விரும்பினால்... சிவப்பு வண்ண செம்பருத்தி செடியை வாங்கி, அதனை தெற்கு திசையில் பதியமிட்டு வளர்த்து பராமரித்து வரவேண்டும்.
உங்களது வீட்டின் ஈசானிய மூலை என்பது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். தவறுதலாக அங்கு வேறு ஏதேனும் பொருட்கள் இருந்தாலோ அல்லது அந்த திசை அசுத்தமாக இருந்தாலோ.. உங்களுக்கு புதன் பகவானால் கிடைக்கக்கூடிய நேர் நிலையான அதிர்வுகள் கிடைக்கப் பெறாது. இதிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் என்றால் அந்த திசையில் துளசி மாடத்தை எழுப்பி, அங்கு துளசி செடியை பதியமிட்டு, பக்தியுடன் நாளாந்தம் வணங்கியும் வளர்த்தும் வரவேண்டும். துளசி செடியை நிபுணர்கள் பரிந்துரைத்த ஈசானிய மூலையில் வளர்த்து வந்தால் .. உங்களுடைய வீட்டில் உள்ள பிள்ளைகளின் கல்வி அறிவு மேம்படும். குறைவான பெறுபேறுகள் பெற்றவர்கள் கூட அதிக பெறுபேறுகளை பெற்று தேர்வுகளில் சித்தி அடைவார். இல்லத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்பட்ட நரம்பியல் தொடர்பான பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
உங்களுடைய வீட்டின் வடக்கு திசை இயல்பாக இல்லாமல் மாற்றம் அடைந்து பாதிக்கப்பட்டிருந்தால், குரு பகவானால் உங்களுடைய வீட்டிற்கு கிடைக்க வேண்டிய நேர்மறையான அதிர்வாற்றல் கிடைக்காது. இதனால் பொருளாதார ரீதியில் பற்றாக்குறை என்பது நீடித்துக் கொண்டே இருக்கும். குழந்தைகள் கூட மகிழ்ச்சியாக இல்லாமல் ஏதேனும் மனக்குறைடனேயே இருப்பர். இவர்கள் இத்தகைய குறைபாட்டில் இருந்து நிவாரணம் பெற விரும்பினால்... மூங்கில் செடியை வளர்க்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் வகையிலான மூங்கில் செடிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. அதனை வாங்கி வடக்கு திசையில் வைத்து வளர்த்தால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பமே சந்தோஷமாக இருக்கும்.
உங்களுடைய வீட்டின் மேற்கு மூலை அல்லது மேற்கு திசை பாதிக்கப்பட்டிருந்தால் சனி பகவானால் கிடைக்க வேண்டிய அருள் ஆற்றல் கிடைக்காது. இந்த வீட்டில் இருக்கும் வரை குடும்ப உறுப்பினர்களிடத்தில் சோம்பேறித்தனம் அதிகம் இருக்கும். ஆயுள் தொடர்பான அச்சத்தை உண்டாக்கும். சுகவீனத்தை ஏற்படுத்தி சத்திர சிகிச்சை வரை எடுத்துச் சென்று அதன் பிறகு நிவாரணத்தை வழங்கும். பண பற்றாக்குறை என்பது எப்போதும் இருக்கும். நீங்கள் செய்யும் பணிகளில் ஒரு வகையினதான மந்தத் தன்மை இருக்கும். இதிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் என்றால், வீட்டிற்குள் சங்குப்பூ செடியை பதியமிட்டு, அதனை நன்றாக வளர்த்தெடுக்க வேண்டும். இந்த செடி நன்றாக வளரும்போது வீட்டில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
உங்களுடைய வீட்டின் கிழக்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால்.. அந்த வீட்டின் குடும்பத் தலைவரின் வளர்ச்சி என்பது தேக்கமடையும். வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படும். தாம்பத்திய வாழ்க்கையில் குறைபாடு உண்டாகும். ஒரு ஆணின் வெற்றியை தீர்மானிப்பது கிழக்கு மூலை. அதனால் இந்தப் பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் இதிலிருந்து முழுமையான நிவாரணப் பெற விரும்பினால் கோழி கொண்டை பூ எனும் செடியை வீட்டில் வளர்க்க வேண்டும். இந்த பூச்செடியை வீட்டில் வளர்க்கத் தொடங்கியவுடன் சுக்கிர பகவானின் அளவற்ற அருளாற்றல் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் பிறகு நீங்கள் சுறுசுறுப்படைந்து வித்தியாசமாக சிந்தித்து செயல்பட தொடங்குவீர்கள். உங்களது கண் பார்வையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கிவிடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரித்து தாம்பத்தியம் சிறக்கும்.
உங்களுடைய வீட்டின் தென்மேற்குப் பகுதி எப்போதும் சற்று மேடானதாகவே இருக்கும். இதற்கு மாறாக அப்பகுதியில் சற்று பள்ளமாக இருந்தாலும், ராகு பகவானால் கிடைக்க வேண்டிய அருளாற்றல் கிடைக்காது. இந்த வீட்டில் வசிக்கும் கன்னிப்பெண்களிடத்தில் கற்பு நிலை சார்ந்த சுய ஒழுக்கம் என்பது கெடும். அவர்களிடத்தில் வேண்டாத பிடிவாதம் அதிகமாக இருக்கும். காதல் திருமணம் ஏற்படக்கூடும். அந்த வீட்டில் இருக்கும் இளம் ஆண்கள் சிகரெட், மது, மாது, போதை வஸ்து பாவனை.. போன்றவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். இவர்கள் ராகு பகவானின் பரிபூரண அருளாற்றலை பெற வேண்டும் என்றால் மருதாணி செடியை வீட்டில் வளர்க்க வேண்டும்.
உங்களுடைய வீட்டில் வடமேற்கு மூலை எனப்படும் வடமேற்கு திசை பாதிக்கப்பட்டிருந்தால் கேது பகவானால் கிடைக்க வேண்டிய முழுமையான அருள் ஆற்றல் கிடைக்காது. இந்த வடமேற்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால் மன நிம்மதியை தொலைத்து விடுவோம். இது காற்றின் தன்மையை கொண்டிருப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் சஞ்சலம் அடைந்து, வீட்டை விட்டு ஓடி விடலாமா..! என்ற எண்ணத்தை உண்டாக்கும். நீதிமன்ற வழக்குகள், காவல் நிலைய விசாரணை மற்றும் புகார்கள்.. ஏற்படும் . இவர்கள் இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் என்றால்.. கேது பகவானுக்கு விருப்பமான தொட்டா சிணுங்கி எனும் செடியை வளர்க்க வேண்டும். இந்த செடியை வளர்ப்பதுடன் நாளாந்தம் காலையில் கண்விழித்த உடன் இந்த செடியில் உள்ள இலைகளை ஒரு முறை தொட்டு, அவை சுருங்குவதை பார்த்து அதற்கு நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். வாழ்வாதாரம் அதிகரித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM