1991ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வரவுசெலவுத்திட்ட இலக்குகளை எட்டத் தவறியதன் காரணமாக வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளது என வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு நேற்று முன்தினம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் கூடியது. இதன்போது, வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு தமது அறிக்கை தொடர்பான அறிமுகத்தை வழங்கினர்.
அந்த அறிக்கையின் நோக்கங்கள் மற்றும் இலங்கையின் வரவு செலவுத்திட்ட செயல்முறையின் பின்னணியை முன்வைத்து, 2024 வரவு செலவுத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
1991ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வரவுசெலவுத்திட்ட இலக்குகளை எட்டத் தவறியதன் காரணமாக வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2023 வரவுசெலவுத்திட்டத்தின் வருமான இலக்கு, சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான வரி விகிதங்களின் அதிகரிப்பு மூலம் சேகரிக்க எதிர்பார்க்கப்படும் வருமானம் பற்றிய தரவுகள் இந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.
பெறுமதி சேர் வரியின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் யதார்த்தமானதா என கணக்கெடுக்குமாறும் 2022 - 2024 காலப்பகுதியில் காணப்பட்ட பணவீக்கம் அரச வருமானத்துக்கு ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான அறிக்கை ஒன்றை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்குமாறு வெரிடே ரிசேர்ச் ஆய்வு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், அரசினால் முன்மொழியப்பட்டுள்ள சொத்துக்கள் வரி தொடர்பான ஆய்வறிக்கையொன்றும் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, அவிசாவளை பகுதியில் வசிக்கும் 5 மனுதாரர்கள் முன்வைத்த மனு தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடிநீர் சேறு கலந்த நீராக இருப்பது தொடர்பில் பரிசீலனை செய்வது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அவிசாவளை நிலையத்தினால் அவிசாவளை மற்றும் தல்துவ மக்களுக்கு 29 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் குடிநீர் மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுவது புலப்பட்டது. இதனால் 8,752 நீர் இணைப்புக்களில் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புலப்பட்டது.
சீதாவாக்க ஆற்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் முறையற்ற இரத்தினக்கல் அகழ்வு காரணமாக நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு பழுதடைந்துள்ளதால் இந்த நிலைமை உருவெடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. இந்த நிலைமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தி, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதா என குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, பொலிஸ் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தாலும் அதற்கு முறையான தீர்வொன்று வழங்கப்படவில்லை என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதன்போது தெரிவித்தது.
தற்போதைய நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு 50 வருடங்கள் பழைமையானது என்பதால் புதிய நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பொன்றுக்கு (1,600 மில்லியன் ரூபாய்) முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இன்னும் விலை மனு கோரல் இடம்பெறவில்லை எனவும் இதன்போது புலப்பட்டது. அந்த முழுமையான செயற்பாட்டை பூர்த்தி செய்வதற்கு சுமார் 2 வருடங்கள் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தற்போது நீரைப் பெரும் இடத்துக்கு 500 மீட்டர் அளவு உயர்வான பகுதியிலிருந்து நீரைப் பெற முடியுமானால் இதற்குத் தீர்வாக அமையும் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இரண்டு வருடங்களான செயற்பாட்டை ஆரம்பிக்கும் போது தற்போதைய கட்டமைப்பை இரண்டு வாரங்களுக்கு மூடிவைக்க வேண்டி ஏற்படுவதால், அந்தக் காலப்பகுதியில் நீரைப் பெற்றுக்கொள்வதற்கு தற்காலிக மாற்றீட்டை கண்டறியுமாறு குழுவின் தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஆலோசனை வழங்கினார். அதற்கு கலட்டுவான பகுதியில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மற்றுமொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
அதற்கு மேலாதிக்கம், உத்தேச நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புக்கு மாற்றீடாக கொண்டுவரக்கூடிய குறைந்த செலவிலான வேலைத்திட்டத்தின் அண்ணளவான செலவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புக்கு அறிவித்த குழுவின் தலைவர், தற்பொழுது 1,600 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டு, விலை மனு கோருவதற்கு தயாராகவுள்ள நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் காலம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM