சிரியாவில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரசாயனத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரசாயன வாயுவை சுவாசித்த பலரும் மூச்சடைத்தும், சுய நினைவிழந்தும் விழுந்து மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலரது வாயிலும் நுரை தள்ளியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்ட பல குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் விமானம் மூலமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இத்தாக்குதலால் மேலும் 60 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், இத்தாக்குதலை சிரிய இராணுவம் மேற்கொண்டதா, ரஷ்ய இராணுவம் மேற்கொண்டதா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, டமஸ்கஸ் வட்டாரங்கள் இச்செய்தியை கடுமையாக மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.