பலவான்கள் இந்தியா - ஆஸி. மோதும் போட்டி இன்று; பங்களாதேஷ - ஆப்கான் நாளை சந்திக்கின்றன

Published By: Vishnu

24 Jun, 2024 | 07:36 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளை ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளில் எதிர்த்தாடப் போகும் இரண்டு அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் குழு 1க்கான சுப்பர் 8 போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.

இக் குழுவில் முதல் இரண்டு இடங்களில் உள்ள பலவான்களான   இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன.

இதுவரை எந்தவொரு உலகக் கிண்ண அரை இறுதியிலும்  விளையாடமல் இருக்கும் ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும் முதல் தடவையாக அரை இறுதிக்கு முன்னேறும் குறிக்கோளுடன் சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நாளைக் காலை ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளன.

இந் நிலையில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டி மழையினால் கைவிடப்படலாம் என அஞ்சப்படுகிறது. போட்டி கைவிடப்பட்டால் முன்னாள் சம்பியன் அவுஸ்திரேலியா சுப்பர் 8 சுற்றுடன் வெளியேற நேரிடும். இந்தியா 3ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறுவதாக இருந்தால்  பெரிய நிகர ஓட்ட வேகத்துடன் இந்தியாவை வெற்றிகொள்ள வேண்டும்.

அதேவேளை, பங்களாதேஷிடம் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைய வேண்டும். அல்லது குறைந்த நிகர ஓட்ட வேகத்துடன் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறவேண்டும்.

ஒருவேளை, அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தால் அல்லது அவுஸ்திரேலியாவைவிட மிகச் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறும்.

அவுஸ்திரெலியா தோல்வி அடைந்து ஆப்கானிஸ்தானை அதிகூடிய நிகர ஓட்ட வேகத்துடன் பங்களாதேஷ் வெற்றிகொண்டால் பங்களாதேஷுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை இந்தியா தோல்வி அடைந்து அவுஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

எனவே இந்த இரண்டு சுப்பர் 8 போட்டிகளும் நான்கு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்தவையாக அமையுவுள்ளன.

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இரண்டு அணிகளும் தத்தமது நிலைகளை நன்கு அறிந்துள்ளதால் ஒன்றையொன்று வெற்றிகொள்வதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்பது உறுதி. .

இந்தியா தோல்வி அடையாத அணியாக இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.

மறுபுறத்தில் ஆப்கானிஸ்தானிடம் அடைந்த முற்றிலும் எதிர்பாராத தோல்வியினால் இன்றைய போட்டியை அவுஸ்திரேலியா அழுத்தத்திற்கு மத்தியில் எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ணத்தில் சந்தித்துக்கொண்ட 5 சந்தர்ப்பங்களில் 3 - 2 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

எனினும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண (50 ஓவர்) இறுதிப் போட்டியில் போன்று ட்ரவிஸ் ஹெட், இன்றைய போட்டியிலும் நுட்பத்திறனுடன் துடுப்பெடுத்தாடினால் அது இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும்.

இந்த இரண்டு அணிகளிலும் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள் என்பதால் ஒவ்வொருவரும் மற்றையவரின் பலம், பலவீனத்தை நன்கு அறிந்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே இன்றைய போட்டி முழுமையாக விளையாடப்பட்டால் கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்) விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், ரவிந்த்ர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா.

அவுஸ்திரேலியா: ட்ரவிஸ் ஹெட், டேவிட் வோர்னர், மிச்செல் மாஷ் (தலைவர்), க்லென் மெக்ஸ்வெல், மாக்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டாக் அல்லது ஏஷ்டன் அகார், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான்

ஆசிய நாடுகளான பங்களாதேஷும் ஆப்கானிஸ்தானும் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவது தடவையாக சந்திக்கவுள்ளன.

2014இல் தனது சொந்த நாட்டில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தானை பங்களாதேஷ் மிக இலகுவாக 9 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது.

ஆனால், இந்த பத்து வருடங்களில் ஆப்கானிஸ்தான் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளதுடன் பங்களாதேஷ் பின்னடைவு கண்டுள்ளது.

இன்று இரவு நடைபெறவுள்ள போட்டி முடிவை அறிந்த நாடுகளாக நாளைய போட்டியில் பங்களாதேஷும் ஆப்கானிஸ்தானும் சந்திக்கவுள்ளதால் இரண்டு அணிகளும் நன்கு திட்டமிட்டு விளையாடும்.

நடப்பு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷைவிட பலசாலியாகத் தென்படும் ஆப்கானிஸ்தான், சகலதுறைகளிலும் பிரகாசித்துவந்துள்ளது.

எனினும், இரண்டு அணிகளுக்கும் அரை இறுதிக்கு செல்ல முடியாமல் போகும் பட்சத்தில் கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றோம் என்ற திருப்தியுடன் நாடு திரும்ப விரும்பும். ஆகையால், அவை இரண்டும் வெற்றிக்காக கடைசிவரை போராடும்.

அணிகள்

பங்களாதேஷ்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), ரிஷாத் ஹொசெய்ன், தௌஹித் ரிதோய், ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அஹ்மத், தன்ஸிம் ஹசன் சக்கிப், முஸ்தாபிஸுர் ரஹ்மான்.

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், கரிம் ஜனத், ரஷித் கான் (தலைவர்), மொஹமத் நபி, குல்பாதின் நய்ப், நஜிபுல்லா ஸத்ரான் அல்லது நங்கேயாலியா கரோட், நூர் அஹ்மத், நவீன் உல் ஹக், பஸால்ஹக் பாறூக்கி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29
news-image

ஹேல்ஸ், பானுக்க அசத்தலான துடுப்பாட்டம்; கண்டி ...

2024-07-11 00:12:14
news-image

இலங்கையை 88-44 என்ற புள்ளிகள் கணக்கில்...

2024-07-10 23:56:19
news-image

ரைலி ரூசோவ் அபார சதம் குவிப்பு;...

2024-07-10 19:43:10
news-image

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு...

2024-07-10 16:28:07
news-image

7ஆவது அகில இலங்கை வில்லாளர் போட்டியில்...

2024-07-10 16:27:20