பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு பிணைக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Image result for суд дела

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த போதும், விசாரணை செய்யும் நீதிபதிகளில் ஒருவர் இன்று சமூகமளிக்காமை காரணமாக இந்த மனுவின் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுவின் பிரதிவாதியான சட்டமா அதிபர் எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, தமக்கு பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் 90 மில்லியன் ரூபா இழப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.