வடக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நல்லூர்ப் பிரகடனம் என்றதொரு பிரகடனம் இன்றையதினம் நல்லூர் ஆலய முன்றலில் வைத்து வெளியிடப்படவுள்ளது.

வட மாகாணத்தில் பல இடங்களிலும் தனியாருக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் வடக்கில் பாரிய பிரச்சனையாகவே தற்போது காணப்படுகின்றது.

இதே வேளை மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களிலும் மற்றும் முகாம்களிலும்  உள்ள மக்களின் இன்றைய நிலைமைகள் மிக மன வேதனையை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இந் நிலையில் அவர்களின் உண்மை நிலைமைகளை எடுத்தியம்புவதையும் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலுமே இந்தப் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இன்று பிழற்பகல் 3 மணியளவில் நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதாக  மேற்படி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.