தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் ஒன்று ஹப்புத்தள ககாகொல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ககாகொல்லை தோட்டத்தைச் சேர்ந்த 52 வயதுடைய  சின்னையா சாரதா என்ற மூன்று பிள்ளைகளின் தாயே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேற்படி தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் 55 பேர் மலைப்பாங்கான இடமொன்றில் தேயிலை பறித்துக்கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் குறித்த மலைப் பகுதியில் வேலை முடிவடைந்ததும் மற்றுமொரு இடத்திற்கு தொழிலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது பெண் தொழிலாளர் ஒருவர் மலையிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனை ஏனைய தொழிலாளர்கள், மேற்பார்வையாளரும் அவதானிக்கவில்லை. வேலை முடிந்து அனைவரும் வீடு திரும்பிய போதும் தனது மனைவி வீட்டுக்கு வராததையடுத்து உறவினர்கள் குறித்த மலைப்பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர்.

இதன்போது குறித்தப் பெண் கையில் தேயிலை கொழுந்துடன் உயிரிழந்த நிலையில் கீழே கிடந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹப்புத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளரும், பதுளை மாவட்ட எம்.பியுமான வடிவேல் சுரேஷ்,

குறித்தப் பெண்ணின் மரணத்திற்கு முழுப்பொறுப்பையும் தோட்ட நிருவாகம் பொறுப்பேற்க வேண்டும். ஒரு தோட்ட தேயிலை மலையிலிருந்து  பிறிதொரு தோட்ட தேயிலை  மலைக்கு தொழிலாளர்கள் மாற்றப்படும்போது , தொழிலாளர்கள் அனைவரும்  சென்றுவிட்டனரா என்று கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். அதனை தோட்ட கள மேற்பார்வையாளர் மேற்கொள்ளவில்லை.

 மாலை தொழிலாளர்கள் வீடு சென்றபோது, குறிப்பிட்ட பெண் தொழிலாளி வீட்டிற்கு வராததைக் கண்டு, அவரது குடும்பத்தாரே அவரைத் தேடியுள்ளனர். இத்தகைய கவலையீனத்துடனேயே , பொறுப்பற்ற வகையில்  தோட்ட நிருவாகம் இருந்துள்ளது.

 இறந்த பெண் தொழிலாளிக்கு உரிய நஷ்ட ஈட்டை தோட்ட நிருவாகம் வழங்குவதுடன், அவது மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தேவையான அனைத்து  செயல்பாடுகளையும் தோட்ட நிருவாகம் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் இறந்த பெண்ணின் அனைத்து இறுதிக்கிரியைகளுக்கான முழுச்செலவினையும் தோட்ட நிருவாகம் பொறுப்பேற்க வேண்டும்.

 55 தொழிலாளர்களுக்கு  ஒரு கள மேற்பார்வையாளர் நியமித்திருந்தமையும் பிழையான செயலாகும். 25 தொழிலாளர்களுக்கே ஒரு கள மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டியது நியதியாகும். இத்தகைய தொழிற்சட்டத்தையும் தோட்ட நிருவாகம்  மீறியுள்ளது.

தோட்ட நிருவாகங்களின் மனித உரிமை மீறலுக்கும், அடாவடித்தனத்திற்கும், ககாகொல்லை தோட்ட சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.