சட்டத்தை மதிக்காது பெரும்பான்மை இன பௌத்தர்களுக்குத் துணை நிற்கும் அரச இயந்திரங்கள்

24 Jun, 2024 | 03:01 PM
image

விஜயரத்தினம் சரவணன்  

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மையினப் பௌத்தர்கள் நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. 

குருந்தூர் மலையில் எவ்வித மதம் சார்ந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என நீதிமன்றம் கட்டளைகளைப் பிறப்பித்தபோதும் அந்த நீதிமன்றக் கட்டளைகளை பல தடவைகள் மீறி, பெரும்பான்மையின பௌத்தர்களால் பாரிய அளவில் பௌத்த விகாரை குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அந்த விகாரை அகற்றப்பட வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அந்த விகாரையை உடைத்தால் இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படுமென பெரும்பான்மையின பௌத்தர்களின் பக்கம் துணை நின்று சட்டமா அதிபர் திணைக்களம் வாதிட்டு, சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றவிடாமல் பாதுகாத்தனர்.

இதேபோல குருந்தூர் மலையில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் உரிய அரச திணைக்களங்களுக்கும், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருக்கும் பொலிஸாருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களும் குருந்தூர் மலையில் பாதுகாப்பு கடமையிலிருக்கும் பொலிஸாரும் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை நிற்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், 31ஆம் திகதியன்று பிறப்பித்த கட்டளையில், நீதிமன்றக் கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருப்பதாகவும், எனினும் நீதிமன்றத்தால் இதற்கு முன் வழங்கப்பட்ட கட்டளைகளை குறித்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவர பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்தாகவும் முல்லைத்தீவு நீதிமன்றம் அந்தக் கட்டளையில் சுட்டிக்காட்டியிருந்தமையையும் இதில் முக்கியமாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்நிலையில் தற்போதும் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசத்தில் மரங்கள் வெட்டப்படுதல், தீ மூட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் பெரும்பான்மையின பௌத்தர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக தீ மூட்டி வழிபாடுகளை மேற்கொண்டபோது, பெரும்பான்மையின பௌத்த துறவிகளாலும், பொலிஸாராலும், தொல்லியல் திணைக்களத்தினராலும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் தற்போது பெரும்பான்மையின பௌத்தர்கள் குருந்தூர் மலை தொல்லியல் பகுதிக்குள், எவ்வித தொல்லியல் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாது தீ மூட்டுதல் மற்றும் மரங்களை வெட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். ஆனால், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொல்லியல் திணைக்களமோ, வனவளத் திணைக்களமோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

இவ்வாறாக குருந்தூர் மலை விவகாரத்திலே பெரும்பான்மையின பௌத்தர்கள் நீதிமன்றக்கட்டளைகளையும் சட்டங்களையும் மீறுகின்ற வகையில் செயற்படுகின்றனர்.

நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவேண்டிய தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட அரச இயந்திரங்கள், மாறாக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பெரும்பான்மையின பௌத்தர்களுக்குத் துணைநிற்கின்றன.

அதேவேளை நீதிமன்றக் கட்டளைகளைப் பின்பற்றி, சட்ட திட்டங்களையும் நிபந்தனைகளயும் ஏற்று அதன்படி செயற்படுகின்ற தமிழ் மக்களின் வழிபாடுகளுக்கு பெரும்பான்மையின பௌத்தர்களால் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

தமிழ் மக்களின் வழிபாடுகளைக் குழப்புவதற்கு பெரும்பன்மையின பௌத்தர்களுடன் இந்த அரச இயந்திரங்களும் உடந்தையாகச் செயற்படுகின்றன.

இவ்வாறாக நீதிமன்றக் கட்டளைகளையோ, சட்டங்களையோ சற்றும் பொருட்படுத்தாத பெரும்பான்மையின பௌத்தர்களுடன் அரச இயந்திரங்களும் இணைந்துகொண்டு, தமிழர்களை வஞ்சிக்கின்ற செயற்பாடுகளே இங்கு இடம்பெறுகின்றன.

இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, அரச இயந்திரங்களின் ஒத்துழைப்புடன் விகாரை கட்டப்பட்ட வரலாறு

முல்லைத்தீவு நீதிமன்றம் குருந்தூர் மலையில் மதம் சார்ந்த கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என வழக்கின் ஆரம்பத்திலேயே கட்டளை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு நீதமன்றில் அனுமதியைப் பெற்றது.

இவ்வாறு அகழ்வாய்வுப் பணிக்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அகழ்வாய்வு இடம்பெறும் பகுதிக்குள் எவரும் நுழைய முடியாதெனத் தெரிவித்து, குருந்தூர் மலை வளாகத்தினுள் தமிழ்த் தரப்பை நுழையவிடாது தடுத்துவைத்துக்கொண்டு, தந்திரமான முறையிலே நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் பாரிய பௌத்த விகாரை கட்டி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு கலசம் ஒன்றை நிறுவுவதற்கும், 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் மக்களுக்கு தகவல்கள் கிடைத்தன.

இவ்வாறு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்காக தமிழ் மக்கள் அங்கு சென்றபோது, அங்கு பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் குருந்தூர் மலை தொடர்பான வழக்கிலக்கம் AR/673/18 இல் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, குருந்தூர் மலையில் எந்தத் தரப்புக்களும் கட்டுமானங்கள் எவற்றினையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த பிற்பாடும் அங்கு தொடர்ந்தும் பௌத்த கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.

அத்தோடு அவ்வாறு குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

அதற்கமைய இந்த வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி அன்று, குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி, குருந்தூர் மலை தொடர்பான வழக்கின் மீது சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகைதந்த சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்ற முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருப்பதானது இனங்களுக்கிடையில் சமாதானக்குலைவினை ஏற்படுத்துமென சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகைதந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர்.

சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த நீதவான், அன்றைய தினமே உடனடியாக குருந்தூர் மலைக்குச் சென்று கள விஜயம் செய்யத் தீர்மானித்தார்.

அதனடிப்படையில் குருந்தூர் மலைக்கு கள விஜயம் செய்த நீதவான் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வுசெய்து, குறிப்புக்களை எடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பில் கட்டளை வழங்கிய நீதிபதி, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்கு மேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதெனவும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று கட்டளை பிறப்பித்திருந்தார்.

எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின்போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் கள விஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023 அன்றைய தினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023 அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு குருந்தூர் மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு கடந்த 2023 ஜூலை மாதம், 04ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மீண்டும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கள விஜயத்தின்போது குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மேம்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிபதியால் ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கைகளை நீதிமன்றின் முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்புக்கள் நீதிமன்றில் முன்னிலையாகி இது தொடர்பிலான தமது விளங்கங்களை நீதிமன்றுக்கு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து தரப்புக்களினதும் விளங்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து நீதிமன்றம் குறித்த வழக்கின் கட்டளை வழங்குவதற்காக கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், 31ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, குறித்த திகதியில் இந்த வழக்கு கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் குருந்தூர் மலைக்கு மேற்கொண்ட கள விஜயம் மற்றும் கடந்த 2023 ஜூலை மாதம் 04ஆம் திகதி நீதவானால் மேற்கொள்ளப்பட்ட கள விஜயம் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த வழக்குக்கான கட்டளைகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் இக்கட்டளையில் ஏற்கனவே நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

அத்தோடு நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு விரோதமாக குருந்தூர் மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதி களவிஜயத்தின்போது நீதிமன்றம் அவதானித்த கல்லொன்று, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி அங்கு இருக்கவில்லை எனவும், அதேபோல அங்கு புதிதாக பெயர்ப்பலகை ஒன்று அவதானிக்கப்பட்டதாகவும், அதனை போல இன்னும் பல விடயங்களையும் இரண்டாவது கள விஜயத்தின்போது அவதானிக்க முடிந்ததாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியது.

குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்தில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருப்பதாகவும், எனினும் நீதிமன்றத்தால் இதற்கு முன் வழங்கப்பட்ட கட்டளைகள் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கட்டளையாக்கியிருந்தது.

இவ்வாறாகத்தான் குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு, சட்டவிரோதமாக பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் அரச இயந்திரங்களின் ஒத்துழைப்புடன் தொடரும் சட்ட மீறல்கள் 

குறிப்பாக கடந்த 2024.06.20ஆம் திகதி மிகிந்தலையிலிருந்து, பௌத்த துறவிகள் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து 200க்கும் மேற்பட்டோர் பாத யாத்திரையாக குருந்தூர் மலைக்கு வருகைதந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருற்தனர்.

இந்நிலையில் மறுநாளான ஜூன் 21ஆம் திகதி வெள்ளிக்கழமை பொசன் தினத்தன்று குருந்தூர் மலைப்பகுதிக்கு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற ஊடகவியலாளர்களது விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், தொடர்ந்து பொலிசாரின் கண்காணிப்பிலேயே செய்திசேகரிக்க அனுமதிக்கப்பட்டது.

அங்கு பொசன் தினத்தில் பல பெரும்பான்மை இனத்தவர்கள் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் தமது வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.

அதேவேளை குறித்த தொல்லியல் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதையும், சில வெட்டப்பட்ட மரங்களில் தீமூட்டப்பட்டிருப்பதையும் மேலும் அவதானிக்கமூடிந்தது.

அத்தோடு குறித்த தொல்லியல் பகுதியில் தகரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் தங்கியிருந்தமைக்கான தடையங்களும் தென்பட்டன. இருப்பினும் ஊடகவியலாளர்கள் அங்கு சென்றபோது எவரும் இருக்கவில்லை.

அதுதவிர தொல்லியல் பகுதியில் கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படுகின்ற 'மட்டக்கம்பு' என்று சொல்லப்படுகின்ற ஒரு பொருள் சீமெந்துக் கலவை பட்டு உலர்ந்த நிலையிலும் காணப்பட்டது.

எனவே மரம் வெட்டுதல், தீ மூட்டுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளையும் தாண்டி, அங்கு வேறு ஏதேனும் கட்டட வேலைகள்  இடம்பெறுகின்றனவா என்கின்ற வலுவான சந்தேகமும் எழுகின்றது.

இந்நிலையில், இத்தகைய சட்டமீறல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களை கண்காணிக்க வந்திருந்த பொலிஸாரிடம் வினவியபோது, மரம் வெட்டப்பட்டுள்ளமை மற்றும் தீ மூட்டப்பட்டுள்ளமை முதலான சம்பவங்கள் சட்டமீறல் செயற்பாடுகள் என ஏற்றுக்கொண்ட அவர், இது தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

பொலிஸாரின் இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை. அங்கு பாதுகாப்புக் கடமையில் இருக்கும் பொலிஸார் தமக்கு எதுவும் தெரியாது எனக் கைவிரிப்பது அவர்களுடைய பொறுப்பற்ற செயற்பாட்டை காட்டுகிறது.

அத்தோடு பொலிஸார் இந்த சட்டமீறல் செயற்பாட்டுக்கு துணை நிற்கின்றார்கள் என்பதையும் உறுதிசெய்வதாக அமைகின்றது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் தண்டனை வழங்கப்படுமென வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குற்றச்செயல்களுக்கு நடவடிக்கை எடுக்காத அரச இயந்திரங்கள்.

குருந்தூர் மலை தொல்லியல் பகுதி வளாகத்தில் பல்வேறு செயற்பாடுகளை செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அங்கு தொல்லியல் திணைக்களத்தினால் மும்மொழிகளிலுமான அறிவிப்புப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இந்த இடத்துக்குரிய காணி நிலத்தைச் சுத்தம் செய்தல், மரம் வெட்டுதல், தீ மூட்டுதல், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுதல், அகழ்வு செய்தல், கல் உடைத்தல், வேலி அடைத்தல், குடியேறுதல், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுதல், இவ்விடத்தில் காணப்படுகின்ற தொல் பொருட்களுக்கு பாதுகாப்பின் நிமித்தம் அமைக்கப்பட்டுள்ள வேலிகள், எல்லைக்கற்கள், அறிவித்தல் பலகை என்பவற்றை சேதப்படுத்துதல், மாற்றம் செய்தல், இடத்தை மாற்றுதல், களவு செய்தல் அழிவடையச்செய்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது.

அத்தோடு இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டால் தொல்பொருளியல் சட்டத்தின் பிரகாரம் பிணை வழங்கமுடியாத பாரிய குற்றமாவதுடன், இக்குற்றங்களில் ஈடுபட்டால் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தண்டப்பணம் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படுமென குறித்த அறிவிப்புப் பலகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரம் வெட்டுதல், தீ மூட்டுதல் ஆகிய குற்றச்செயல்கள் அங்கு இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் இன்னும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தரப்பினர், அந்தப் பொறுப்பிலிருந்து விலகி நிற்பதாலும், குற்றவாளிகளுக்குத் துணை நிற்பதாலுமே இந்த குற்றச் செயல்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்கிற தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள்.

குருந்தூர் மலை விவகாரத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்தாது அவர்களுக்குத் துணைநிற்கும் அரச இயந்திரங்கள், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கின்ற தமிழர்களின் சைவ வழிபாடுகளுக்கு பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்து குழப்பத்தை விளைவிக்கின்றனர். இந்த விடயத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

குருந்தூர் மலையில் கடந்த 14.07.2023 அன்று நீதிமன்றத்தின் அனுமதியுடனும், தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவும் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்குவதற்காக மூட்டியபோது, தொல்லியல் மற்றும் வனப்பகுதிக்குள் தீ மூட்ட முடியாதென சில பௌத்த துறவிகளாலும், பொலிஸாராலும் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

குழப்பங்களையும் மீறி தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக பொங்கலுக்காகத் தீ மூட்டியபோது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்வாறு பொங்கலுக்காக மூட்டிய தீயை சப்பாத்துக் கால்களால் மிதித்து அணைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தது. இது ஒரு மத நிந்தனைச் செயற்பாடு என சைவமக்கள் அப்போது இதுகுறித்து கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் வழிபாட்டை நடைபெறவிடாது தமிழ் மக்கள் அடித்துத் துரத்தப்பட்டனர்.

அதில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள், தமிழ் ஊடகவியலாளர்கள் என அனைவரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவலம் அங்கே நடந்தேறியது.

பின்னர் இதுகுறித்து முல்லைத்தீவு நீதிமன்றம் பொலிஸாரிடம் வினவியபோது, இனங்களுக்கிடையில் சமாதானக் குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பொங்கல் விழாவை நடத்தவிடாமல் தடுத்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்த விடயத்தில் பொலிஸார் நீதிமன்றுக்கு கூறிய அந்த விடயம், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம் இல்லை.

ஏனெனில் நீதிமன்ற அனுமதியுடன், முறையான சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றியே தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாட்டை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இவ்வாறு நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது. அத்தோடு அங்கு குழப்பம் விளைவிக்கப்பட்டால், அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை பொலிஸார் கைதுசெய்திருக்கவேண்டும்.

ஆனால் இங்கு பொலிஸார் குழப்பங்களை ஏற்படுத்திய பெரும்பான்மை இனப் பௌத்தர்களுடன் இணைந்துகொண்டு தமிழ் மக்களைத் தாக்கி, வழிபடவிடாது அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது ஏற்புடைய நடவடிக்கையல்ல. இது தமிழ் மக்களைத் திட்டமிட்டு வஞ்சிக்கின்ற ஒரு செயற்பாடாகும்.

அதனைத் தொடர்ந்து குருந்தூர் மலையில் கடந்த 18.08.2023அன்று குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆல யநிர்வாகத்தினரால் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் பொங்கல் வழிபாடொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பொங்கல் வழிபாடு இடம்பெற்றால் இனங்களுக்கிடையில் சமாதானக் குலைவு ஏற்படுமெனத் தெரிவித்து அந்த பொங்கல் வழிபாட்டிற்கு நீதிமன்றிடம் பொலிஸார் தடை உத்தரவைக் கோரியிருந்தனர். எனினும் நீதிமன்றம் அந்தத் தடை உத்தரவை நிராகரித்திருந்தது.

இத்தோடு அரச இயந்திரங்கள் தமது தமிழ் மக்கள் மீதான வஞ்சனைச் செயற்பாட்டை நிறுத்தவில்லை. தொடர்ந்து இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பொங்கல் வழிபாடுகளுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர்.ஜி. ஜயதிலக பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.

அந்த நிபந்தனைகளில் முக்கியமாக குருந்தூர் மலையின் நிலம் மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திறந்த வெளியில் இரும்புத் தகடு வைத்து அதன் மீது தொல்பொருள் அல்லாத கற்களை பயன்படுத்தி அடுப்பினை தயார் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு தீ மூட்டும்போது வன பாதுகாப்பு துறையின் சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நிலம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நினைவுச் சின்னங்களிலிருந்து விலகி தொல்லியல் துறை அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படும் இடத்தை பொங்கல் வழிபாட்டிற்கு பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறாக நீதிமன்ற அனுமதியோடு, தொல்லியல் திணைக்கள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இடம்பெற்ற இந்த பொங்கல் வழிபாட்டும் பௌத்த துறவிகளில் குழப்ப முயற்சிகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது.

இவ்வாறாக நீதிமன்றம் விடுக்கின்ற கட்டளைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்ற தரப்புக்கள் பெரும்பான்மையின பௌத்தர்களுக்குச் சார்பாகவும், தமிழ் மக்களை வஞ்சிக்கின்ற வகையிலும் செயற்படுகின்றனர்.

தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிற அவலம் தீரவேண்டும்

குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒரு விதமாகவும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு வேறொரு விதமாகவும் அரச இயந்திரங்களால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவலம் தீரவேண்டும்.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்ற அந்த அவலநிலை நிலை மாறவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும்...

2025-03-15 09:52:48
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு...

2025-03-14 20:24:33
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் வீடுகளை களனிபொலிஸின்...

2025-03-14 12:22:27
news-image

தொந்தரவு தரும் மீனவர் தகராறுக்கு தீர்வு...

2025-03-14 08:57:28
news-image

அரசாங்கம் அதன் மந்தவேகத்துக்கு விளக்கம் தரவேண்டியது...

2025-03-13 14:14:51
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவை 58...

2025-03-12 13:39:38
news-image

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?-

2025-03-11 16:44:44
news-image

அட்லாண்டிக்கில் ஏற்படும் பிளவு

2025-03-11 12:02:06
news-image

அண்ணாவையும் எம்.ஜி. ஆரையும் போன்று தன்னாலும்...

2025-03-11 09:26:14
news-image

தடைகள் தகர்க்கப்படுகின்றனவா அல்லது சுவர்கள் எழுப்பப்படுகின்றனவா?

2025-03-10 19:13:31
news-image

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் மருத்துவர் தன்மீதான...

2025-03-10 13:35:49
news-image

வனவளத் திணைக்கள அதிகாரிகள் வாகரையில் பற்றவைத்த...

2025-03-09 16:15:23